Election bannerElection banner
Published:Updated:

ஸ்டெர்லைட்: `ஆக்ஸிஜன் உற்பத்திக்காக 4 மாதங்கள் அனுமதி!’ -அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

`தமிழகத்திலும் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துக் காணப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல. அதை மூடியதே தமிழக அரசுதான்” - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை முன்னெப்போதும் இல்லாத தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் பாதிப்பு அதிக அளவில் இருப்பதால், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துக் காணப்படுகிறது. நாடு முழுவதும் பல இடங்களில் மருத்துவ ஆக்ஸிஜனுக்குத் தட்டுப்பாடும் நிலவுகிறது. தமிழகத்திலும் வரும் நாள்களில் ஆக்ஸிஜனின் தேவை அதிகரிக்கும். இந்தநிலையில், வேதாந்தா நிறுவனம், மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நாடியது. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றமும் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக அனுமதிக்கலாமா எனத் தமிழக அரசிடம் பதில் கேட்டிருந்தது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில், ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசே கையகப்படுத்தி ஆக்ஸிஜன் தயாரிக்கலாம் என்று யோசனை வழங்கியது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இதே கருத்தை வலியுறுத்தினார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில், குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பெயரில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கடும் எதிர்ப்பு நிலவியது. இந்தநிலையில், தமிழக முதல்வர் இன்று அனைத்துக்ச்கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றார்கள். முதல்வர் இன்று அவசர ஆலோசனை நடத்தவிருக்கும் சூழலில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தி.மு.க உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள், `தேவையைக் கருத்தில்கொண்டு ஆக்ஸிஜன் உற்பத்திக்கு மட்டும், தமிழக அரசின் உச்சகட்ட கண்காணிப்பில் அனுமதி அளிக்கலாம்’ எனக் கருத்து தெரிவித்ததாகத் தகவல் வெளியானது. ஆக்ஸிஜன் உற்பத்தி தவிர அங்கு வேறு எந்தப் பணியும் நடக்கக் கூடாது எனவும் பெரும்பாலான கட்சிகள் கருத்து தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``தமிழகத்திலும் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துக் காணப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல. அதை மூடியதே தமிழக அரசுதான். தற்போது நிலவும் ஆக்ஸிஜன் தேவையைக் கருத்தில் கொண்டு நான்கு மாதங்களுக்கு மட்டும் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம். ஆக்ஸிஜன் உற்பத்தி உள்ளூர் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் இணைந்து கண்காணிக்கப்படும்” எனத் தெரிவித்தாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்த வைகோ, `அரசின் கட்டுப்பாட்டில் ஆலையை எடுத்து, ஆக்ஸிஜன் தயாரிக்க அதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். அரசின் கட்டுப்பாட்டில் ஆக்ஸிஜன் தயாரிக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளார். `எந்தக் காரணம்கொண்டும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி வழங்கக் கூடாது’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து கூட்டத்தில் `ஆக்ஸிஜன் உற்பத்திக்காக நான்கு மாதங்கள் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கலாம்’ என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், `தமிழகத் தேவை போக மட்டுமே மற்ற மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்’ எனவும் தீர்மானம் நிறைவேற்றம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு