Election bannerElection banner
Published:Updated:

''அஜித் என் ரோல் மாடல்; விஜய்க்கும் சப்போர்ட்!'' - கலந்துகட்டும் ஹரி நாடார்

ஹரி நாடார்
ஹரி நாடார்

``விஜய் நடித்த 'சர்க்கார்' படத்துக்குப் பிரச்னை ஏற்பட்டபோது, விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவன் நான். தல அஜித், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காவிட்டாலும்கூட அவருடைய மனிதாபிமானம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்'' என்கிறார் ஹரிநாடார்.

வெடவெட தேகம், நீண்ட தலைமுடி, கழுத்து நிறைய கிலோக்கணக்கில் தங்கச் சங்கிலிகள் என வித்தியாச தோற்றத்தில் கவனம் ஈர்ப்பவர் 'பனங்காட்டுப் படை கட்சி'யின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடார்! கட்சியின் சார்பாக ஆலங்குளம் தொகுதியில் களமிறக்கப்பட்டிருக்கும் ஹரி நாடார், பிஸியான தேர்தல் பிரசாரத்துக்கு மத்தியிலும் `2 கே அழகானது காதல்' திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துவருகிறார்.

சினிமாவில் ஆடி முடித்து அரசியலுக்கு வருபவர்கள் மத்தியில் இரண்டு துறைகளிலும் ஒருசேர ஆடிக்கொண்டிருக்கும் ஹரி நாடாரிடம் பேசினேன்...

``குறிப்பாக ஆலங்குளம் தொகுதியைத் தேர்ந்தெடுத்து நீங்கள் போட்டியிடுவதன் பின்னணி என்ன?’’

``நாடார்கள் பெரும்பான்மையாக வசித்துவரக்கூடிய தொகுதிகளில், போட்டியிட்டு எங்கள் தொகுதிகளை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருந்துவருகிறோம். அந்தவகையில்தான் முதற்கட்டமாக ஐந்து வேட்பாளர்களை எங்கள் கட்சி அறிவித்திருக்கிறது. இதில், நான் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுகிறேன். இதுதவிர, நாடார் சமுதாயம் பெரும்பான்மையாக இருக்கும் 40 தொகுதிகளிலும் பனங்காட்டுப் படை கட்சியின் வேட்பாளர்கள் களமிறங்குவதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன!’’

ஹரி நாடார்
ஹரி நாடார்

``நாடார் என்ற பெயர் முத்திரையிலான முரட்டுச் சங்கிலியை அணிந்து வலம்வருவது, வருமான வரித்துறையினரிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் உத்தியா அல்லது சாதிரீதியாக வாக்குகளைக் கவரும் திட்டமா?''

``அண்மையில்தான் என்னை வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். ஆனால், அதற்கும் முன்பாகவே `நாடார்' என்ற பெயர் டிசைனோடு இந்த செயினைச் செய்வதற்கு ஆர்டர் கொடுத்திருந்தேன். செயின் செய்துவர சிறிது காலதாமதம் ஆகிவிட்டது!

சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லிவருகிற எந்த ஓர் அரசியல் கட்சியாவது, ஆதிக்க சாதி பெரும்பான்மையாக இருக்கக்கூடிய தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளரைக் களமிறக்கத் தயாராக இருக்கிறார்களா?''

``மற்ற அரசியல் கட்சியினர் தவறு செய்கிறார்கள்; எனவே, நாங்களும் தவறு செய்வோம் என்கிறீர்களா?’’

``நாங்கள் தவறு செய்கிறோம் என்றே நான் சொல்லவில்லை. ஏனெனில், `பனங்காட்டுப் படை' என்ற இந்த அரசியல் கட்சியே எங்கள் சமுதாய மக்களுக்கான அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், அவர்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்கவும்தான். எங்கள் சமூகத்திலுள்ள பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று மக்களைப் பாதுகாப்பதுதான் எங்கள் நோக்கம். எனவே, பெருமைமிகு வரலாற்றுப் பின்னணிகொண்ட எங்கள் சமுதாயத்தின் பெயரை நான் தூக்கிப்பிடிப்பதில், தவறு இருப்பதாகவே நான் நினைக்கவில்லை!’’

எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்

``தி.மு.க., அ.தி.மு.க என பெரிய அரசியல் கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து சமுதாய அங்கீகாரத்தை வலியுறுத்துவீர்களா?’’

