Published:Updated:

`எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!’- பரபரக்கும் மகாராஷ்டிரா அரசியல் பற்றி சரத் பவார்

சரத் பவார்
சரத் பவார்

நிலையான ஆட்சி அமையவே நாங்கள் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தோம் எனத் துணை முதல்வராகப் பதவியேற்றுள்ள அஜித் பவார் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 24-ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பா.ஜ.க சிவசேனா கூட்டணி முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு இந்தக் கூட்டணியில் பதவிமோதல் தலை தூக்கியது. மகாராஷ்டிராவில் எங்களுக்கும் இரண்டரை ஆண்டுகள் ஆட்சி வேண்டும் என சிவசேனா கேட்க, அதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துவந்தது பா.ஜ.க. இந்தச் சண்டை கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி கூட்டணி முறிவு வரை சென்றுவிட்டது.

பாஜக - சிவசேனா
பாஜக - சிவசேனா

மகாராஷ்டிராவில் இந்த முறை எங்கள் ஆட்சிதான் என்ற முடிவில், பா.ஜ.க-வைப் புறம் தள்ளிவிட்டு என்.சி.பி, காங்கிரஸுடன் கூட்டணி வைக்க முன்வந்தது சிவசேனா. சிவசேனாவும் பா.ஜ.க-வும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருப்பவர்கள், இதனால் எந்த நேரமும் சிவசேனா, பா.ஜ.க-வுடன் இணைந்துகொள்ளலாம் என நினைத்த காங்கிரஸ், சிவசேனாவுடன் கூட்டணி வைக்க தயக்கம் காட்டியது. ஆனால், விடாப் பிடியாக ஒற்றைக் காலில் நின்ற சிவசேனா, காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தங்கள் வழிக்குக் கொண்டுவந்தது. இந்த இரு கட்சிகளுக்கும் பாலமாக என்.சி.பி செயல்பட்டு வந்தது. இந்த மூன்று கட்சிகளும் அரசு அமைப்பது தொடர்பாகக் கடந்த ஒரு வாரமாகத் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன.

இதற்கு நடுவே, பா.ஜ.க-வுக்கு பயந்து சிவசேனா தங்கள் எம்.எல்.ஏ-க்களை ஹோட்டலில் தங்கவைத்தது, சரத்பவார் பிரதமரைச் சந்தித்தது, சிவசேனாவின் சஞ்சய் ராவத், சரத் பவாரின் கருத்தை விமர்சித்தது, சரத் பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது, என பல்வேறு தொடர் சம்பவங்கள் அரங்கேறி மகாராஷ்டிராவை எப்போதும் பரபரப்பாக இருக்க வைத்தன.

காங்கிரஸ்- என்.சி.பி- சிவசேனா
காங்கிரஸ்- என்.சி.பி- சிவசேனா

இந்த நிலையில், நேற்று மாலை சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சித் தலைவர்களும் இறுதியாக மும்பையில் சந்தித்துப் பேசினர். இதன் முடியில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருப்பார் என சரத் பவார் தன் வாயாலேயே அறிவித்தார். உத்தவ் தாக்கரேவும் , கூட்டணி கட்சிகளுடனான சந்திப்பு மிகவும் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், இன்று இந்த மூன்று கட்சிகளும் இணைந்து ஆளுநரைச் சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையே, இன்று டெல்லி செல்லவிருந்த மகாராஷ்டிரா ஆளுநர் தன் பயணத்தை திடீரென ரத்து செய்தார். இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கையில், இன்று மகாராஷ்டிரா அரசியல் ஒரு முடிவுக்கு வந்துவிடும், உத்தவ் தாக்கரே முதல்வராகப் போகிறார் என நினைத்து மொத்த அரசியல் வட்டாரங்கள் நேற்று இரவு உறங்கியிருப்பார்கள். ஏன் இன்று அதிகாலை வெளியான பத்திரிகைகளிலும் உத்தவ் தாக்கரேதான் முதல்வர் என்ற செய்தி பதிவாகியிருந்தது.

பட்னாவிஸ்
பட்னாவிஸ்

ஆனால், மொத்த இந்தியாவுக்கும் ஆச்சர்யம் தரும் விதமாக, மிகவும் அமைதியாக யாருக்கும் தெரியாமல் காய் நகர்த்திய பா.ஜ.க, ஒரே இரவில் என்.சி.பி-யுடன் கூட்டணி வைத்து இன்று காலை தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராகப் பதவியும் ஏற்றுக்கொண்டார். துணை முதல்வராக சரத்பவாரின் மருமகன் அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டுள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம் சிவசேனா, காங்கிரஸ் உட்பட மொத்த இந்தியாவையும் மகாராஷ்டிரா பக்கம் திரும்ப வைத்துள்ளது.

அதிர்ச்சி தந்த என்.சி.பி; அமைதியாகக் காய் நகர்த்திய பா.ஜ.க!- மகாராஷ்டிரா முதல்வரானார் பட்னாவிஸ்

தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்ற அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அதில், ``மகாராஷ்டிராவின் முதல்வராகப் பதவியேற்றுள்ள பட்னாவிஸுக்கும், துணை முதல்வராகப் பதவியேற்றுள்ள அஜித்பவாருக்கும் எனது வாழ்த்துகள். மாநிலத்தின் பிரகாசமான எதிர்காலத்துக்காக இவர்கள் இருவரும் இணைந்து விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

``பட்னாவிஸுக்கும், அஜித்பவாருக்கும் எனது வாழ்த்துகள். இந்த அரசாங்கம், மகாராஷ்டிராவின் வளர்ச்சி மற்றும் நலனில் தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என்றும் மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு புதிய பாதை அமைக்கும் என்றும் நான் நம்புகிறேன்” என பா.ஜ.க தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மாகாராஷ்டிராவில் ஏன் திடீர் கூட்டணி ஏற்பட்டது என்பது பற்றி பதவியேற்ற பிறகு பட்னாவிஸும், அஜித்பவாரும் தனித்தனியாகப் பேட்டியளித்துள்ளனர். ``மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சியமைப்பதற்காக பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்த என்.சி.பி-யின் அஜித்பவாருக்கு நன்றி. மக்கள் எங்களுக்குத் தெளிவான முடிவை வழங்கியிருந்தனர். ஆனால், சிவசேனா அதை மீறி மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க முயன்றது. இதன் விளைவாகவே குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. மகாராஷ்டிராவுக்கு ஒரு நிலையான ஆட்சி தேவை `கிச்சடி’ ( பல காய்கறிகள் சேர்ந்த உணவு) தேவையில்லை” என பட்னாவிஸ் கூறியுள்ளார்.

பதவியேற்பு
பதவியேற்பு

அஜித்பவார் பேசுகையில், ``தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் இன்றுவரை எந்தக் கட்சியாலும் அரசாங்கத்தை உருவாக்க முடியவில்லை. மகாராஷ்டிராவில் விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட பல சிக்கல்கள் உள்ளன. எனவே, நாங்கள் நிலையான ஆட்சியை உருவாக்க வேண்டும் என நினைத்தோம்” எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ``அஜித் பவார் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்துள்ளது அவரது தனிப்பட்ட விருப்பம். அதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என பகிரங்கமாக அறிவித்துள்ளார் என்.சி.பி தலைவர் சரத்பவார். திடீர் அரசியல் மாற்றதால் மகாராஷ்டிராவே தலைகீழாக மாறியுள்ளது. பா.ஜ.க, என்.சி.பி கூட்டணி தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு