Published:Updated:

சட்டமன்றத் தேர்தல் விரோதம்: தேவராஜி கோட்டைக்குள் புகுந்து ஆட்டத்தைக் கலைத்தாரா கே.சி.வீரமணி?

கே.சி.வீரமணி - தேவராஜி
News
கே.சி.வீரமணி - தேவராஜி

ஜோலார்பேட்டையில் தனது செல்வாக்கை சரிய வைத்ததால் கே.சி.வீரமணி கொதித்துப் போனார். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பதிலடி கொடுக்கத்தான் தேவராஜியின் கோட்டையாகப் பார்க்கப்படும் ஆலங்காயத்துக்குள் புகுந்து ஆட்டத்தை கலைத்துள்ளாராம் கே.சி.வீரமணி.

திருப்பத்தூர் மாவட்டத்திலிருக்கும் ஆறு ஒன்றியத் தலைவர் பதவிகளையும் தி.மு.க-வே கைப்பற்றியிருக்கிறது. கூவத்தூர் ஸ்டைலில் ரிசார்ட்களில் தங்க வைக்கப்பட்டிருந்த கவுன்சிலர்கள் பவுன்சர்கள் பாதுகாப்பில் வந்து ஓட்டுப் போட்டனர். சில இடங்களில் கவுன்சிலர்களை வரவிடாமல் தடுப்பதற்கான வேலைகளும் நடைபெற்றன. திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க செயலாளரும் ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ-வுமான தேவராஜி தனது மருமகள் காயத்ரி பிரபாகரனை ஆலங்காயம் ஒன்றியத் தலைவராக்குவதற்காக முயன்றார். ஆனால், கடைசி நேரத்தில் அமைச்சர் துரைமுருகன் மகனும் எம்.பி-யுமான கதிர் ஆனந்தின் ஆதரவாளரான சங்கீதா பாரி, அ.தி.மு.க, பா.ம.க கவுன்சிலர்கள் ஆதரவுடன் ஒன்றியத் தலைவர் பதவியை கைப்பற்றிவிட்டார். இதனால், இரு தரப்பினர் இடையே மோதல் மூண்டது.

முரசொலியில் வெளியான அறிவிப்பு
முரசொலியில் வெளியான அறிவிப்பு

வேட்டியை மடித்துக்கொண்டு, சட்டையைக் கிழித்துக்கொண்ட இந்த விவகாரம் முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்கு சென்றதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவராக வெற்றிப் பெற்ற பிரியதர்ஷினியின் கணவரும் ஆலங்காயம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளருமான ஞானவேலன், ஆலங்காயம் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளரும் மாவட்ட கவுன்சிலருமான முனிவேல் மற்றும் ஆலங்காயம் ஒன்றியத் தலைவராக வெற்றிப் பெற்ற சங்கீதாவின் கணவர் பாரி ஆகிய மூன்று பேரும் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பு, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில் ‘முரசொலி’யில் கட்டம் கட்டப்பட்டு வெளியாகியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்த அறிவிப்பில், ‘‘கழகக் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக மூன்று பேரும் நீக்கி வைக்கப்படுவதாக’’ குறிப்பிடப்பட்டுள்ளது. துரைமுருகனால் நீக்கப்பட்ட மூன்றுப் பேருமே துரைமுருகனின் ஆதரவாளர்கள் என்பதுதான் ஆச்சரியமே.

உள்விவரம் அறிந்த ஆலங்காயம் தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘இந்த விவகாரத்தில், திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணியின் தலையீடும் இருக்கிறது. வீரமணியுடன் கைகோத்து துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மாவட்ட செயலாளரின் மருமகளை தோற்கச் செய்ததாகவும் முதலமைச்சரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. கதிர் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

வீரமணிக்குச் சொந்த ஊர் ஜோலார்பேட்டை. தேவராஜிக்கு சொந்த ஊர் வாணியம்பாடி. ஜோலார்பேட்டை தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்கு இரண்டு முறை அ.தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரமணி, இந்த முறை தி.மு.க மாவட்ட செயலாளர் தேவராஜியால் தோற்கடிக்கப்பட்டார். வாணியம்பாடியிலிருந்து வந்து தனது மண்ணில் செல்வாக்கை சரிய வைத்ததால் வீரமணி கொதித்துப் போனார். தனது தோல்விக்குப் பதிலடி கொடுக்கத்தான் தேவராஜியின் கோட்டையாகப் பார்க்கப்படும் வாணியம்பாடி ஆலங்காயத்துக்குள் புகுந்து ஆட்டத்தை கலைத்துள்ளார் கே.சி.வீரமணி. வீரமணி நினைத்ததைப்போலவே, தேவராஜியால் தனது மருமகளை வெற்றிப் பெற வைக்க முடியவில்லை. மாவட்ட செயலாளருக்கு எதிராக எம்.பி கதிர் ஆனந்தும் காய் நகர்த்தியதும் கே.சி.வீரமணிக்கு சாதகமாகிவிட்டது. இந்த விவகாரத்தை தி.மு.க தலைமை விசாரித்துவருகிறது. கதிர் ஆனந்தைப் போனில் அழைத்து முதலமைச்சர் கடுமையாக கண்டித்துள்ளாராம். மாவட்ட செயலாளர் தேவராஜியும் முதலமைச்சரைச் சந்திப்பதற்காக சென்னை சென்றுள்ளார். அடுத்து யார் தலை உருளப் போகிறது? என்பதைப் பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும்’’ என்றனர்.