``பெரிய கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு எங்கள் சமுதாய வாக்குகள் மட்டுமே தேவைப்படுகின்றன. எங்கள் சமுதாய எம்.எல்.ஏ-க்களுக்கு உரிய எண்ணிக்கையில் அமைச்சர் பதவிகூட ஒதுக்கப்படுவது இல்லை. எனவே, திராவிடக் கட்சிகளையோ அல்லது தேசிய கட்சிகளையோ நம்பி நாங்கள் இல்லை. முழுக்க முழுக்க நாடார் சமுதாய மக்களை மட்டுமே நாங்கள் நம்புகிறோம். எனவே, பனங்காட்டுப் படை கட்சி, தனித்துதான் தேர்தலைச் சந்திக்கிறது!''

``ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடிய கட்சிகளோடு கூட்டணி சேராமல், எப்படி உங்கள் கோரிக்கையை வலியுறுத்த முடியும்?''

``நாடார்களுக்கென்று உள்ள வாக்குவங்கி பலத்தை தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட பெரிய கட்சிகளுக்கு காட்டியாக வேண்டிய கட்டாயம் எங்களுக்கு உள்ளது. எனவே, நாங்கள் தனித்து நின்று போட்டியிட்டு, எம்.எல்.ஏ-வாக சட்டசபைக்குள் நுழைந்,து எங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்போம்.''

ஹரி நாடார்
ஹரி நாடார்

``யூடியூப் சேனல் வழியே நீங்கள் வெளியிடும் வீடியோக்களுக்கு பதிலடியாக தரக்குறைவாக உங்களை விமர்சித்து வீடியோக்கள் வெளியாகின்றனவே... இதெல்லாம் தேவைதானா?''

``இன்றைக்கு எல்லோர் கையிலும் செல்போன் இருக்கிறது. எல்லோருமே இன்டர்நெட் வழியேதான் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். எனவே, கூடுதல் முன்னுரிமை கொடுத்து நானும் என் சமூகம் சார்ந்த விஷயங்களை யூடியூப் வீடியோக்களின் வழியே பரப்பிவருகிறேன். என் சமூகத்தினரும் என் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறார்கள். ஏனெனில், சமுதாயக் கலவரங்களை உருவாக்கும்வகையில் வன்முறையான கருத்துகளை நான் பதிவிடுவதில்லை. ஆனாலும்கூட என்னைத் தரக்குறைவாக விமர்சிப்பவர்களுக்கு என்னுடைய கருத்துகளில் எது உடன்பாடில்லாமல் போய்விட்டது என்று எனக்குத் தெரியவில்லை!''

``அ.தி.மு.க முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு அடியாள் வேலை பார்த்தவர்தான் ஹரி நாடார் என்கிறார்களே... உண்மையா?''

``ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டத்தில், அவரை எதிர்த்து நாடாளுமன்றத்திலேயே குரல் கொடுத்த ஒரே பெண்மணி சசிகலா புஷ்பா அக்கா. அந்தக் காலகட்டத்தில், அ.தி.மு.க-விலிருந்து அவருக்கு நிறைய மிரட்டல்கள் வந்தன. முட்டை, தக்காளியை எறிந்து அவரை அசிங்கப்படுத்த நினைத்தார்கள். அப்போது, எங்கள் சமுதாயப் பிரச்னைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிவந்த சசிகலா புஷ்பாவுக்கு நாங்களும் சமுதாய அடிப்படையில் பாதுகாப்பாக இருந்தோம். அவ்வளவுதான்!''

சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா

``நீங்கள் ரௌடித்தனம் செய்வதாகவும், இப்போதும் உங்கள் மீது நிறைய வழக்குகள் இருப்பதாகவும் சொல்கிறார்களே..?''

``ரௌடித்தனம் செய்யும் ஆள் நான் இல்லை! ஃபைனான்ஸ் தொழில் செய்துகொண்டு கௌரமாக வாழ்ந்துவருகிறேன். என்மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது உண்மைதான். ஆனால், அவையும் சமூகம் சார்ந்த போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டதற்காக என்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள்தான். கொலை வழக்கோ அல்லது யாரையும் மிரட்டியதாகவோ என்மீது வழக்கு எதுவும் கிடையாது. ஊரிலுள்ள ஒரேயோர் அடிதடி பிரச்னைக்காக ஒரு வழக்கு மட்டும் சென்னையில் நடைபெற்றுவருகிறது. அவ்வளவுதான்!''

