Published:Updated:

அமித் ஷா அஜெண்டா! - அச்சத்தில் அ.தி.மு.க?

அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
News
அமித் ஷா

பா.ஜ.க கைகாட்டும் அரசுதான் அடுத்து தமிழகத்தில் ஆட்சி நடத்தும். அடுத்த அமைச்சரவையில் பா.ஜ.க பங்கேற்கும்.

“அமித் ஷாவின் வருகை, எதிர்க்கட்சிகளுக்கு அச்சத்தைக் கொடுக்கிறது. அமித் ஷாவின் வருகை, தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று பரபரக்கிறார் பா.ஜ.க-வின் தமிழகத் தலைவர் எல்.முருகன். அவர் சொல்வதுபோல அமித் ஷாவின் வருகை, எதிர்க்கட்சிகளுக்கு அச்சத்தைக் கொடுக்கிறதோ இல்லையோ, அ.தி.மு.க-வை ஏகத்துக்கும் பதறவைத்திருக்கிறது என்கிறார்கள் பா.ஜ.கவின் மூத்த நிர்வாகிகள்.

நவம்பர் 21-ம் தேதி அன்று, தமிழக அரசின் அழைப்பின் பெயரில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்துக்கு வருகை தரவிருக்கிறார். `அரசு முறைப் பயணம்’ என்று மத்திய அரசுத் தரப்பில் இந்தப் பயணத்தைக் குறிப்பிட்டாலும், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான முக்கியமான முன்னேற்பாடுகளும் இந்தப் பயணத்தில் திட்டமிடப்பட்டிருக்கின்றனவாம்.

‘சமீபகாலமாக, அ.தி.மு.க - பா.ஜ.க இடையே நிலவும் பல்வேறு பிணக்குகளைச் சரிசெய்யும் பயணமாக இருக்குமா அல்லது அ.தி.மு.க கூட்டணிக்கு முடிவுரை எழுதும் பயணமாக இது அமைந்துவிடுமா?’ என்கிற கேள்விகளுடன், அமித் ஷாவின் பயணத்தை அ.தி.மு.க அரசு எப்படி அச்சத்தோடு பார்க்கிறது என்பதற்கு உதாரணமாக, அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட சமீபத்திய பத்திரிகைச் செய்தியைச் சுட்டிக்காட்டுகிறார்கள். கடந்த 17-ம் தேதி அன்று, தமிழக அரசின் செய்தித்துறை சார்பில், பத்திரிகைச் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்கள் தலைமையில், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்கள், ரூபாய் 400 கோடி மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்கத் திட்டத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து, ரூபாய் 67,378 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்” என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

அமித் ஷா அஜெண்டா! - அச்சத்தில் அ.தி.மு.க?

உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலேயே வராத திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக எதற்கு அமித் ஷா வர வேண்டும் என்பது முதல் கேள்வி. மேலும், அந்த நிகழ்வுக்கு இவ்வளவு முக்கியத்துவத்தைத் தமிழக அரசு ஏன் தர வேண்டும் என்பது இரண்டாவது கேள்வி. அமித் ஷாவின் வருகையால் தங்களுக்கு எந்தச் சிக்கலும் வந்துவிடக் கூடாது என்பதில் அ.தி.மு.க அரசு தெளிவாக இருக்கிறது. `அதற்கே இந்த ஏற்பாடு’ என்று ஒற்றை பதிலைத் தருகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

கடந்த சில மாதங்களாகவே பா.ஜ.க விவகாரத்தில் சில எதிர்மறையான போக்குகளைத் தொடர்ந்து கையாண்டுவருகிறது அ.தி.மு.க அரசு. குறிப்பாக, பெரியார் சிலைக்குக் காவி வண்ணம் பூசியவர்கள்மீது நடவடிக்கை, வேல் யாத்திரைக்குத் தடை, மருத்துவக் கல்வி உள் இடஒதுக்கீட்டில் அரசாணை வெளியிட்டது எனத் திராவிடக் கட்சிகளுக்குரிய பாணியைக் கையிலெடுத்து வருகிறார் எடப்பாடி. இது பா.ஜ.க கண்ணை உறுத்த ஆரம்பித்திருக்கிறது. மேலும், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழில், ‘கறுப்பர் கூட்டம் என்றாலும் காவிக் கூட்டம் என்றாலும் நடவடிக்கை ஒன்றுதான்’ என்கிறரீதியில் வெளியிடப்பட்ட கருத்துகளை பா.ஜ.க தரப்பு ரசிக்கவில்லை. இதுகுறித்து வெளிப்படையாகவே பா.ஜ.க தலைவர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்திருக் கிறார்கள்.

“பா.ஜ.க கைகாட்டும் அரசுதான் அடுத்து தமிழகத்தில் ஆட்சி நடத்தும். அடுத்த அமைச்சரவையில் பா.ஜ.க பங்கேற்கும்” என்று அந்தக் கட்சியின் தலைவர்கள் வரிசையாக அ.தி.மு.க-வுக்கு அச்சமூட்டும் வகையில் கருத்து தெரிவித்துவருகிறார்கள். அதாவது, வரும் சட்டமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களில் பா.ஜ.க களம் கண்டு, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அரசில் பங்கேற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், “தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை தனிக்கட்சி மட்டுமே ஆட்சியில் இருந்து வந்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த முறையும் அதே நிலைதான் தொடரும்” என்று சொல்லி பா.ஜ.க-வின் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது அ.தி.மு.க தரப்பு. இந்தக் கருத்து மோதல்கள் தொடர்ச்சியாக நடந்துவரும் நிலையில், அமித் ஷாவின் தமிழகப் பயணம் முடிவானதும், தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடித்திருக்கிறது.

கே.டி.ராகவன் - வைகை செல்வன்
கே.டி.ராகவன் - வைகை செல்வன்

அமித் ஷா தன் தமிழகப் பயணத்தில், அரசுத் திட்டங்களைத் தொடங்கிவைப்பதோடு, தமிழக முதல்வரையும் துணை முதல்வரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். அதோடு பா.ஜ.க-வின் மாநில நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தவிருக்கிறார். அதன் பிறகு, அ.தி.மு.க கூட்டணி குறித்து ஒரு முழுமையான செயல்திட்டம் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “ஆனால், அமித் ஷாவின் இந்தப் பயணத்தில் கூட்டணி குறித்து எந்த முடிவும் எட்டப்படாது. எடப்பாடி கூட்டணி குறித்து எந்த முடிவையும் இப்போது வெளியிடமாட்டார்” என்கிறார்கள் அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்கள்.

“உண்மையில் எடப்பாடி மட்டுமல்ல... அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் பலருமே பா.ஜ.க-வைக் கூட்டணிக்குள் வைத்துக்கொள்ளத் தயாராக இல்லை. வேறு வழியே இல்லாமல் கூட்டணி அமைந்தாலும், காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி எப்படி அமையுமோ, அதேபோன்றே பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதாவது, அ.தி.மு.க-வாகப் பார்த்துக் கொடுக்கும் சீட்களை பா.ஜ.க வாங்கிக்கொள்ள வேண்டும். அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியாகவே இது அறிவிக்கப்படும். ஒருபோதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இது கருதப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஒருவேளை அ.தி.மு.க-வுக்கு அழுத்தம் கொடுத்து பா.ஜ.க பயமுறுத்தும் பட்சத்தில், கூட்டணியைவிட்டு வெளியேறவும் அ.தி.மு.க தயாராகவே இருக்கிறது. ஜனவரி மாதம் வரை கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்பதே எடப்பாடியின் திட்டமாக இருக்கிறது. அமித் ஷா வருகையால் அ.தி.மு.க அச்சப்பட வேண்டிய நிலையில் இல்லை. உண்மையில், அமித் ஷாவின் வருகை பற்றி தமிழக பா.ஜ.க தலைவர்களுக்குத் தெரிவதற்கு முன்பாகவே தமிழக அரசுக்குத் தெரிந்துவிட்டது. தமிழக பா.ஜ.க தலைவர்கள் பொதுவெளியில், மீடியாவில் பேசுவது போன்று கூட்டணி குறித்தோ, அ.தி.மு.க குறித்தோ எந்தக் கருத்தையும் தைரியமாக அமித் ஷாவிடம் பேச முடியாது. கூட்டணி குறித்து அமித் ஷாவும் எடப்பாடியும் மட்டுமே பேசி முடிவெடுப்பார்கள். அதுவும்கூட இந்தச் சந்திப்பில் வாய்ப்பில்லை” என்கிறார்கள் அ.தி.மு.க தரப்பினர்.

