Published:Updated:

`நான்கே நாளில் அஜித் பவார் ராஜினாமா?' - மகாராஷ்டிர அரசியலில் அடுத்த திருப்பம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவை அடுத்து, முதல்வர் பட்னாவிஸை அவசரமாக சந்தித்தார் துணை முதல் அஜித் பவார்.

அஜித் பவார்
அஜித் பவார் ( twitter )

மகாராஷ்டிராவில் கடந்த 20 நாள்களாக நடந்த அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் திடீர் ட்விஸ்ட்டாக, யாரும் எதிர்பார்க்காத விதமாக பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், என்.சி.பி-யின் அஜித் பவார் துணை முதல்வராகவும் சனிக்கிழமை காலை பதவியேற்றனர். மகாராஷ்ராவில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டதாக முதல்வர் பட்னாவிஸ் கருத்து தெரிவித்தார். ஆனால், இதற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூற மகாராஷ்டிரா அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது.

பட்னாவிஸ் - அஜித் பவார்
பட்னாவிஸ் - அஜித் பவார்

இந்த நிலையில், பா.ஜ.க ஆட்சி அமைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றன சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள். இரண்டு நாள் விவாதத்துக்குப் பிறகு, இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை (27.11.2019) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். மேலும், ரகசிய வாக்கெடுப்பாக அல்லாமல் வெளிப்படையான வாக்கெடுப்பாக இருக்க வேண்டும் எனவும், நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இன்று மாலைக்குள் இடைக்கால சபாநாயகரைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றும், எம்.எல்.ஏ-க்கள் நாளை பதவியேற்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

`நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு; நேரடி ஒளிபரப்பு!'- மகாராஷ்ட்ரா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவை அடுத்து, முதல்வர் பட்னாவிஸை அவசரமாகச் சந்தித்தார், துணை முதல்வர் அஜித் பவார். சந்திப்பின் முடிவில், தற்போது தனது துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் பட்னாவிஸிடம் ராஜினாமா கடிதத்தை அஜித் பவார் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, பட்னாவிஸ் 3.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்னாவிஸ்
பட்னாவிஸ்

பட்னாவிஸும் தனது பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக ஆலோசித்துவருவதாகவும், அதுதொடர்பாகப் பேசுவதற்கே செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. பெரும்பான்மை இல்லாததால் இந்த முடிவுக்கு இருவரும் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பதவியேற்ற நான்கே நாள்களில் தனது பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளார். துணை முதல்வராக அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்வது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பு, அசோக் சவான் அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்தபோது, ஊழல் குற்றச்சாட்டு எழவே, 2012ல் தனது பதவியைத் துறந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து பிரதமர் மோடியும் அமித் ஷா -வும் சந்தித்து, மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்துவருகின்றனர்.

`குடும்ப அரசியல்; ஃபிளாஷ் பேக்!' - பா.ஜ.க வலையில் வீழ்ந்தாரா அஜித் `தாதா' பவார்?