குழந்தைகளுடன் ஓடும் ரயிலில் இருந்து குதித்த தாய் - கணவர்  இறந்த சோகத்தில் விபரீதம்

``முறைகேடான வழிகளில்தான் நீங்கள் சொத்து சேர்த்திருப்பதாகவும், அந்தப் பணத்தில்தான் கிலோக்கணக்கில் நகையாக அணிந்திருப்பதாகவும் சொல்கிறார்களே..?''

``காலையில் எழுந்து, காலண்டர் தாளைக் கிழிக்கும்போது `இன்றைக்கு நாம் இருக்கிறோமா...’ என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்தான் அனைவரது வாழ்க்கையும் இருக்கிறது. போகும்போது, எதைக் கொண்டுபோகப் போகிறோம்?

எனவே, முறைகேடான வழிகளில் சொத்துச் சேர்க்க வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. என் சொந்த ஊரில், என் பாட்டி, தாத்தா காலத்து வீடு இன்னும் புதுப்பிக்கப்படாமல்தான் கிடக்கிறது. நகைமீது எனக்கு சிறு வயதிலிருந்தே பிரியம் அதிகம் இருந்ததால், உழைத்துச் சம்பாதித்து வாங்கி அணிந்திருக்கிறேன்! முறைகேடான வழிகளில் நான் பணம் சம்பாதித்திருந்தால், வருமான வரித்துறையினர் என்னை எப்படி விட்டிருப்பார்கள்?''

ஹரி நாடார்
ஹரி நாடார்

``பண மோசடி செய்ததாக உங்கள் மீது வழக்கு இருக்கிறதுதானே?''

``பண மோசடி என்று கிடையாது... 'கேப்பிடல் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் கம்பெனி நடத்திவருகிறேன். வெளிநாட்டு கம்பெனிகளோடு இணைந்து இந்நிறுவனத்தை நடத்திவருகிறோம். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் தொகையை, இங்குள்ள பெரிய கம்பெனிகளுக்குக் கடனாகக் கொடுத்து வசூலிக்கும் வேலையைச் செய்துவருகிறோம்.

இதில், சில கம்பெனியினர் ஏமாற்றிக் கடன் பெறும் நோக்கில், போலியான ஆவணங்களைக் கொடுத்து கடன் கேட்பதும் உண்டு. இது போன்ற சமயங்களில், ஏற்கெனவே கொடுப்பதாகப் பேசப்பட்டிருந்த கடன் தொகையைக் கொடுக்காமல், தடுத்து நிறுத்திவிடுவோம். உடனே, 'நாங்கள்தான் அவர்களை ஏமாற்றிவிட்டதாக...' பொய்யான வழக்கைத் தொடுத்துவிடுவார்கள். அதன் பிறகு முறையான ஆவணங்களை நாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, மோசடி நபர்களை அடையாளம் காட்டிய சம்பவங்கள் நிறைய உண்டு.''

மக்களின் தேர்வு இதுவா? அதுவா? - உண்மை நிலையை உணர்த்தும் ஒரு தேர்தல் குட்டிக்கதை! #MyVikatan

`` `2கே அழகானது காதல்’ திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறீர்களே... நீங்கள் 2கே கிட்ஸா?''

``இல்லையில்லை.... நான் 80-ஸ் கிட்ஸ்தான். ஆனால், அப்போதிருந்து இப்போதுவரை காதல் என்பது எப்படியிருக்கிறது என்பதைத்தான் படத்தில் சொல்லப்போகிறோம்!''

அஜித்குமார் - விஜய்
அஜித்குமார் - விஜய்

``தல அஜித்தான் எனக்கு ரோல் மாடல் என்கிறீர்களே... தளபதி ரசிகர்கள் கோபப்பட மாட்டார்களா?''

``அப்படியெல்லாம் யாரும் என்மீது கோபப்படவில்லை. ஏனெனில், விஜய் நடித்த 'சர்க்கார்' படத்துக்கு பிரச்னை ஏற்பட்டபோது, விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவன் நான்.

தல அஜித், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காவிட்டாலும்கூட அவருடைய மனிதாபிமானம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால், அவரை ரோல் மாடல் என்று சொன்னேன்!''

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு