Published:Updated:

குடியரசுத் தலைவரிடம் முறையிடத் தயாராகும் திமுக & கோ; டெல்லி சென்று திரும்பிய ஆளுநர் -என்ன நடக்கிறது?

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி

தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ள நிலையில், ஆளுநரின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவரிடம் முறையிடத் தயாராகும் திமுக & கோ; டெல்லி சென்று திரும்பிய ஆளுநர் -என்ன நடக்கிறது?

தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ள நிலையில், ஆளுநரின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆட்சியிலிருக்கும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமிடையே பனிப்போர் நிலவி வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்வுகளில், புதிய கல்விக் கொள்கை, திருக்குறள், சனாதனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி வருவதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு ஆளுநரும் எதையும் பொருட்படுத்தாமல் எதிர்வினை ஆற்றி வருகிறார். கடந்த 23-ம் தேதியன்று நடந்த கோவை கார் வெடிப்புச் சம்பவம் குறித்து ‘கோவை வழக்கை என்.ஐ.ஏ-வுக்கு வழங்கியதில் ஏன் இந்த கால தாமதம்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார் ஆளுநர். இதற்கு தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் ‘என்ன குறை கண்டார் ஆளுநர்?’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிடப்பட்டிருந்தது.

ஆளுநர்  ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

அதில், ``அக்டோபர் 23-ம் தேதி காலை சம்பவம் நடந்துள்ளது. அக்டோபர் 26-ம் தேதியன்று காலை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. டெல்லி நீதிமன்ற வளாக வெடிவிபத்து நடந்த 23.12.2021, என்.ஐ.ஏ வழக்கு பதிந்த நாள் 13.1.2022; மேற்கு வங்க மாநிலம், கெஜூரி குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த நாள் 4.1.2022, என்.ஐ.ஏ வழக்கு பதிந்த நாள் 25.1.2022; மேற்கு வங்க மாநிலம், நைஹைதி குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த 27.1.2022, என்.ஐ.ஏ வழக்கு பதிந்த நாள் 8.2.2022.." என்று பல்வேறு வழக்குகளைப் பட்டியலிட்டு, ``மூன்று நான்கு மாதங்கள் கழித்து எல்லாம் இந்த வழக்கை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்துள்ளார்கள். ஆனால் தமிழக அரசு சம்பவம் நடந்த மூன்றாவது நாளே வழக்கை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்திருக்கிறது. இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்? பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதில் உறுதியாக இருக்கிறது தி.மு.க-வும், அதன் ஆட்சியும். அதன்மீது களங்கம் ஏற்படுத்தும் எண்ணத்தோடு ஆளுநர் இதுபோன்ற கருத்துகளை பொதுவெளியில் பொறுப்பற்று பேசக்கூடாது. அவர் இன்னொரு அண்ணாமலையாக வேண்டாம். தமிழக பாஜக தாங்காது" என்று கட்டுரை வெளியிட்டிருந்தது.

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

இதற்கு முன்னதாக, ``தமிழக ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் பேசுவதாக இருந்தால், அவர் தனது பதவியைவிட்டு விலகி கருத்துகளைச் சொல்லட்டும்" என்று தி.மு.க கூட்டணிக் கட்சிகள் அறிக்கை விட்டிருந்த நிலையில், தி.மு.க எம்.பி, டி.ஆர்.பாலு, “திமுக மற்றும் அதனுடன் ஒத்த கருத்துடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற மனுவைப் படித்துப் பார்த்துக் கையெழுத்திட வேண்டும்” என்று கடிதம் எழுதியிருந்தார். இதன்படி எம்.பி-க்கள் பலரும் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று திரும்பியிருக்கிறார். தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ள நிலையில், ஆளுநரின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஆளுநர் தரப்பில் நாம் விசாரித்தபோது, “இது வழக்கமான மீட்டிங்தான். ஓர் அரசு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தார், அவ்வளவுதான்” என்கிறார்கள்.