Published:Updated:

`அமித்ஷா ஒப்புக்கொண்டார்; தாக்கரே உடைத்தார்!’- மகாராஷ்ட்ரா குழப்பத்துக்கு காரணம் சொல்லும் காங்கிரஸ்

மகாராஷ்ட்ராவில், சிவசேனா இரண்டரை ஆண்டுகள் ஆட்சி நடத்த அமித்ஷா ஒப்புக்கொண்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ர கூட்டணி
மகாராஷ்ட்ர கூட்டணி

மகாராஷ்ட்ராவில் கூட்டணி வைத்து வெற்றி பெற்ற பா.ஜ.க - சிவசேனாவுக்குள் பதவி மோதல் ஏற்பட்டதால் அங்கு இன்னும் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்காமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின்போது சிவசேனாவுடன் கூட்டணி வைத்த பா.ஜ.க, மகாராஷ்ட்ரா சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் வெற்றி பெற்றால் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் அம்மாநிலத்தை ஆட்சி செய்ய வேண்டும் என ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அமித்ஷா
அமித்ஷா

தேர்தலுக்குப் பிறகு, சிவசேனாவின் இந்தக் கோரிக்கைக்கு பா.ஜ.க ஒத்துழைக்காததால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் பெரிதாகி தற்போது கூட்டணி பிளவு வரை சென்றுவிட்டது. கடந்த 20 நாள்களாக மகாராஷ்ட்ராவில் நடந்து வந்த பல்வேறு அரசியல் குழப்பங்கள் தற்போதுதான் ஓரளவுக்கு முடிவுக்கு வரும் நிலையை எட்டியுள்ளது. பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகிய சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைக்கும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கிடையில், நேற்று முன் தினம் மகாராஷ்ட்ரா அரசியல் பற்றிப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ``தேர்தல் பிரசாரத்தின்போது நானும் பிரதமர் மோடியும் முதல்வர் பற்றி மேடையில் பேசியிருந்தோம். பா.ஜ.க - சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றால், முதல்வராக பா.ஜ.க-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ் இருப்பார் எனப் பல முறை கூறியுள்ளோம். அப்போதெல்லாம் சிவசேனா கட்சியினர் அருகிலேயே இருந்தனர். முதல்வர் தொடர்பாக எந்த அதிருப்தியும் கூறவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தற்போது புதிதாக முதல்வர் சர்ச்சையைத் தொடங்கியுள்ளனர்” எனப் பேசியிருந்தார். அமித்ஷாவின் கருத்தைக் கண்டுகொள்ளாத சிவசேனா ஆட்சியமைக்கும் பணிகளில் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது.

காங்கிரஸ் திக்விஜய சிங்
காங்கிரஸ் திக்விஜய சிங்

இந்நிலையில், மகாராஷ்ட்ரா அரசியல் இழுபறிக்கு புதுக் காரணம் ஒன்றைத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங். ``மகாராஷ்ட்ராவில் இரண்டரை ஆண்டுகள் ஆட்சி நடத்த வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கைக்கு அமித்ஷா ஒப்புதல் தெரிவித்தார். ஆனால், தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுக்கும் சிவசேனாவுக்கும் இடையே நடந்த ஒப்பந்தத்தை உத்தவ் தாக்கரே வெளியில் சொன்னதுதான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம். இதனால் தங்களுக்குள் செய்த ரகசிய ஒப்பந்தத்தை சிவசேனா மீறியதாக பா.ஜ.க கருதியதே கூட்டணி பிளவு வரை சென்றுவிட்டது. இதன்படி பார்த்தாலே ஆட்சியில் 50:50 ஒப்பந்தம் போடப்பட்டது உண்மை என்பது தெரிய வரும்” எனக் கூறியுள்ளார்.