Published:Updated:

உங்க வியாபார மாடலைக் காட்டுங்க... அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

தெ.சு.கவுதமன்

அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் நிறுவனங்களின் செயல்பாடு குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் விவரங்களைக் கேட்டுள்ளது.

ஆன்லைன் வர்த்தகம்
ஆன்லைன் வர்த்தகம் ( vikatan )

அமேசான், ஃப்ளிப்கார்ட், சொமட்டோ, ஸ்விக்கி போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பது குறித்த விவரங்களை அனுப்பும்படி மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கேட்டிருக்கிறது.

அமேசான், ஃப்ளிப்கார்ட்
அமேசான், ஃப்ளிப்கார்ட்
vikatan

கடந்த ஜூன் 24-ல் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை 25 ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்திருக்கிறார்கள். ரிலையன்ஸ் ஜியோ, பேடிஎம், ஃப்ளிப்கார்ட், அமேசான், ஸ்நாப்டீல், அர்பன் லேடர், உடான், ஜம்போடெய்ல், இண்டியாமார்ட், சொமட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். அவர்களோடு கலந்துரையாடிய அமைச்சர், அந்த நிறுவனங்களின் கட்டமைப்பு, பிசினஸ் மாடல் குறித்த விவரங்களை அளிக்கும்படி கேட்டிருக்கிறார்.

ஆன்லைன் நிறுவனங்களின் கட்டமைப்பு, சேமிப்பறைகள் எண்ணிக்கை, எவ்வளவு விற்பனையாளர்களுடன் இணைந்து இயங்குகிறார்கள், இந்தியாவில் வேறெந்த துறைகளில் முதலீடு செய்திருக்கிறார்கள் போன்ற விவரங்களை ஒப்படைக்க வேண்டும்.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மேலும், சில நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டிய விவரங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அனைத்து நிறுவனங்களின் விவரங்களும் வரப்பெற்றதும், அவற்றை அமைச்சக அதிகாரிகள் ஆய்வுசெய்து, அடுத்த சந்திப்பில் அதன் அடிப்படையில் விவாதிக்கவுள்ளார்கள்.

ஆன்லைன் நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தகத்துக்கான விதிமுறைகளை மீறுவதாக விற்பனையாளர்கள் தரப்பிலிருந்து பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டுவருகின்றன.

ஆன்லைன் வர்த்தகம்
ஆன்லைன் வர்த்தகம்
vikatan

மேலும், சில்லறை வர்த்தகத்தில் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற பலம் வாய்ந்த ஆன்லைன் நிறுவனங்கள் நுழைந்ததுமே, கடை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு மட்டுமன்றி, சிறிய ஆன்லைன் நிறுவனங்களுக்கும் விற்பனையில் சரிவு ஏற்பட்டது. இத்தகைய சூழலில் ஆன்லைன் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு விசாரித்திருப்பது ஒட்டுமொத்த வணிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.