Published:Updated:

காலி பாக்கெட்டுக்கு காசு; அறியப்படாத அரசு அறிவிப்பு’ - ஆவின் அதிகாரிகளை ஆச்சரியப்படுத்திய காங்கிரஸ் புள்ளி!

கலிலுல்லா.ச

1 மாதத்துக்கான பாக்கெட்டுகளை எடுத்து வைத்தேன். எங்கள் வீட்டுக்கு பால் பாக்கெட் போடுபவர்களிடம் கேட்டேன். `எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆவின் பால் பாக்கெட்
ஆவின் பால் பாக்கெட்

பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு தமிழகத்தில் ஜனவரி மாதம்முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத்தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 14 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் தடைசெய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. மறுசுழற்சி செய்யும் பிளாஸ்டிக் வகைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகள் மறுசுழற்சிக்கு உகந்தவையாக அறிவிக்கப்பட்டது. அதன்அடிப்படையில் நாம் போகின்றபோக்கில், தூக்கி ஏறியும், ஆவின் பாக்கெட்டுகளை `எங்களிடம் கொண்டுவந்து கொடுத்தால் காசு கொடுக்கிறோம்’ என்று அரசு அறிவித்துள்ளது.

அரசு அறிவிப்பு
அரசு அறிவிப்பு

ஆனால், இதுகுறித்து பெரும்பாலான மக்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லாததால், யாரும் பால் பாக்கெட்டுகளைக் கொண்டுவந்து கொடுக்க முன்வருவதில்லை. இந்நிலையில், `இதை நாம் ஆரம்பித்து, மக்களிடம் எடுத்துச் செல்வோம்’ என்று கூறி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கா நாராயணன் தனது ட்விட்டரில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில் 210 பால் பாக்கெட்டுகளைக் கொடுத்து 21 ரூபாயைப் பெற்றுக்கொண்டேன் என்று தெரிவித்திருந்தார். அவரிடம் பேசினோம். ``அரசாங்கத்திலிருந்து 3 மாதத்துக்கு முன்னதாக ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆவின் சார்பில் விநியோகிக்கப்படும் பொருள்களுக்கான காலி பாக்கெட்டுகள் வாங்கப்படும் என்று அதில் குறிப்பிடபட்டது. ஆனால், இது பலருக்குத் தெரியவில்லை. எங்கள் வீட்டில் வரும் பேப்பர் வாங்கும் நபர்களிடம் இதுகுறித்துப் பேசினேன். அவர்களிடம் கேட்டபோது, `இதை நாங்கள் வாங்க மாட்டோம்’ என்று கூறிவிட்டனர்.

அமெரிக்கை நாராயணன்
அமெரிக்கை நாராயணன்

பிறகு, என் வீட்டில் வாங்கும் ஆவின் பால்பாக்கெட்டுகளைக் கழுவி சேமித்து வைக்க ஆரம்பித்தேன். 1 மாதத்துக்கான பாக்கெட்டுகளை எடுத்து வைத்தேன். எங்கள் வீட்டுக்கு பால் பாக்கெட் போடுபவர்களிடம் கேட்டேன். `எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை’ என்று அவர்கள் தெரிவித்தனர். பிறகு, பல ஆவின் ஸ்டோர்களுக்குச் சென்றேன். தனியார் நடத்துவதில்லாமல், அரசு நடத்தும் ஆவின் ஸ்டோருக்குச் சென்றேன். அவர்களும் தெரியவில்லை என்று கையை விரித்துவிட்டனர். பின்னர், பெசன்ட்நகரில் இருக்கும் மாடியில் இருக்கும் ஆவின் அலுவலகத்துச் சென்று விசாரித்தேன். `ஆமாங்க! அரசு இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு பால் பாக்கெட்டுக்கும் 10 பைசா தருகிறோம். சுத்தம் செய்து, 100 ஆக கொடுத்தால் நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்’ என்றனர். 210 எடுத்துச் சென்றேன். அங்கிருக்கும் பதிவேட்டில், யார் யார் கொடுத்தார்கள் என்ற பதிவு இருக்கிறது. அதில் பார்க்கும்போது, இம்மாதத்தில் பெசன்ட் நகரிலிருந்து என்னையும் சேர்த்து 3 பேர் மட்டும் கொடுத்துள்ளனர். அதில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும் அவர்கள் கூறினர். இது யாருக்கும் தெரியவில்லை; அரசாங்கம் இது தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்துவதில்லை. எங்கு விற்க வேண்டும், எவ்வளவு காசு கொடுப்பார்கள் என்பவையெல்லாம் எந்த மக்களுக்கும் தெரியவில்லை.

பதிவேடு
பதிவேடு

அரசு செய்யும் நல்ல காரியம்; ஆனால் சீக்ரெட்டாகச் செய்கிறது. கடமைக்காகச் செய்கிறார்களே தவிர, உணர்வுபூர்வமாக இருப்பதில்லை. அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இதில் பங்குண்டு. உணர்வுபூர்வமாக யாரும் செய்வதில்லை. மக்கள் இதை அறிந்துக்கொண்டு மறுசுழற்சிக்கு உதவ வேண்டும்” என்றார். இது தொடர்பாக ஆவின் தரப்பில் பேசும்போது, ``மொத்தமாக கொண்டுவந்து மண்டல அலுவலகங்கள், ஹைடெக் பார்களில் கொடுத்தால் வாங்கிக்கொள்வார்கள். ஒரு பாக்கெட்டுக்கு 10 பைசா வீதம் வழங்கப்படுகிறது. இதுதொடர்பான விழிப்புணர்வெல்லாம் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன” என்று முடித்தார்.