Published:Updated:

`அயோத்தி வழக்கு!' - 2010 அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது?

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை உரிமைகோரிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பளித்தது.

அயோத்தி பாபர் மசூதி
அயோத்தி பாபர் மசூதி

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்துக்கு வரும் முன்பாக, சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் இந்து, இஸ்லாமியர்கள் என இருவருமே வழிபாடு நடத்திக்கொண்டிருந்தனர். பாபர் மசூதிக்கு உள்ளே இருக்கும் பகுதியில் இஸ்லாமியர்களும் வெளியில் இருக்கும் பகுதியில் இந்துக்களும் வழிபாடு நடத்திவந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியில் அந்த இடத்தில் இருதரப்பினரும் வழிபாடு நடத்தும் வகையில் வேலி ஒன்று அமைக்கப்பட்டது. இந்தநிலையில், கடந்த 1949-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாபர் மசூதிக்குள் நுழைந்த சிலர், ராமர் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் ராமர் சிலையை நிறுவினர். இதையடுத்து ஏற்பட்ட பதற்றத்தால் அந்த இடத்துக்கு சீல் வைக்கப்பட்டு இருதரப்பினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

பாபர் மசூதி
பாபர் மசூதி

அதன்பின்னர் கடந்த 1986-ல் சிவில் நீதிமன்ற உத்தரவை அடுத்து, அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு, இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்துவந்த நிலையில், கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பரில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதேநேரம், பைஸாபாத் சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 5 மனுக்களில் 4 மனுக்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்குக் கடந்த 1989-ல் மாற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனு மட்டும் வாபஸ் பெறப்பட்டது. இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.யூ.கான், சுதீர் அகர்வால், தரம்வீர் சர்மா ஆகியோர் கொண்ட 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. மூன்று நீதிபதிகளுமே தனித்தனியாகத் தங்கள் தீர்ப்புகளை வழங்கினர். மூன்று நீதிபதிகளின் தீர்ப்பு மட்டுமே 8,000 பக்கங்களுக்கு மேல் இருந்தது.

அலகாபாத் நீதிமன்றம்
அலகாபாத் நீதிமன்றம்

சாராம்சம்

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தை உரிமைகோரும் மூன்று அமைப்புகளும் (இந்து, இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் நிர்மோகி அஹோரா) அந்த நிலத்தைப் பிரித்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பின் பல்வேறு அம்சங்களில் 3 நீதிபதிகளும் வேறுபட்டிருந்தாலும், அந்த இடத்தை 3 பேரும் சரிசமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தில் உடன்பட்டிருந்தனர். இந்த விவகாரத்தில் மூன்று தரப்பினருமே, அந்த இடம் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டதாக நீதிமன்றம் கருதியது. இதனால், அந்த இடத்தைப் பிரித்துக் கொள்ள உத்தரவிட்டது.

`40 நாள்கள் தொடர் விசாரணை; 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு?' - அயோத்தி வழக்கில் சனிக்கிழமை தீர்ப்பு

அதன்படி, மூன்று குவிமாடங்கள் கொண்ட ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் மசூதி இருந்த இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதேபோல், மசூதிக்கு வெளியில் ராம் சப்துரா மற்றும் சீதா ரசோய் சிலைகள் அமைந்திருந்த இடம் நிர்மோகி அஹோரா அமைப்புக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், மீதமிருந்த மசூதிக்குள் இருந்த இடம் மற்றும் வெளியில் இருந்த இடம் ஆகியவை இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டது. மூன்று அமைப்புகளும் இடத்தை சரிசமமாகப் பிரித்துக்கொள்ள உத்தரவிடப்பட்டது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
பாபர் நுழையாத பாபர் மசூதி: அயோத்தியில் என்ன நடந்தது? பாகம் 1

அதேபோல், அனைத்து தரப்பினரும் அந்த இடத்துக்கு வந்து செல்ல வழி அமைக்க மற்ற தரப்பினர் உரிமை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மற்ற தரப்பினர்களை பாதிக்காத வகையில் உள்ளே வருவதற்கும் வெளியேறுவதற்கும் பாதைகள் அமைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்தே உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகளும் வழக்குத் தொடர்ந்தன.