Published:Updated:

``எங்களை எதிர்த்துத் தீர்மானம் போடப்போறீங்களா?" - வெடித்த அமித் ஷா... மிரண்ட தமிழக அமைச்சர்கள்!

அமித் ஷா
அமித் ஷா

``எதிர்க்கட்சிகள் செய்யும் குழப்படி வேலைகளுக்கு நீங்களும் பலியாகப் போறீங்களா? இல்லை, மக்கள்கிட்ட சி.ஏ.ஏ, என்.பி.ஆர் பற்றி விளக்கம் கொடுக்கப் போறீங்களா... நீங்களே முடிவு செஞ்சுக்கோங்க" என்று அமித் ஷா வெடிக்கவும் அமைச்சர்கள் மிரண்டு போயுள்ளனர்.

ஏற்கெனவே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளை எல்லாம் திடீரென ரத்து செய்துவிட்டு, நேற்று (மார்ச் 2-ம் தேதி) அமைச்சர்கள் தங்கமணியும் ஜெயக்குமாரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், கன்னியாகுமரியில் நடைபெற்ற சி.ஏ.ஏ ஆதரவு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகத் தமிழகம் வந்திருந்த பி.ஜே.பி மேலிடப் பார்வையாளர் முரளிதர ராவ், இரவு 8 மணிக்கு மேல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Donald Trump at Namaste Trump Event
Donald Trump at Namaste Trump Event
AP / Alex Brandon
`ஸ்டாலின் இந்த சவாலை ஏற்றுக்கொள்வாரா?' -சி.ஏ.ஏ ஆதரவு கூட்டத்தில் முரளிதர்ராவ் காட்டம்

தமிழகத்தின் நலன் சார்ந்த விஷயங்களுக்காக முதல்வரின் ஆலோசனையின்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தாலும், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ போராட்டம் குறித்தே பேச்சுவார்த்தை இருந்ததாம். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா வந்திருந்த சமயத்தில், சி.ஏ.ஏ. ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே டெல்லியில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் 47 பேர் இறந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, நாடெங்கிலும் நடைபெறும் சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களை ஒடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடும் அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 16-ம் தேதி சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டோம்'' என்று உறுதியளித்ததோடு, போராட்டத்தைக் கைவிடுமாறும் கோரிக்கை விடுத்தார். ஆனால், பேச்சுவார்த்தைக்குச் சென்ற முஸ்லிம் அமைப்புகள் இதை ஏற்கவில்லை. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரையில் போராட்டத்தைக் கைவிட முடியாது என்று தீர்மானமாகக் கூறிவிட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மார்ச் 9-ம் தேதி மானியக் கோரிக்கை விவாதத்துக்காக சட்டமன்றம் கூடவிருக்கும் நிலையில், சட்டமன்றத்தில் என்.ஆர்.சி, என்.பி.ஆர்-க்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றலாமா எனவும் அ.தி.மு.க தலைமை யோசிக்கத் தொடங்கியது. அமித் ஷாவைச் சந்தித்து தங்கள் முடிவு குறித்து விளக்க, மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மூலமாக எடப்பாடி பழனிசாமி தரப்பு முயன்றது. மார்ச் 2-ம் தேதி மாலை டெல்லி வருமாறு அமித் ஷாவிடம் இருந்து உத்தரவு வர, அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் இருவரும் மின்னல் வேகத்தில் டெல்லி பறந்தனர்.

தங்களின் சட்டமன்றத் தீர்மானம் ஐடியா குறித்து அமித் ஷாவிடம் அவர்கள் விளக்கியுள்ளனர். `சி.ஏ.ஏ சட்டத்தைத் திரும்பப் பெற பரிசீலிக்கலாமே?' என அமைச்சர்கள் கேட்டதும் அமித் ஷாவின் முகம் கோபத்தில் வெடித்துவிட்டதாம். ``உங்க இஷ்டத்துக்கு எல்லாம் சட்டத்தை மாத்திகிட்டு இருக்க முடியாது. இது நேஷனல் பாலிசி. இன்னைக்கு நீங்க கேட்டீங்கன்னு சட்டத்தை மாத்தினா, நாளைக்கு ஆள் ஆளாக்கு கிளம்பி வந்திருவாங்க. சி.ஏ.ஏ கொண்டுவந்தது வந்ததுதான். உங்கள் மாநிலத்தில சட்டம் ஒழுங்கு ரொம்ப மோசமாகிட்டே போகுது. அதை முதல்ல கவனிங்க.

அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி
அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி

என்.ஆர்.சி கொண்டுவரப் போகும் திட்டம் ஏதுமில்லைன்னு பிரதமரே நேரடியா சொன்னப்புறம், அதை எதிர்த்து தீர்மானம் போடப்போறீங்களா? தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) என்பது இந்திய குடிமக்கள் அனைவரையும் பதிவு செய்யும் ஒரு நடவடிக்கைதான். எதிர்க்கட்சிகள் செய்யும் குழப்படி வேலைக்கு நீங்களும் பலியாகப் போறீங்களா. இல்லை, மக்கள்கிட்ட சி.ஏ.ஏ, என்.பி.ஆர் பத்தி விளக்கம் கொடுக்கப்போறீங்களா... நீங்களே முடிவு செஞ்சுக்கோங்க" என்று அமித் ஷா வெடிக்கவும் அமைச்சர்கள் மிரண்டு போயுள்ளனர்.

அ.தி.மு.க-வுக்கு உள்ள மூன்று மாநிலங்களவை எம்.பி சீட்டில், தனக்கு ஒரு சீட்டை எப்படியாவது பெற்றுவிட வேண்டுமென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கடுமையாக முயன்று வருகிறார். பிரதமர் அலுவலகம் வரையில் இதற்கான மூவ் நடைபெறுகிறது. அமித் ஷாவுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், மாநிலங்களவை தேர்தல் சீட் தொடர்பாகவும் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி
அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி
`நீங்கள் சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாகச் சத்தமாகப் பேச வேண்டும்!’ - மேற்குவங்கத்தில் அமித் ஷா

அதேவேளையில், இங்கு எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த முரளிதர ராவும் அமித் ஷாவின் கருத்தையே வலியுறுத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவது குறித்து அ.தி.மு.க தலைமை மறுபரிசீலனை முடிவுக்குச் சென்றுள்ளது. பி.ஜே.பி.யை உதறிவிடலாம் எனச் சில அமைச்சர்களும், உதறிவிட்டால் நமக்கு பிடிப்பு இல்லை என மீதி அமைச்சர்களும் இரண்டாகப் பிளவுப்பட்டு நிற்பதால், முடிவு எடுக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது. இப்போது அவருக்கு இருக்கும் தலைவலியே தி.மு.க செய்யும் எதிர் பிரசாரங்கள்தான். இன்று சென்னை அவ்வை சண்முகம் சாலையில் நடைபெற்ற அ.தி.மு.க பேச்சாளர்களுக்கான பேச்சு பட்டறைக் கூட்டத்தில் அவர் பேசும் போதுகூட, எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்குமாறு கூறியுள்ளார்.

வருகிற முழு மானியக் கோரிக்கை விவாதக் கூட்டத்தொடர் கடும் அமளிதுமளிகளைச் சந்திக்கப் போவது என்னமோ நிச்சயம்.

அடுத்த கட்டுரைக்கு