``2021 தேர்தலுக்குள் நல்ல முடிவை அறிவிப்பேன்’’ என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தவர் நடிகர் ஆனந்தராஜ். அ.தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாளராக வலம்வந்தவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியிலிருந்து விலகி, முழு நேர நடிகராக பிஸியாகிவிட்டார்.
ஆனால், நடப்பு அரசியல் குறித்து அவ்வப்போது கருத்து சொல்லிவரும் நடிகர் ஆனந்தராஜை நேரில் சந்தித்தேன்....
''அ.தி.மு.க-விலிருந்து விலகிவிட்டீர்களே... அங்கே உங்களுக்கு என்னதான் பிரச்னை?''
''அரசியல்வாதி ஆகிவிட்டால், தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டே தூங்க வேண்டும்; இல்லையென்றால் எல்லோரும் மறந்துவிடுவார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில், ஒரே நாளில் உலகம் முழுக்கப் பிரபலமாகிவிடக்கூடிய வாய்ப்பு, எல்லோருக்குமே இருக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் எனக்கான இடம் மறுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்ததால், கட்சியிலிருந்து விலகி வந்துவிட்டேன். என் மன வருத்தத்தை நான் சொல்வதாலேயே, 'புதுச்சேரியைச் சேர்ந்த இவர், எப்படி தமிழ்நாட்டு அ.தி.மு.க குறித்து கருத்து தெரிவிக்கலாம். இவரது யோசனைகளையெல்லாம் புதுச்சேரியோடு வைத்துக்கொள்ளட்டும்' என்றும்கூட அ.தி.மு.க-விலேயே சிலர் என்னை விமர்சிக்கிறார்கள். இப்போது இப்படி விமர்சிப்பவர்கள்தான் நான் அ.தி.மு.க-வில் இருந்தபோது நடைபெற்ற தேர்தல் நேரங்களில், `என் தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்யுங்கள்' எனவும் என்னிடம் கேட்டுக்கொண்டனர்.
2016 தேர்தலின்போது, அருப்புக்கோட்டையில் நடந்த ஒரு பிரசாரக் கூட்டத்தில் என் அருகில் அமர்ந்திருந்த அண்ணன் ஓ.பி.எஸ்., `நான் இப்போதுதான் முதல் தடவையாக இங்கே பிரசாரத்துக்கு வந்திருக்கிறேன். நீங்க..?'' என்று என்னிடம் கேட்டார். `நான் ஏற்கெனவே ஆறேழு தடவை வந்துவிட்டேன்' என்று சொன்னேன். இப்படி, தமிழ்நாடு முழுக்க எல்லா தொகுதிகளிலும் நான் பிரசாரம் செய்திருக்கிறேன். பல ஆண்டுகளாக இங்கேதான் வசித்துவருகிறேன்... வாக்களித்தும் வருகிறேன்!''
''ஓ.பி.எஸ் தரப்பில் யாரேனும் உங்களை 'பிற மாநிலத்தவர்' என்று விமர்சித்தார்களா?''
''இல்லையில்லை.... அவர்கள் தரப்பில் யாரும் அப்படி என்னை விமர்சிக்க மாட்டார்கள். கட்சியிலுள்ள வேறு சிலர், என் மீதுள்ள வெறுப்பால் அப்படிச் சொல்கிறார்கள். அவர்கள் யாரென்பதும் எனக்குத் தெரியும். ஆனால், அதையெல்லாம் இப்போது வெளிப்படையாகச் சொல்ல முடியாது.''

''சமீபகாலமாக தி.மு.க மீது அதிக பாசம் காட்டிவருகிறீர்களே... தி.மு.க-வில் இணையப்போகிறீர்களா?''
''2016-லேயே நான் அ.தி.மு.க-விலிருந்து விலகிவிட்டேன். ஆக, நான் தி.மு.க-வுக்குப் போவதாக முடிவெடுத்திருந்தால் எப்போதோ எடுத்திருப்பேனே... அதைத் தடுப்பதற்கு யாராவது இருக்கிறார்களா என்ன? நான் அ.தி.மு.க-வில் சேருவதற்கு முன்பிருந்தே கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் என்னோடு நட்போடு பழகியவர்கள். இப்போதுவரை அந்த நட்பும் மரியாதையும் அப்படியே தொடர்கின்றன.
இப்போது நான், நானாக சுதந்திரமாக இருந்துவருகிறேன். நாளை நான் ஏதாவதொரு கட்சியில் இணையலாம்... அப்படி ஒரு முடிவெடுத்து நான் எந்தக் கட்சியில் இணைந்தாலும் கட்சியின் தலைமையை உளமார தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்படுவேன் என்பதை மட்டும்தான் இப்போது நான் சொல்ல முடியும்.''
''நீட் தேர்வு எழுதுபவர்கள் மீது ஆடைக் கட்டுப்பாடு விதிப்பதை எதிர்க்கிறீர்கள். உங்கள் எதிர்ப்பு ஆடைக்காகவா அல்லது நீட் தேர்வை அமல்படுத்திவிட்ட பா.ஜ.க அரசை எதிர்த்தா?''
''பள்ளியில் மாணவர்கள் அனைவரும் ஏற்றத்தாழ்வுகளின்றி ஒரே உடையை கண்ணியமாக அணிந்துவரும் நோக்கில்தான் சீருடையையே அரசு கொடுக்கிறது. ஆனால், 17 வயதில் ப்ளஸ் டூ முடித்து நீட் தேர்வு எழுத வரும் மாணவியிடம், `துப்பட்டாவை எடுத்துவிட்டு தேர்வு எழுது' என்று சொல்வதை... எந்தத் தகப்பனால் பொறுத்துக்கொள்ள முடியும்?
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் என எத்தனையோ உயரிய பதவிகளுக்கான தேர்வுகளில்கூட கடைப்பிடிக்கப்படாத ஆடைக் கட்டுப்பாடு நீட் தேர்வில் மட்டும் ஏன் கடைப்பிடிக்கப்பட வேண்டும்?
நிலத்துக்கு அடியில் இருக்கக்கூடிய கண்ணிவெடியைக்கூட கண்டுபிடித்துவிடக்கூடிய அளவுக்கு நவீன விஞ்ஞானக் கருவிகள் இன்றைக்குப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனால், இந்தக் காலத்திலும்கூட 'தேர்வில், மாணவர்கள் காப்பியடித்துவிடக் கூடாது என்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறோம்' என்று நீங்கள் சொன்னால், அது நியாயம்தானா?''

''நீட் தேர்வில் ஆடைக் கட்டுப்பாடு விதிப்பதுதான் உங்களுக்குப் பிரச்னை. மற்றபடி நீட் தேர்வு குறித்து எந்தவித எதிர்ப்பும் இல்லையா?''
''தமிழ்நாட்டில், நீட் தேர்வு கூடாது என்பது தமிழர்கள் ஒவ்வொருவருடைய மனப் பிரதிபலிப்பு! அதனால்தான் சட்டசபையிலேயே அனைத்துக் கட்சித் தீர்மானமும் இயற்றப்பட்டது. எனவே, நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பதெல்லாம் மத்திய - மாநில அரசுகளுக்கிடையேயான சட்டப் போராட்டம்... அது தனி!
என்னைப் பொறுத்தவரையில், நீட் தேர்வு ஏழை மாணவர்களைப் பாதிக்கிறது. எனவே, நான் நீட் தேர்வுக்கு எதிரானவன். 12-ம் வகுப்புவரை கஷ்டப்பட்டு படித்து, 99 மதிப்பெண் எடுத்தாலும்கூட, என்னால் மருத்துவம் படிக்க முடியாது, நீட் தேர்வில் பாஸானால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்றால், அந்த 12 வருட பள்ளிப் படிப்பு எனக்கு எதற்கு?''
''நீட், கொங்கு நாடு, ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் எனப் பல்வேறு விஷயங்களிலும் பா.ஜ.க-வுக்கு எதிராகக் கோபம் காட்டுகிறீர்களே ஏன்?''
''அப்படியெல்லாம் குறிப்பிட்டு எந்தக் கட்சி மீதும் நான் கோபம் கொள்ளவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்குச் சாதகமான விஷயங்களை மத்திய பா.ஜ.க அரசு செய்யுமேயானால், அதை நான் ஏன் எதிர்க்கப்போகிறேன்?
'இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது' என்று உத்தரப்பிரதேசத்தில் புதிய சட்டம் கொண்டுவருகிறார்கள். இதை பா.ஜ.க இப்போது கொண்டுவரவில்லை... ஏற்கெனவே வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே சொல்லிவந்ததுதான்... இப்போது செயல்படுத்துகிறார்கள்.
ஆனால், இது குறித்து பா.ஜ.க பேச ஆரம்பித்த காலத்தில், நான் எந்தக் கட்சியிலும் சேராமல் வெறும் அரசியல் நோக்கராகத்தான் இருந்துவந்தேன். ஆனால், அப்போதே இந்தத் திட்டத்தை எதிர்த்தேன். ஏனெனில், இது எங்கே போய் முட்டி, எப்படி இடிக்கும் என்பதெல்லாம் நமக்குத் தெரியும்... அதனால் எதிர்க்கிறேன். அப்போதே என் நண்பர் விஜயகாந்த், 'என்னைவிடவும் அதிகமா அரசியலைத் தெரிஞ்சு பேசுறான்' என்று சொல்வார். எனவே, தனிப்பட்ட காரணங்களுக்காக நான் எந்த அரசியல் கட்சியையும் எதிர்க்கவில்லை!''

''கொங்கு மண்டலத்தை தி.மு.க அரசு பாரபட்சமாக நடத்துகிறது என மக்கள் நினைப்பதாக பா.ஜ.க-வினர் சொல்லிவருகிறார்களே?''
''நான் சிறுவயது மாணவனாக இருந்தபோது, 'பாண்டிச்சேரியை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்தபோது, 'அது கூடாது. பாண்டிச்சேரியின் மாநில உரிமைகள் போய்விடும்' என்று கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ஆக பிரிப்பதோ, இணைப்பதோ எதுவானாலும் மக்களின் விருப்பத்துக்கு மாறாக எதையும் செய்யக் கூடாது. 'நீ யார் இதையெல்லாம் சொல்வதற்கு...' என்று இதைக்கூட சிலர் கேள்வி கேட்கலாம்.
நான் பிறந்தது வேண்டுமானால், புதுவையாக இருக்கலாம். ஆனால், என் தாய்மொழி தமிழ். நான் தமிழன்! பல்லாண்டுகாலமாக நான் தமிழ்நாட்டில்தான் வாழ்ந்துவருகிறேன். ஆயிரம்விளக்குத் தொகுதியில்தான் ஓட்டு போடுகிறேன். தமிழ்நாட்டைப் பற்றிப் பேச எனக்குத் தகுதி இல்லையா?
தேர்தலின்போது, என்னுடைய ஓட்டு மட்டும் உங்களுக்கு வேண்டும்; ஆனால், தமிழ்நாட்டைப் பிரிக்கக் கூடாது என்ற என் கருத்தை, உரிமையை எடுத்துச் சொன்னால், 'நீ யார்' என்று கேள்வி கேட்பீர்களா? அப்படியென்றால், பாரதிதாசன்கூட புதுவையில் பிறந்தவர்தான்; அவருக்கு மரியாதை செலுத்த மாட்டீர்களா?''