அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் 19-வது மாநில மாநாடு மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நடைபெற்றது. அகில இந்திய பொதுச்செயலாளர் தேவராஜன், மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் தலைமை தாங்க, தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி பேசும்போது, ``நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காலம் முதல் ஃபார்வர்டு பிளாக் கட்சியிலும், அவரது படையிலும் தளபதிகளாக இருந்தவர்கள் இஸ்லாமியர்கள்.
என்றும் தொப்புள் கொடி உறவுகளாக வாழ்ந்துவருகிறோம். இன்று பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி, ஒன்றிய அரசு செயல்பட்டுவருகிறது. உதாரணத்துக்கு, மதுரையில் எய்ம்ஸுக்கு பிரதமரே நேரில் வந்து அடிக்கல் நாட்டிச் சென்று, 5 ஆண்டுகள் ஆகிவிட்டன.

சமீபத்தில் அறிவித்த பட்ஜெட்டில்கூட எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கவில்லை. 2024-ல் பா.ஜ.க-வை மக்கள் தூக்கி வீசும் காலம் வரும், நிச்சயமாக வரும். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி வந்த பின்பு மதுரையில் எய்ம்ஸ் கொண்டுவருவோம்" என்றார்.
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேசும்போது, "உசிலம்பட்டி வரலாற்றுப் பெருமை கொண்ட பகுதி, வெள்ளையனுக்கு எதிராக பெருங்காமநல்லூரில் நேருக்கு நேராகப் போராடி உயிர்த் தியாகம் செய்த வீரமிக்கவர்கள் இந்த மக்கள். வரலாறுகளை ஆய்வுசெய்யும்போது தென் மாவட்டமும், அதில் கிடைக்கும் தொல்லியல் சார்ந்த பொருள்களும் அதிகமாக இருக்கின்றன.

வைகை அணையைத் திறக்கவந்த அன்றைய பிரதமர் நேரு, அணையைக் கட்டிய தொழிலாளியின் கையாலேயே அந்த அணையைத் திறக்கவைத்தார். ஆனால், இன்று ஒரு பொதுத்துறை நிறுவனத்தைத் திறக்க மோடி சென்றால், அதைத் தனியாருக்கு எப்படி விற்பனை செய்யலாம் என்றே யோசிப்பார்" என்றார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ``மதுரை மாவட்டத்துக்கே பெருமை சேர்ப்பது உசிலம்பட்டி. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முதல்வரே அழைத்துச் சொன்னதால் வந்து கலந்துகொண்டிருக்கிறேன்.

ஒரு திருமண வீட்டில் மாப்பிள்ளைக்கு எப்படி துணை மாப்பிள்ளை உடனிருப்பாரோ, அதேபோல தி.மு.க-வுக்கு ஃபார்வர்டு பிளாக் கட்சி உடனிருக்கும். அப்போதைய தலைவர் பி.கே.மூக்கையா தேவர் ஆதரவளித்து தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தது ஃபார்வர்டு பிளாக்.
அந்தக் கூட்டணி இன்றுவரை தொடர்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு தி.மு.க உறுதுணையாக இருக்கும். ஃபார்வர்டு பிளாக் கட்சியின் கோரிக்கையான 58 கிராமங்களின் கால்வாய் திட்டத்தை மறுசீரமைப்பு செய்து, மேலும் பல கண்மாய்களை இணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.
கூட்டத்தில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப் பாடுபடுவது என்று ஃபார்வர்டு பிளாக் நிர்வாகிகளால் உறுதியேற்கப்பட்டது. தொடர்ந்து இன்று இந்தக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.