தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து சரத் பவார் திடீரென இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். அவரது ராஜினாமாவுக்கு உண்மையான காரணம் என்னவென்று சொல்லப்படாவிட்டாலும், அஜித் பவாருடனான அதிகாரப்போட்டிதான் காரணம் என்று கூறப்படுகிறது. சரத் பவாரின் ராஜினாமா குறித்துப் பேசிய அஜித் பவார், ``கட்சித் தொண்டர்கள் இந்த விவகாரத்தில் உணர்ச்சிவசப்படவேண்டிய அவசியம் இல்லை. சரத் பவாரிடம் ராஜினாமாவைத் திரும்பப் பெறும்படி கட்சித் தொண்டர்கள் கேட்க வேண்டாம். காங்கிரஸ் கட்சியைப்போல தேசியவாத காங்கிரஸ் செயல்படும்.

அடுத்த தலைவர் யாராக இருந்தாலும், அவருக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம். சரத் பவாரின் வழிகாட்டுதலில் புதிய தலைவர் செயல்படுவார். வழக்கமாக எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், அனைவரிடமும் கலந்தாலோசிப்பார். சரத் பவாரின் ராஜினாமா முடிவு எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் என்ற குடும்பத்தின் தலைவராக தொடர்ந்து இருப்பார். சில நேரங்களில் நேரத்தின் தன்மைக்குத் தக்கபடி முடிவு எடுக்கப்பட வேண்டும். சரத் பவார் மகாராஷ்டிரா மற்றும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.
அவரது வழிகாட்டுதல் எப்போதும் எங்களுக்கு இருக்கும். அவரது வழிகாட்டுதலின் பேரில் ஒவ்வொரு முடிவும் எடுக்கப்படும். இதில் உணர்ச்சிவசப்படவேண்டிய அவசியம் இல்லை. அவர் ராஜினாமா செய்யப்போகிறார். சரத் பவாரின் பேச்சைக் கேட்கும்படி நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். கட்சித் தலைமையில் மாற்றம் தேவை என்று கடந்த சில நாள்களுக்கு முன்பு சரத் பவாரே தெரிவித்திருந்தார். அவரது உடல்நலம் மற்றும் வயதைக் கருத்தில்கொண்டு அவரது ராஜினாமா முடிவைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப முடிவு எடுக்கப்பட வேண்டும்.
பவார் சாஹேப் ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அதைத் திரும்பப் பெற மாட்டார்" என்று தெரிவித்தார். ``சரத் பவாரின் முடிவை மாற்ற சுப்ரியா சுலே அவருடன் பேச வேண்டும்" என்று கட்சித் தொண்டர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து சரத் பவாரிடம் கேட்டதற்கு, ``போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொண்டர்களுடன் நான் இருக்கிறேன். ஆனால் கட்சித் தலைவராக இருக்க மாட்டேன்" என்றார். சரத் பவாரின் ராஜினாமா முடிவைக் கேட்டு, கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் அழுதுவிட்டார்.
1967-ம் ஆண்டு சரத் பவார் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1999-ம் ஆண்டு சரத் பவார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். அரசியல் மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் சரத் பவார் இருந்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் ஆகியவற்றின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.