அமித் ஷா அஜெண்டா! - அச்சத்தில் அ.தி.மு.க?

“அமித் ஷா வருகைக்கு தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்படும் வரவேற்புதான், அவரது வருகை அ.தி.மு.க-வுக்கு எந்த அளவுக்கு அச்சத்தைத் தந்திருக்கிறது என்பதற்கான சான்று. அ.தி.மு.க தரப்பு எங்களுடன் கூட்டணியைத் தொடர விரும்பவில்லை என்பதை ஏற்கெனவே மத்திய அரசின் உளவுத்துறை அமித் ஷாவின் காதுக்குக் கொண்டு சென்றிருக்கிறது. அதற்காக இந்தப் பயணத்திலேயே கூட்டணி குறித்தெல்லாம் அவர் பேசுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், கூட்டணிக்குள் நிலவும் பூசல்கள் குறித்து நிச்சயம் பேசுவார். அதோடு, தமிழக அரசியல் களம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவும் இதை ஒரு வாய்ப்பாக அவர் எடுத்துக்கொள்வார்” என்கிறார்கள் பி.ஜே.பி தரப்பினர்.

`அமித் ஷா வருகைக்கும், அ.தி.மு.க கூட்டணிச் சிக்கலுக்கும் சம்பந்தம் உண்டா?’ என்று பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் கே.டி.ராகவனிடம் கேட்டபோது, “அமித் ஷாவின் வருகை அரசுப் பயணமாக இருந்தாலும், பா.ஜ.க மாநில நிர்வாகிகளுடன் அவர் நடத்தும் ஆலோசனையில் கண்டிப்பாக அரசியல் விவகாரங்கள் இருக்கும். அந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க கூட்டணி ஒப்புதல் குறித்தெல்லாம் இப்போது பேசப்பட வாய்ப்பில்லை. முழுக்க முழுக்க எங்கள் கட்சியின் செயல்திட்டங்கள், தேர்தலுக்கு கட்சித் தரப்பில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள், மாநில அளவில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மட்டுமே பேச வாய்ப்பிருக்கிறது. அதோடு, கூட்டணி குறித்து எங்கள் கருத்துகளை அவர் கேட்டுக்கொள்வார். கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய அவசர நிர்பந்தம் இப்போது இல்லை” என்று பதிலளித்தார்.

அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனிடம் கேட்டபோது “அரசு நிகழ்விலும், அவர்களின் கட்சி நிகழ்விலும் கலந்துகொள்ள அவர் வருகிறார். அதற்கும் அ.தி.மு.க-வுக்கும் என்ன இருக்கிறது... கூட்டணி குறித்து, தேவைப்படும் நேரத்தில் தலைமை முடிவெடுக்கும். அதற்கான காலம் இன்னும் வரவில்லை என்றே நினைக்கிறேன்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

“முருகன் சொன்னதுபோல, அமித் ஷாவின் வருகை அச்சமூட்டுவதாக, மாற்றங்களை நிகழ்த்துவதாக இருக்காது.

அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழக முதல்வர் தரப்பிலிருந்து சில கோரிக்கைகள் அமித் ஷாவிடம் வைக்கப்படவிருக்கின்றன. அரசுத் தரப்பாகவே அந்தக் கோரிக்கையும் இருக்கும். இவற்றைத் தாண்டி, இந்தப் பயணத் திட்டத்தில் வேறு எந்தச் சிறப்பும் இருக்காது” என்று சிம்பிளாகச் சொல்கிறார்கள் இரண்டு கட்சிகளுக்குமே நெருக்கமான புள்ளிகள்.

“சுருக்கமாகச் சொல்வதானால், அமித் ஷாவின் வருகை 1000 வாலா பட்டாசு அல்ல... புசுபுசு கம்பி மத்தாப்பு!” என்கிறார்கள்.