சைவமும் வைணவமும் இணையும் விழா, அனைத்து மக்களும் பங்கேற்றுக் கொண்டாடும் மாபெரும் விழாவான சித்திரைத்திருவிழா, மதுரையில் ஆண்டுதோறும் உற்சாகமாக நடந்துவருகிறது. இடையில் இரண்டு வருடங்கள் கொரோனா காலத்தில் பொதுமக்கள் பங்களிப்பில்லாமல் நடந்தது. மீனாட்சியம்மன் திருக்கோயில் சார்பாக 10 நாள்களும், கள்ளழகர் திருக்கோயில் சார்பாக நான்கு நாள்களும் நடைபெறும் இந்த விழாவைக் காண தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதுமிருந்தும் மக்கள் திரளாக வருகிறார்கள்.

கடந்த ஆண்டு கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின்போது யாரும் எதிர்பாராத வகையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, இரண்டு பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்குக் காரணம், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரின் தவறான ஏற்பாடுகளும்தான் என்று குற்றம்சாட்டப்பட்டது. திருவிழாவுக்கு வரும் மக்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கும் காவல்துறையினர், அரசு உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், வி.ஐ.பி-க்கள் மட்டும் சிரமமில்லாமல் வந்து செல்வதற்கு கவனம் செலுத்தி ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். பொதுமக்கள் மட்டும் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த 23-ம் தேதி கொடியேற்றப்பட்டு, பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் என நேற்றுடன் விழா நிறைவுபெற்றது. அதிலும் பொதுமக்கள் சிரமங்களைப் பொறுத்துக்கொண்டார்கள். அதைத் தொடர்ந்து அழகர்மலையிலிருந்து கள்ளழகர் நேற்று மாலை மதுரைக்குக் கிளம்பினார்.
`இந்த ஆண்டாவது பொதுமக்கள் சிரமமில்லாமல், கள்ளழகர் திருவிழாவில் கலந்துகொள்ள வேண்டும். அவர்கள் போய் வரப் பாதைகள் பாதுகாப்பாக அமைக்கப்பட வேண்டும்' என்று பல்வேறு அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தன. இந்த நிலையில், கடந்த வாரம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அப்போது, "இந்த ஆண்டு கள்ளழகர் திருவிழாவுக்கு 15 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும். பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்க, பக்கத்து மாவட்டங்களிலிருந்து தேவையான பணியாளர்களை அழைத்துக்கொள்ளுங்கள்" என்றார் அமைச்சர்.

அமைச்சர் பி.மூர்த்தி பேசும்போது, "வெளியூர்களிலிருந்து வரும் பொதுமக்களுக்கு தமுக்கம் மைதானம், ராஜாஜி பூங்கா, மீனாட்சி கல்லூரி, கலெக்டர் அலுவலக வளாகத்தைத் திறந்துவைக்க வேண்டும். அழகர் கோயிலுக்குரிய ஜமீன்தார்கள், நாட்டாமைகள் உள்ளிட்டவர்கள் வந்து செல்ல பாஸ் வழங்கி முன்னுரிமை வழங்க வேண்டும்" என வி.ஐ.பி-க்களுக்கு முக்கியத்துவம் தருவது குறித்துப் பேசினார்.
ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்கள் சிரமமின்றி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வைப் பார்ப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வி.ஐ.பி-க்களை அழைத்துச் செல்வது குறித்துத்தான் ஆலோசிக்கப்பட்டது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய வைகை நதி மக்கள் இயக்கத் தலைவர் வைகை ராஜன், "கள்ளழகர் திருவிழா மக்களுக்கானதா... வி.ஐ.பி-க்களுக்கானதா என்ற சந்தேகம் ஒவ்வோர் ஆண்டும் ஏற்பட்டுவருகிறது. அந்த அளவுக்கு அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், அவர்களின் குடும்பத்தினர் பாதுகாப்பாக வந்து விழாவைக் காண்பதற்குச் சிறப்பாக ஏற்பாடு செய்கிறார்கள். முன்பெல்லாம் வைகையாற்றின் இரு கரைப் பகுதிகளிலும் எந்தப் பக்கமிருந்தும் மக்கள் வைபவம் நடைபெறும் இடத்துக்கு வரலாம். அதுபோல் சுலபமாக வெளியேறிச் செல்லலாம்.

ஆனால், தற்போது வைகையாற்றின் இரு கரைகளிலும் சாலை அமைத்ததால், தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. மக்கள் எல்லோரும் ஒரு பக்கமாகத்தான் உள்ளே வர வேண்டும். அதுபோல் நெரிசல் ஏற்பட்டால் வெளியேறுவதும் கஷ்டம். புதிய பாதைகளை ஏற்படுத்துங்கள் என்று சொல்லியும் மாவட்ட நிர்வாகம் செய்யவில்லை. இரவிலிருந்தே ஆற்றுக்குள் மக்கள் கூடுவார்கள். ஆனால், சாக்கடை நீர் ஆற்றுக்குள் ஓடுவதால் மக்களால் துர்நாற்றத்தில் இருப்பது கஷ்டம். அதை விழாக் காலத்தில் சுத்தம் செய்யக்கூட நடவடிக்கை எடுக்கவில்லை. அடுத்து கள்ளழகர் இறங்கும் இடத்துக்கு அருகே ஆகாயத்தாமரை வளர்ந்து கிடக்கிறது. இது ஆற்றுக்குள் இறங்கும் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில் அமைச்சர், எம்.எல்.ஏ-க்கள், வி.ஐ.பி-கள், அதிகாரிகள் குடும்பத்துடன் கள்ளழகர் இறங்கும் இடத்துக்கு வர 130 ஆண்டுகளைக் கடந்து மதுரையின் அடையாளமாகக் காட்சியளிக்கும் ஆல்பர்ட் விக்டர் பாலத்தின் இடது பக்கமிருக்கும் நடைமேடையையும் கைப்பிடிச்சுவரையும் 50 மீட்டர் அளவுக்கு உடைத்து புதிய பாதையை அமைத்திருக்கின்றனர். இது எவ்வளவு பெரிய அநீதி. வரும் காலங்களில் கள்ளழகர் திருவிழா வி.ஐ.பி-க்களுக்கு மட்டும்தான் என்று அறிவித்துவிடுவார்கள்போல" என்றார் வருத்தத்துடன்.
இந்த நிலையில் விழாவுக்கு வரும் லட்சக்கணக்கான மக்களுக்குப் பல்வேறு தரப்பினரும் அன்னதானம் வழங்குவார்கள். இதற்கு உணவு பாதுகாப்புத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டுமென்று மாவட்ட நிர்வாகம் திடீரென உத்தரவிட, இதை எதிர்த்து அன்னதானம் வழங்குவோர் நீதிமன்றத்தில் முறையிட, 'இந்த ஆண்டு தடைசெய்யக் கூடாது' என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது.

இது குறித்து மதுரை கலெக்டர் அனீஸ் சேகரிடம் விளக்கம் கேட்டோம். நம்மிடம் பேசியவர், ``திருவிழாக்களுக்கு வி.ஐ.பி-க்கள் வருவது வழக்கமானதுதான். அப்படி அவர்கள் வருவது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தனிப்பாதை அமைத்தோம். திருவிழா முடிந்ததும் அது சீரமைக்கப்படும். மற்றப்படி வி.ஐ.பி-க்கள் வருவதற்கு அதைவிட்டால் வேறு வழியில்லை. வி.ஐ.பி பாஸ்கள் அதிகம் வழங்கப்படவில்லை. பொதுமக்கள் பிரச்னையில்லாமல் விழாவுக்கு வரும் வகையில்தான் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. வேறு எந்தக் கெடுபிடியும் கிடையாது" என்றார்.