Published:Updated:

ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலினப் பிரிவுக்கு ஒதுக்கீடு! - ராஜினாமா செய்த 5 வார்டு உறுப்பினர்கள்

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிச்சிவிளை ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை பட்டியலினப் பெண் பிரிவுக்கு ஒதுக்கியதைக் கண்டித்து, தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்களில் 5 பேர் திடீரென ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பிச்சிவிளை ஊராட்சி. இந்த ஊராட்சியில் மொத்தம் 827 வாக்குகள் உள்ளன. இதில், பட்டியலினத்தவர்களின் வாக்குகள் 6 மட்டுமே உள்ளன, இருப்பினும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பெரும்பான்மையாக பொதுப்பிரிவினரின் வாக்குகள் உள்ள நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலினப் பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்தனர் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள்.

பதவியை ராஜினாமா செய்த வார்டு உறுப்பினர்கள்
பதவியை ராஜினாமா செய்த வார்டு உறுப்பினர்கள்

அத்துடன், தலைவர் பதவி தவிர்த்து இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 6 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் யாரும் போட்டியிடவில்லை. அந்தத் தேர்தலில் வெறும் 13 வாக்குகள் மட்டுமே பதிவாகின. இதில், ராஜேஸ்வரி 10 வாக்குகள் பெற்று ஊராட்சி மன்றத் தலைவரானார். வார்டு உறுப்பினர்கள் இல்லாததால் பெரிய அளவிலான பணிகள் எதுவும் இந்த ஊராட்சியில் நடைபெறவில்லை.

இந்த நிலையில், காலியாக இருந்த பிச்சிவிளை ஊராட்சியின் 6 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த 9-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் 1-வது வார்டு உறுப்பினராக வைகுண்டச்செல்வி, 2-வது வார்டு உறுப்பினராக கேசவன், 3-வது வார்டு உறுப்பினராக நடராஜன், 4-வது வார்டு உறுப்பினராக சுஜாதா, 5-வது வார்டு உறுப்பினராக யாக்கோபு, 6-வது வார்டு உறுப்பினராக பரிமளச்செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்கள் கடந்த 20-ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். இவர்களில், பரிமளச்செல்வியின் மகன் உடல்நலக்குறைவால் இறந்துபோனதால் அவர் மட்டும் பதவியேற்கவில்லை.

ராஜேஸ்வரி - பிச்சிவிளை ஊராட்சி மன்ற தலைவர்
ராஜேஸ்வரி - பிச்சிவிளை ஊராட்சி மன்ற தலைவர்

இதற்கிடையே பிச்சிவிளை ஊராட்சியின் துணைத் தலைவர் தேர்தலை நடத்துவதற்காக திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் ஆணையாளர் ராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் பிச்சிவிளை ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்திருந்தனர். இதற்கிடையில், வார்டு உறுப்பினர்களான வைகுண்டசெல்வி, கேசவன், நடராஜன், சுஜாதா, யாக்கோபு ஆகியோர் திடீரென தங்களது ராஜினாமா கடிதத்தை ஊராட்சி மன்றத் தலைவரிடம் வழங்கிவிட்டு, அங்கிருந்து வேகமாக வெளியேறிவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மறைமுகத் தேர்தல்: பெண் கவுன்சிலர் சேலையை இழுத்ததால் பதற்றம்!  - திமுக-வினர்மீது புகார்!

இது குறித்து 2வது வார்டு உறுப்பினர் கேசவன், ``எங்க ஊராட்சியில இருக்குற 827 வாக்குகள்ல 6 வாக்குகள்தான் பட்டியலினத்தவர்களுக்கு உள்ளது. மொத்த வாக்குகளில் 50 சதவிகிதத்தினர் பட்டியலினத்தைச் சேர்ந்தவரா இருந்தாக்கூடப் பரவாயில்லை. 6 வாக்குகள் உள்ள பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களில் பஞ்சாயத்துத் தலைவர் பதவியை பட்டியலினப் பெண் பிரிவுக்கு ஒதுக்கியிருப்பது தவறு. ஊர்மக்களின் முடிவால் எங்களில் 5 பேர் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டோம்.

பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்
பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்

எங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லையென்றால், அடுத்த கட்டமாக கலெக்டரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்குவோம்” என்றார். இது குறித்து ``பிச்சிவிளை ஊராட்சியில் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால், 5 வார்டு உறுப்பினர்கள் திடீரென ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளனர். இந்த ராஜினாமாவை ஏற்க முடியாது. முறைப்படி கூட்டம் நடத்தி மினிட் புக்கில் தீர்மானமாகக் கொண்டு வந்து ராஜினாமா செய்தால் மட்டுமே பரிசிலீக்கப்படும்” என்றனர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு