Published:Updated:

`பா.ம.க அளவுக்குக்கூட மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கவில்லை!' -முக்கோண சிக்கலில் அ.தி.மு.க கூட்டணி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

`அ.தி.மு.க நிர்வாகிகளையே சுயேச்சை வேட்பாளர்களாகக் களம் இறக்கி தோல்வியைத் தழுவச் செய்தார்கள். கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம்' என தே.மு.தி.க மாவட்டச் செயலாளர்கள் சிலர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க உள்ளடி வேலை செய்துவிட்டதாகக் கொந்தளிக்கின்றனர் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள். ``எங்களால்தான் அ.தி.மு.க ஆட்சியில் இருக்கிறது" எனவும் கட்சிக் கூட்டத்தில் பேசியிருந்தார் அன்புமணி. பா.ஜ.க நிர்வாகிகளும் பாட்டாளி மக்கள் கட்சிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் கூட எங்களுக்குக் கொடுக்கவில்லை எனப் பேசியுள்ளனர். தே.மு.தி.க-வினரும் இதே பல்லவியைத்தான் பேசி வருகின்றனர்.

அ.தி.மு.க
அ.தி.மு.க

மூன்று கட்சிகளும் அ.தி.மு.க-வுடன் கூட்டணியைத் தொடர்வதா வேண்டாமா என்று ஆலோசிக்கத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வைவிட தி.மு.க அதிக இடங்களைப் பிடித்துள்ளது. வாக்கு சதவிகிதத்திலும் தி.மு.க முன்னிலையில் உள்ளது. இது ஆளுங்கட்சிக்குப் பெருத்த பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

`நாங்கள் இல்லாவிட்டால் அ.தி.மு.க ஆட்சியே இல்லை!'-பொதுக்குழுவில் கொதித்த அன்புமணி

உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீட்டின்போது முதல்வர், துணை முதல்வர் கூட்டணிக்கட்சித் தலைவர்களான ராமதாஸ், விஜயகாந்த், ஜி.கே.வாசன் போன்றவர்கள் கலந்து பேசவில்லை. ஆனால் ஜி.கே மணி, ஞானதேசிகன், சுதீஷ் போன்றோர் இடப்பங்கீடு தொடர்பாக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். `மாவட்டச் செயலாளர்களிடம் பேசிக்கொள்ளுங்கள்' என அ.தி.மு.க தலைமையில் இருந்தவர்கள் ஒதுங்கிக் கொண்டனர். இதனால், மாவட்ட அளவில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க மாவட்ட பொறுப்பாளர்கள் விரும்பவில்லை. கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளை வெற்றி பெறவைத்து அவர்களை உள்ளூரில் வளர்த்துவிடவும் ஆர்வம் காட்டவில்லை.

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன் ராமதாஸ்
எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன் ராமதாஸ்

மேலும், தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக கூட்டணிக் கட்சிகளுக்குக் குறைந்த அளவே இடங்களை ஒதுக்கீடு செய்தது அ.தி.மு.க. தேர்தலிலும் கூட்டணிக் கட்சிகளை வெற்றிபெற வைக்க பெரிதாக எந்த முயற்சியையும் அ.தி.மு.க தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை. இந்தக் கோபத்தைத்தான் சமீபத்தில் நடந்த பா.ம.க பொதுக்குழுக் கூட்டத்தில் வெளிப்படுத்தியிருந்தார் அன்புமணி.

அவர் பேசுகையில், ``எங்களால்தான் அ.தி.மு.க ஆட்சியில் நீடிக்கிறது. அ.தி.மு.க-வுடன் பா.ம.க கூட்டணி வைக்கவில்லை என்றால் இன்று அவர்கள் ஆட்சியில் நீடித்திருக்க முடியாது. அ.தி.மு.க-வோ உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க-வுக்கு வெறும் கால் சீட்டு, அரைச் சீட்டு என்று கொடுத்துக் கெஞ்ச வைத்தது.

கூட்டணியே வேண்டாம் என்ற பா.ம.க-வின் கொள்கையை மாற்றி அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்குச் சென்றோம். ஆனால், அதற்கான அங்கீகாரம் நமக்குக் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது" என்றார்.

இந்தப் பேச்சால் கொதித்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``இவர்களால் நாங்கள் ஒன்றும் ஆட்சியைப் பிடிக்கவில்லை. அவர்கள் வேண்டுமென்றால் தனியாக நிற்கவேண்டியது தானே" எனப் பேசியுள்ளனர். அதேபோல் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், ``அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட தொகுதிகள் குறைவுதான். ஆனால் மனவருத்தங்கள் நிறைய இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்போது அதிக இடம் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்படும் என நம்புகிறோம்" என்றார்.

தமிழக பா.ஜ.க
தமிழக பா.ஜ.க

இந்த விவகாரத்தில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ``நாங்கள் தனித்துப் போட்டியிட்டிருந்தால் அதிக இடங்களைப் பிடித்திருப்போம்" என்றார் கொதிப்புடன். இதற்குப் பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ``கூட்டணி தர்மத்தை மீறிப் பேசக் கூடாது" என்றார். தே.மு.தி.க-வின் நிலைமை இதைவிட மோசமானதாக உள்ளது.

`அதிக இடங்களைக் கேட்டோம். ஆனால், குறைந்த அளவில்தான் இடங்களை ஒதுக்கினார்கள். அதிலும் அ.தி.மு.க நிர்வாகிகளையே சுயேச்சை வேட்பாளர்களாகக் களம் இறக்கி தோல்வியைத் தழுவச் செய்தார்கள். கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம்' என தே.மு.தி.க மாவட்டச் செயலாளர்கள் சிலர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி

இதனால் கொதித்த பிரேமலதா, `கட்சித்தலைமை அறிவிப்பு இல்லாமல் யாரும் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது' என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக அ.தி.மு.க தலைமையோடு மோதத் தொடங்கியுள்ளன மூன்று பிரதானக் கூட்டணிக் கட்சிகள். `2021 சட்டமன்றத் தேர்தலில் இதே கூட்டணி தொடருமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும்' என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

அடுத்த கட்டுரைக்கு