Published:Updated:

`ஓட்டு போட்டாச்சு, இனி அவர்கள் இந்திய சிட்டிசன்களே!' -வங்கதேசத்தவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மம்தா

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்கத்தில் குடியேறிய அனைவரும் இந்தியர்கள்தான் என்று மம்தா கூறியுள்ளார்.

`பொதுத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், பஞ்சாயத்துத் தேர்தல்களில் வாக்களித்த வங்கதேசவாசிகள் அனைவரும் இந்தியர்கள்தான். அவர்கள் தனியாகக் குடியுரிமை பெற விண்ணப்பிக்கத் தேவையில்லை' என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், ``டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலம்போல மேற்கு வங்கத்தை மாற்ற நான் அனுமதிக்க மாட்டேன். டெல்லியில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி 42 பேர் உயிர்ப் பலியாக மத்திய அரசு காரணமாக இருந்துள்ளது. வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்கத்தில் குடியேறிய அனைவரும் இந்தியர்கள்தான். தேர்தல்களில் நீங்கள் வாக்கு செலுத்தியுள்ளீர்கள். உங்களில் ஒருவரைக்கூட மேற்குவங்கத்திலிருந்து வெளியேற்ற அனுமதிக்க மாட்டேன்.

மேற்கு வங்கம், வங்கதேசத்தை காட்டும் வரைபடம்
மேற்கு வங்கம், வங்கதேசத்தை காட்டும் வரைபடம்

மேற்கு வங்கத்தில் வாழும் எந்த ஓர் அகதியும் குடியுரிமையை இழக்க மாட்டீர்கள். ஏற்கெனவே உங்களுக்கு அட்ரஸ் உள்ளது, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உங்களிடத்தில் இருக்கிறது. புதியதாக பாரதிய ஜனதா கட்சி தரும் எந்த ஒரு கார்டும் உங்களுக்குத் தேவையில்லை.

அஸ்ஸாமை ஆளும் பா.ஜ.க அரசு உண்மையான வங்காளிகள், ராஜ்போங்ஷி, முஸ்லிம் மக்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று கூறி என்.ஆர்.சி பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. அதுபோல மேற்கு வங்கத்தில் நடக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்'' என்றார்.

CAA-க்கு எதிர்ப்பு, கோயில்களுக்குக் குரல்... தி.மு.க ஆரம்பித்த தேர்தல் உத்தி!

ஏற்கெனவே சி.ஏ.ஏ, என்.ஆர்.சி. தேசிய மக்கள்தொகை பதிவேடு சட்டங்களை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப் போவதில்லை என்று மம்தா அறிவித்துள்ளார். இதனால், வங்கதேசத்தவர்கள் மீது மம்தா தனிப்பாசம் வைத்திருப்பதாக பா.ஜ.க அடிக்கடி கூறி வந்தது.

அஸ்ஸாம் என்.ஆர்.சி
அஸ்ஸாம் என்.ஆர்.சி
AP

வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்கத்தில் குடியேறியவர்களுக்கு மம்தா அரசு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வழங்கி அவர்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்துவதாக பா.ஜ.க தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு