இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் (Brij Bhushan Sharan Singh) பதவி வகித்துவருகிறார். இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக், சுமித் மல்லிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட முக்கிய மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பல்வேறு மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாகப் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஹரியானா முதல்வர் உட்பட பல்வேறு தரப்பினரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
யார் இந்த பிரிஜ் பூஷன் சரண் சிங்?
பிரிஜ் பூஷன் சரண் சிங் உத்தரப்பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி-யாக இருக்கிறார். தற்போது கோண்டா மாவட்டத்தில் வசித்துவருகிறார். இவர் தன்னுடைய இளமைப் பருவத்தில் மல்யுத்த வீரராக இருந்தவர். மாணவர் பருவத்தில், 1980-களில் அரசியலில் சேர்ந்தார். அயோத்தியா ராம்மந்திர் இயக்கத்தில் பங்கேற்றார். அவரது 'இந்துத்வா பிம்பம்' காரணமாக அந்தப் பகுதி மக்களிடத்தில் பிரபலமானார் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு 1991-ல் முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, 1999, 2004, 2009, 2014, 2019-ம் ஆண்டுகளில் மக்களவைக்கு மீண்டும் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 மக்களவைத் தேர்தலில், சமாஜ்வாடி கட்சியுடன் இருந்தபோது கைசர்கஞ்ச் தொகுதியில் வெற்றிபெற்றார். 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க-வில் சேர்ந்த அவர், 2014 , 2019-ம் ஆண்டுகளில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கும் ஒருவர்.
இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி உட்பட 40 பேர் முக்கிய நபராகக் கருதப்பட்டனர். அதில் இவரும் இடம்பிடித்திருந்தார். அதன் பிறகு நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இவர் 2011-ம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) தலைவராகப் பதவி வகித்துவருகிறார். ஆறு முறை எம்.பி-யாக இருந்த அவர், கோண்டா, கைசர்கஞ்ச், பல்ராம்பூர் தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நபராகவும் இருக்கிறார். அவ்வப்போது பாலியல் சர்ச்சையில் சிக்கிவரும் பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவியிலிருந்து விலக வேண்டுமென மல்யுத்த வீராங்கனைகள் போராடி வருகின்றனர்.