Published:Updated:

''ராஜீவ் படுகொலை குற்றவாளிகளை ஏன் தூக்கில் போடவில்லை?'' - காங்கிரஸைக் கேட்கிறார் அமெரிக்கை நாராயணன்

அமெரிக்கை நாராயணன்

''மதரீதியாக சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது காங்கிரஸ் கட்சி வலுவாக குரல் எழுப்புவதுபோல், பெரும்பான்மை மதத்தினரான இந்துக்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதும் எழுப்பியாக வேண்டும்'' என்கிறார் அமெரிக்கை நாராயணன்.

''ராஜீவ் படுகொலை குற்றவாளிகளை ஏன் தூக்கில் போடவில்லை?'' - காங்கிரஸைக் கேட்கிறார் அமெரிக்கை நாராயணன்

''மதரீதியாக சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது காங்கிரஸ் கட்சி வலுவாக குரல் எழுப்புவதுபோல், பெரும்பான்மை மதத்தினரான இந்துக்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதும் எழுப்பியாக வேண்டும்'' என்கிறார் அமெரிக்கை நாராயணன்.

Published:Updated:
அமெரிக்கை நாராயணன்

(தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான அமெரிக்கை நாராயணனின் விறுவிறுப்பான பேட்டியின் தொடர்ச்சி இங்கே...)

முதல் பாகத்தை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்...

'திமுக-வைப் பார்த்துக் காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டும்!'' - அமெரிக்கை நாராயணன் அட்வைஸ்

''ராஜீவ் படுகொலைக்கு நியாயம் கேட்கிற நீங்கள், மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றவர்களுக்கு எதிராக என்ன பேசியிருக்கிறீர்கள்?''

''மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்றவர்களில் ஒருவருக்கு தூக்குத் தண்டனையும், மற்றொருவருக்கு ஆயுள் தண்டனையும் கொடுக்கப்பட்டது. இதில், தூக்குத் தண்டனைக் கைதியை தூக்கில் ஏற்றிவிட்டனர். ஆயுள் தண்டனைக் கைதியைப் பல வருட சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்துவிட்டார்கள். இதுதான் வரலாறு.

ஆனால், ராஜீவ் படுகொலை வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால், நான் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டிருக்கப்போகிறேன்? எனவே, இந்தக் கேள்வியே மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிற முயற்சி!''

சோனியா காந்தி
சோனியா காந்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தேர்தல் தோல்வியையடுத்து, ஐந்து மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களை ராஜினாமா செய்யச் சொல்லியிருக்கும் நடவடிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''கட்சியின் தோல்விக்கு தலைமை உட்பட எல்லோரும் பொறுப்பேற்க வேண்டும். வெற்றி வரும்போது, உரிமை கொண்டாடுகிற தலைமை தோல்விக்கு மட்டும் சுற்றியிருப்பவர்களை பலியாக்குவது சரியல்ல.... ஏனெனில், அந்த மாநிலத் தலைவர்களை நியமித்ததும் தேசியத் தலைமைதானே?

பஞ்சாப் அரசியலை எடுத்துக்கொண்டால்கூட, அமரீந்தர் சிங்கை நீக்குவதாக முடிவெடுத்திருந்தால், நீண்ட நாட்களுக்கு முன்பே நீக்கியிருக்க வேண்டும்.... இப்படித் தேர்தலையொட்டி நீக்கியிருக்கக் கூடாது. வேறு கட்சியிலிருந்து வந்த சித்துவை இப்படித் திணித்திருக்கவும் கூடாது. தலித் ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது சரி. ஆனால், அறிவித்த நேரமும், அறிவிக்கப்பட்ட நபரும் தவறானவர்கள் என்பதைத் தேர்தல் முடிவு சொல்லிவிட்டது.

மகாத்மா காந்தியின் சீடர் என்று தன்னைச் சொல்லிக்கொள்கிற ராகுல் காந்தி, மகாத்மாவைப் போன்று அடுத்தகட்டத் தலைவர்களை இந்த 20 ஆண்டுகளில் கட்சியில் உருவாக்கித் தரவில்லையே!''

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''ஓர் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்படவில்லை என்கிறீர்களா?''

''இன்றைக்கு 'காஷ்மீர் ஃபைல்ஸ்' என்றொரு படம் வெளிவந்திருக்கிறது. இந்தப் படத்தைப் பார்க்கச்சொல்லி பா.ஜ.க தரப்பிலிருந்து ஓசியிலேயே அழைத்துப்போய்க் கொண்டிருக்கிறார்கள்.

'இந்த வெறுப்பு அரசியலைத் தவிர, உருப்படியாக ஏதாவது பண்ண மாட்டீர்களா' என்ற அர்த்தத்தில் சசிகாந்த்தும்கூட தன் எதிர்ப்பைப் பதிவிட்டிருக்கிறார். உண்மைதான். பா.ஜ.க வெறுப்பு அரசியலைத்தான் பண்ணிவருகிறது. ஆனால், இந்த விஷயத்தில், வரலாற்றிலிருந்து ஆதாரத்தோடு பதிலடி கொடுக்க வேண்டும். அதாவது, காஷ்மீரில் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட அந்தச் சம்பவம் 1990-ல்தான் நடந்திருக்கிறது. அப்போது பா.ஜ.க ஆதரவுடன் வி.பி.சிங் தலைமையிலான ஆட்சிதான் மத்தியில் நடைபெற்றுவந்தது. இந்த வரலாற்று உண்மையைச் சொல்லியல்லவா சசிகாந்த் பதிலடி கொடுத்திருக்க வேண்டும்! ஆக, வரலாற்றைத் தெரியாத இவர்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.''

