Published:Updated:

`` கீழடியில் நடந்திருப்பது 10 சதவிகித ஆய்வுதான்!" - அமர்நாத் ராமகிருஷ்ணா

நான் இருக்கும்போதே சில ஆய்வுகள் செய்யக் கோரினோம். அது நடக்கவில்லை. இப்போது தமிழக அரசு நல்ல முயற்சியை எடுத்திருக்கிறது.

அமர்நாத் ராமகிருஷ்ணா
அமர்நாத் ராமகிருஷ்ணா

கீழடி - தமிழர் வரலாற்றை, பெருமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் அற்புத மண். இங்கிருந்து கிடைக்கும் ஆய்வுத் தகவல்கள் புதிய வரலாற்றை எழுத வைக்கும் அளவுக்கு வலுவானவை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு கீழடியில் மேற்கொண்ட நான்கு கட்ட ஆய்வுகளின் முடிவில், கிடைத்திருக்கும் பொருள்களின் தன்மைகளை ஆராய்ந்ததில், `சங்க காலம் என்பது இதுவரை நம் வரலாற்று ஆய்வாளர்கள் கணித்திருப்பதை விடவும் பழைமையானது' என்பதைச் சொல்கிறது.

கீழடி
கீழடி

கீழடியில் தற்போதைய அப்டேட் குறித்து, அங்கு தொல்லியல் துறை கண்காணிப்பாளராக முன்பு பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் பேசினேன்.

``இப்போது செய்திருக்கும் ஆய்வுகள் போதாது; இன்னும் ஆய்வுகள் செய்ய வேண்டும். நான் இருக்கும்போதே சில ஆய்வுகள் செய்யக் கோரினோம். அது நடக்கவில்லை. இப்போது தமிழக அரசு நல்ல முயற்சி எடுத்திருக்கிறது. இதன்மூலம் காலம் பற்றிய புதிய தகவல் கிடைத்திருக்கின்றன. கண்டறிந்த பொருள்களின் காலம் கி.மு 583 என்று கூறுகிறார்கள். இன்னும் பழைமையாகவும் இருக்கலாம்.

கீழடியில் உள்ள நிலம் 110 ஏக்கர். ஆனால், நாம் அதில் 10 சதவிகிதத்தை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துத் தோண்டியுள்ளோம்.
அமர்நாத் ராமகிருஷ்ணா
கீழடி
கீழடி

அடுத்தடுத்து கிடைப்பவற்றையும் ஆராய்ந்து பார்க்கும்போதுதான் முழுமையான விவரம் நமக்குக் கிடைக்கும். கீழடியில் உள்ள நிலம் 110 ஏக்கர். ஆனால், நாம் அதில் 10 சதவிகிதம் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துத் தோண்டியுள்ளோம். இன்னும் பல கள ஆய்வுகள் அமைத்துத் தோண்ட வேண்டும். அதில் எது வேண்டுமானாலும் கிடைக்கலாம். இதுதான் கிடைக்கும் என எதையும் யூகிக்க முடியாது.

நாங்கள் ஆய்வு செய்யும்போது கிடைத்த 2 மீட்டர் கார்பனை ஆய்வுக்கு அனுப்பியபோது கி.மு 200 என்று ஆய்வு முடிவு சொல்லியது. இப்போது இவர்கள் அனுப்பியது 3.53 மீட்டர் ஆழத்தில் உள்ள கார்பன். அதுதான் கி.மு 583 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்திருக்கும் ஆதாரங்களை வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறோம். இனிமேல் கிடைக்கும் ஆதாரங்களை, அறிவியல் பூர்வமாகப் பார்த்தால் நல்ல வரலாற்றுத்தன்மை கிடைக்கும்.
கீழடி
கீழடி

அதற்கு, மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து இந்த ஆய்வினை விரிவுபடுத்த வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் ஆய்வுகள் நிறுத்தப்படக் கூடாது என்பதுதான் என் விருப்பம். நம்முடைய வேர்களைப் பற்றித் தெரிந்தால் நாம் ஆலமரமாக நிற்பதை உணர்ந்துகொள்ள முடியும். நம் பழம்பெருமைகளைத் தேடிக் கண்டறியாவிட்டால், இன்னும் சில காலம் கழித்து, நம்மை யாரென்று கேட்பார்கள்" என்றார்.