Published:Updated:

அமித்ஷா கிரீன் சிக்னல்! - ஆட்சியைக் காப்பாற்ற எடியூரப்பாவின் `பலே’ பிளான்

சத்யா கோபாலன்

கர்நாடகா அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற எடியூரப்பாவின் கோரிக்கைக்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளார் அமித்ஷா.

yeddyurappa
yeddyurappa ( Twitter/@BSYBJP )

கர்நாடகாவில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி ஆட்சி கடந்த மாதம் பெரும்பான்மை இல்லாததால் கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பா.ஜ.கவின் எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். ஆனால் அங்கு, இதுவரை எந்த அமைச்சர்களும் பதவியேற்கவில்லை.

yeddyurappa
yeddyurappa

கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்த பிறகே அனைத்து அமைச்சர்களும் பதவியேற்பார்கள் எனக் கூறப்பட்ட நிலையில், எடியூரப்பாவின் இந்த கோரிக்கைக்கு நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் வழங்கியுள்ளார். டெல்லியில் அமித்ஷாவை, எடியூரப்பா நேரில் சந்தித்தபோது அமைச்சரவை விரிவாக்கத்துக்கு அனுமதியளித்துள்ளார்.

எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்று ஒரு மாதம் ஆன நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ``வரும் செவ்வாய்க்கிழமை கர்நாடக சட்டசபையில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும். அன்றைய தினம் பிற்பகலில் அனைத்து புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக்கொள்வார்கள்” என அம்மாநில முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

amit shah
amit shah

இந்த அமைச்சரவை விரிவாக்கம் எடியூரப்பாவின் ஆட்சியை எதிர்க்கட்சிகள் குறியிலிருந்து பாதுகாக்கும் என கூறப்படுகிறது. காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி பாதிக்கப்பட்டது போலவே தங்கள் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இருக்கக்கூடாது என்பதில் பா.ஜ.க கவனமாக உள்ளது. இதனால், தன் கட்சியைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் விருப்பத்துக்கும், கருத்துகளுக்கும் இடமளித்து அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுவதாகக் கர்நாடக அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளன.

குமாரசாமி ஆட்சியை வீழ்த்திய அமித்ஷா பிளான்?!

கர்நாடகா பா.ஜ.கவுக்கு தற்போது 105 எம்.எல்.ஏக்களின் அதரவு உள்ளது. இது இல்லாமல் தகுதி நீக்கம் செய்த 17 எம்.எல்.ஏக்களையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் காலி தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலில் குறைந்தது 8 தொகுதிகளிலாவது தாங்கள் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறது பாஜக. இந்த வெற்றியின் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தங்கள் ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதால் வெற்றிக்குக் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

BJP MLAs
BJP MLAs

முன்னதாக கூட்டணியிலிருந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும், தற்போது பா.ஜ.க ஆட்சியைக் குறிவைக்க எந்த திட்டமும் தீட்டவில்லை என்றும் மாறாக அவர்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவி செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக அக்கட்சியினர் கூறுகிறார்கள்.