சசிகாந்த் செந்தில்
சசிகாந்த் செந்தில்

''காங்கிரஸ் கட்சி செய்யத் தவறிய விஷயங்கள் என்று எதைச் சொல்வீர்கள்?''

''தி.க-வும் பா.ஜ.க-வும் வெறுப்பு அரசியல் என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்கள். பெரும்பான்மைச் சமூகத்தை எதிரியாகச் சித்திரித்து சிறுபான்மைச் சமூகத்தின் ஆதரவைத் திரட்டுகிறது தி.க. அதுவே பா.ஜ.க-வோ, சிறுபான்மை மதத்தினரை எதிரிகளாகச் சித்திரித்து பெரும்பான்மை மதத்தினரின் வாக்குகளைச் சேகரித்துவருகிறது.

அடித்தட்டு மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்துவருகிறது. ஆனால், இந்துக்களுக்கான பிரச்னைகளில் காங்கிரஸ் கட்சியின் குரல் உறுதியாக ஒலிப்பதில்லை. இதை பா.ஜ.க தனக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு அரசியல் செய்துவருகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தவறிழைக்கப்பட்டால், அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதுபோல், ஒரு வன்னியர், கவுண்டருக்கு தவறு இழைக்கப்பட்டாலும் குரல் கொடுக்க வேண்டும்தானே! இதேபோல், மதரீதியாகவும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது காங்கிரஸ் கட்சி, வலுவாக குரல் எழுப்புவதுபோல், பெரும்பான்மை மதத்தினரான இந்துக்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதும் எழுப்பியாக வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் மதம், சாதிகளுக்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் குரல் கொடுத்துவருகிறேன்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டு சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து வாக்களித்திருந்ததுதானே?''

''ஆமாம்.... ஆனால், அதைக்கூட மக்களிடம் எடுத்துச்சொல்லி வாக்குக் கேட்க காங்கிரஸ் கட்சிக்குத் தெரியவில்லையே... ஏழை, எளிய மக்களுக்கும் தரமான கல்வியை உறுதி செய்யும் 'கல்வி உரிமைச் சட்டம்' கொண்டுவந்தது காங்கிரஸ் ஆட்சிதான். அதையும் மக்களிடம் எடுத்துச்சொல்லி வாக்குகளாக மாற்றும் வித்தை காங்கிரஸுக்குத் தெரியவில்லை. 2ஜி ஊழல் வழக்கில், காங்கிரஸ் தரப்பிலான நியாயத்தைச் சரிவர எடுத்துச்சொல்லாததால்தானே பா.ஜ.க அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி பிரசாரம் செய்து வெற்றி கண்டது. சுருக்கமாகச் சொன்னால், காங்கிரஸ் கட்சியில் வருகிற மாட்டைக் கட்டுவதும் கிடையாது, போகிற மாட்டைப் பிடிப்பதும் கிடையாது!''

''கட்சி விரோத நடவடிக்கையில் நீங்கள் ஈடுபட்டிருப்பதாக கே.எஸ்.அழகிரி உங்களிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்தானே?''

''ஆமாம்... கடிதம் மூலம் என்னிடம் விளக்கம் கேட்டிருக்கிறார் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி. கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த என்னை அந்தப் பொறுப்பிலிருந்தும் விலக்கிவைத்திருக்கிறார் கே.எஸ்.அழகிரி. அதற்கு அவருக்கு உரிமை உண்டு.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

அதேசமயம், 'அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் ஒருவரைக் கட்சியிலிருந்து விலக்குவதற்கான நோட்டீஸ் கொடுப்பதற்கு மாநிலத் தலைமைக்கு அதிகாரம் இல்லை. இந்த விதிமுறை தெரிந்தும்கூட கே.எஸ்.அழகிரி இப்படியொரு விளக்கத்தைக் கேட்டிருக்கிறார் என்றால் அதுதான் கட்சி விரோத நடவடிக்கை' என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவரேகூட இது சம்பந்தமாக அறிக்கையும் வெளியிட்டுள்ளார். மற்றபடி இது குறித்து நான் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. கே.எஸ்.அழகிரி கேட்டுள்ள விளக்கத்தை நானும் எழுத்து மூலமாக அளிக்கவிருக்கிறேன்.''

''நேரடியாக காங்கிரஸ் கட்சித் தலைமை குறித்து விமர்சிக்கிற நீங்கள் இனியும் காங்கிரஸில் தொடர முடியுமா?''

''இன்றுவரையில் நான் கட்சியில்தான் இருந்துவருகிறேன்... இனியும் இருக்கவே விரும்புகிறேன். ஆனால், கட்சி என்னை விரும்புகிறதா என்பதை கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism