Published:Updated:

`பாகிஸ்தானுக்கு சென்றால் உங்களுக்குத் தெரியும்!' - அகிலேஷை விமர்சித்த உ.பி பா.ஜ.க தலைவர்

அகிலேஷ் யாதவ் கண்டிப்பாக பாகிஸ்தானில் சென்று தங்க வேண்டும். இந்துக் கோவில்களுக்கும் சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தனது எதிர்ப்பைப் பதிவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் அம்மாநிலத்தின் பா.ஜ.க தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்,``அகிலேஷ் யாதவ் கண்டிப்பாக பாகிஸ்தானில் சென்று தங்க வேண்டும். இந்துக் கோவில்களுக்கும் சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்போதுதான், பாகிஸ்தானில் இந்துக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் என்னென்ன என்பது குறித்து அவருக்கு நேரடி அனுபவம் கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.

ஸ்வதந்திர தேவ் சிங்
ஸ்வதந்திர தேவ் சிங்

என்.ஆர்.பி படிவத்தை என்னால் நிரப்ப முடியாது என்று அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார். அதை விமர்சித்துள்ள தேவ் சிங், ``மக்கள் தொகைக் கணக்கெடுப்பான என்.பி.ஆர், தவறான ஒன்று அல்ல. நீங்கள் வசிக்குமிடத்தை உறுதிப்படுத்த தினமும் பயன்படுத்தும் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை சமர்பித்தால் போதும். குடியுரிமை திருத்தச் சட்டம், நாட்டிலுள்ள ஏழைகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. பிரியங்கா காந்தி, மக்களைத் தவறாக வழிநடத்துகிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைதியின்மையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை சந்திக்க சென்றார்'' என்றும் அவர் விமர்சித்தார்.

தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய அவர்,``மக்களின் நலனை கருத்தில் கொண்டே குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பாகிஸ்தானில் துன்புறுத்தப்படுபவர்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் வழியாக மரியாதையான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க முயல்கிறார்கள். காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இந்துக்களோ, இஸ்லாமியர்களோ வாக்களிக்க மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.

மாணவர்கள்
மாணவர்கள்

மேலும், ஜவஹர்லால் நேரு மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கும் முன், சட்டத்தை முழுமையாக படிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.