Published:Updated:

``திமுக எம்.பி-க்களுக்குத்தான் முன்னுரிமை அளித்தார் அமித் ஷா!'' - சொல்கிறார் அண்ணாமலை

அண்ணாமலை
News
அண்ணாமலை

``கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தின்போது, தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து நானே பிரதமரோடு பேசியிருக்கிறேன். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டறிந்து, பிரச்னைகளுக்கான தீர்வுகளையும் முன்வைத்தார்'' என்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.

'ஜெய் ஹிந்த்' சர்ச்சையில் ஆரம்பித்து, 'ஆளுநர் பதவி விலக வேண்டும்', 'அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை', 'ஆளுநர் அதிகாரம் குறைப்பு' எனப் புத்தாண்டு தொடக்கமே தடதடக்கிறது!

இதற்கிடையே, பிரதமர் மீதான ஆளுநர் விமர்சனம், பஞ்சாப் பயண ரத்து எனப் படபடக்கும் அரசியல் சூழலில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையைச் சந்தித்தேன்....

''தமிழ்நாட்டில், நீட் தேர்வு முறை ஏற்படுத்தியிருக்கிற பாதிப்புகள் குறித்து, அரசே குழு அமைத்து அறிக்கை சமர்ப்பித்துவிட்ட பிறகும் நீட் தேர்வு வேண்டும் என்று எப்படிக் கோருகிறீர்கள்?''

''தமிழகத்தில் மருத்துவக் கல்விக்கான சேர்க்கையைச் சிறப்புற மாற்றியமைக்கும் திட்டமாகவே நீட் தேர்வு நடைமுறையை நாங்கள் பார்க்கிறோம். எங்கள் கூட்டணிக் கட்சியாகவே இருந்தாலும், 'நீட் தேர்வு வேண்டாம்' என்றுதான் அ.தி.மு.க சொல்லிவருகிறது. ஆனால், 'வேண்டும்' என்பதுதான் பா.ஜ.க-வின் நிலைப்பாடு.

நீட் தேர்வு
நீட் தேர்வு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நீட் தேர்வுக்கு முன்பாக தமிழ்நாட்டிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை எப்படியிருந்தது, நீட் தேர்வுக்குப் பிறகான மாணவர் சேர்க்கை எப்படியிருக்கிறது என்பது குறித்த புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே எங்களுடைய கோரிக்கையின் நியாயம் அனைவருக்கும் புரிந்துவிடும். அதனால்தான் இது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறது.

நீட் தேர்வு குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசு அமைத்த ஏ.கே.ராஜன் குழு, கடந்த 2015, 16, 17-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நீட் தேர்வு மாணவர் சேர்க்கை குறித்த புள்ளிவிவரங்களைக்கொண்டு அறிக்கை தயார் செய்துள்ளது. அதிலும் தமிழக அரசு கொடுத்த புள்ளிவிவரங்களையே தானும் பதிவு செய்திருப்பதாக ஏ.கே.ராஜன் குழுவே தெரிவிக்கிறது. இதன்படி, 'இந்தத் தேர்வு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு எதிரான நடைமுறையாக இருக்கிறது' என்று அறிக்கையும் கொடுத்துள்ளது.

ஆனால், திருத்தியமைக்கப்பட்ட நீட் தேர்வு நடைமுறைகள் 2020-21-ம் ஆண்டிலிருந்துதான் அமல்படுத்தப்பட்டுவருகின்றன. எனவே, குறிப்பிட்ட இந்த இரண்டு வருட புள்ளிவிவரக் கணக்குகளை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அப்போதுதான் உண்மை நிலவரம் என்னவென்று மக்களுக்கும் புரியும்!''

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

''பிரதமரின் பஞ்சாப் பயணக் குளறுபடிகளில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பங்கும் இருக்கிறதுதானே?''

''அப்படிச் சொல்ல முடியாது. ஏனெனில், பிரதமரின் பிரத்யேக பாதுகாப்புக்காக எஸ்.பி.ஜி எனப்படும் 'சிறப்பு பாதுகாப்புக் குழு' உள்ளது. இது உள்துறை அமைச்சகக் கட்டுப்பாட்டின் கீழ் வராது. பிரதமர் ஒரு மாநிலத்துக்கு வருகை தருகிறபோது, மாநில காவல்துறை 'புளூ புக்' எனப்படும் 'பாதுகாப்பு வழிகாட்டுதல் விதிகளை'ப் பின்பற்ற வேண்டும். ஆனால், இந்த புளூ புக்கில் உள்ள 13 விதிமுறைகளை பஞ்சாப் மாநில காவல்துறை பின்பற்றவில்லை. அதனால்தான் இத்தனை குழப்பமும்.

பிரதமரின் பஞ்சாப் பயணம் ரத்து
பிரதமரின் பஞ்சாப் பயணம் ரத்து

இந்த விவகாரத்தில், பா.ஜ.க., மற்ற அரசியல் கட்சிகள் என பிரித்துப் பார்க்கக் கூடாது. ஏனெனில், ஒரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் இது. பிரதமரின் வாகன அணிவகுப்பு அருகே நின்று, பா.ஜ.க தொண்டர்களே வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர். அதுவும்கூட தவறுதான்.

பிரதமரின் பஞ்சாப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அத்தனை விவரங்களையும் உச்ச நீதிமன்றமே, சண்டிகர் உயர் நீதிமன்றத்திடம் கேட்டிருக்கிறது. எனவே, விரைவில் தகவல்கள் அனைத்தும் கிடைத்த பிறகு, உண்மையில் என்னென்ன தவறுகள் நடந்திருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும். எனவே, இந்த விவகாரத்தில், மத்திய அரசின் மீது எந்தத் தவறும் இல்லை!''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''புள்ளிவிவரத்தோடு கேள்வி கேட்டால் பதில் அளிப்பேன் என்கிறீர்களே... பேரிடர் நிவாரணம் குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எழுப்பியிருக்கும் புள்ளிவிவர கேள்விகளுக்கு உங்களது பதில் என்ன?''

``அவரின் புள்ளிவிவரக் கேள்விகளுக்கு நானும் புள்ளிவிவரத்தோடு நிறையமுறை பதில் அளித்திருக்கிறேன். பேரிடர் பாதிப்புகளை வேகமாகக் கணக்கிட்டு, தொகையைச் சொல்லிவிட்டது தமிழ்நாடு அரசு. மற்ற மாநிலங்கள் பாதிப்பைக் கணக்கிட்டுச் சொல்வதற்கே சில மாதங்கள் எடுத்துக்கொள்ளும். எனவே, தமிழக அரசின் வேகத்தை நானுமே பாராட்டியிருக்கிறேன்.

நரேந்திர மோடி - அமித் ஷா
நரேந்திர மோடி - அமித் ஷா

கடந்தகால காங்கிரஸ் - தி.மு.க ஆட்சியின்போது, மாநிலத்திலிருந்த தி.மு.க அரசு கேட்டிருந்த பேரிடர் நிவாரண நிதியில், வெறும் 13% மட்டுமே மத்திய காங்கிரஸ் அரசு அளித்திருந்தது. இது மிக மிகக் குறைவான தொகை. ஆனால், இன்றைக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உடனடியாக இன்ஷூரன்ஸ் தொகை விவசாயிகளுக்குக் கிடைத்துவிடுகிறது. ஆனாலும்கூட மத்திய அரசுமீது வீண் பழி சுமத்துகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தின்போது, தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து நானே பிரதமரோடு பேசியிருக்கிறேன். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டறிந்து, பிரச்னைகளுக்கான தீர்வுகளையும் முன்வைத்தார். அதேபோல், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நான் சந்திக்கக் காத்திருந்தபோது, என்னோடு திருச்சி சிவா உள்ளிட்ட தி.மு.க எம்.பி-க்களும் அமைச்சரைச் சந்திக்கக் காத்திருந்தனர். அப்போதும் 'நீங்கள் முதலில் சந்தியுங்கள்' என்று நானும் கூறினேன்... அமைச்சரும் தி.மு.க எம்.பி-க்களுக்குத்தான் முன்னுரிமை அளித்துப் பேசியிருக்கிறார். எனவே, எந்தவகையிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்படவில்லை.''

''முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது விவகாரத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜக நிர்வாகியும் சம்பந்தப்பட்டிருப்பதாக காவல்துறை சொல்கிறதே?''

''ராஜேந்திர பாலாஜியை டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் ஒளித்து வைத்திருப்பதாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கூறுகிறாரே என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு, 'அவரை ஒளித்து வைக்கவேண்டிய அவசியம் பா.ஜ.க-வுக்குக் கிடையாது' என்று நானும் பதில் சொல்லியிருந்தேன்.

ஆனால், இப்போது ராஜேந்திர பாலாஜி கைதானதுபோது, உடன் பா.ஜ.க நிர்வாகியும் இருந்ததாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகியிடமும் கட்சி சார்பாக நிச்சயம் விளக்கம் கேட்போம்!''

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

''சட்டசபையில், ஆளுநர் 'ஜெய்ஹிந்த்' வார்த்தையை உச்சரிப்பார் என தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் சீனிவாசன் முன்கூட்டியே இணையத்தில் பதிவிட்டிருந்தது ஏன்?''

''ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய காவல்துறையில் அதிக காலம் பணியாற்றியவர். நாகாலாந்து ஆளுநராகவும் பணியாற்றியிருக்கிறார். அந்தவகையில், 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை அவர் இயல்பாகத்தான் பயன்படுத்தியிருக்கிறார்.

தமிழக அரசும்கூட, 'ஜெய்ஹிந்த்' வார்த்தையை எதிர்க்கவில்லை. கடந்தமுறை ஆளுநர் உரையின்போது, 'ஜெய்ஹிந்த்' வார்த்தை விடுபட்டுப் போனதும்கூட சிறிய தவறுதானே தவிர... திட்டமிட்ட செயல் அல்ல. ஆனால், கொங்கு நாடு கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரன், சட்டமன்றத்தில் 'ஜெய்ஹிந்த்' வார்த்தை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காகத்தான் சண்டை போட்டோம். அரசியல் சாசனப்படி பொறுப்பேற்றுக்கொண்ட நம் முதல்வர், நிச்சயம் அது போன்று நடந்துகொள்ள மாட்டார். எனவேதான் நாங்களும் தமிழக அரசை இந்த விஷயத்தில் குறை சொல்லவேயில்லை. மற்றபடி சீனிவாசன் அப்படியொரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் என்றால், அது அவருடைய தனிப்பட்ட கருத்து... அவ்வளவுதான்!''