Published:Updated:

`ஏழுபேர் விடுதலை விவகாரத்தில் கலந்தாலோசித்து முடிவெடுக்கிறோம்!' - அமித் ஷா

ஐஷ்வர்யா

பிரிவு 161-ன் கீழ் விடுதலை அளிக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டும், அவர் இதில் எந்தவித முடிவும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறார்.

அமித் ஷா
அமித் ஷா

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழுபேர் விடுதலை விவகாரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் இன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து மனு அளித்தனர்.

ஏழு பேர் விடுதலை விவகாரம்
ஏழு பேர் விடுதலை விவகாரம்

மனுவைப் பெற்றுக்கொண்டு பதிலளித்த அமித் ஷா, ``கலந்தாலோசித்து முடிவெடுக்கிறோம்" என்று சொன்னதாகத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய எம்.பி.ரவிக்குமார், ``ஏழுபேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். இன்று எங்களுக்கு நேரம் ஒதுக்கியிருந்தார்கள். அதன்படி, இன்று அவரைச் சந்தித்து இதுவரை நடந்தது குறித்த ஆவணங்களையும் விடுதலை கோரும் மனுவையும் அவரிடம் கொடுத்தோம். பிரிவு 161-ன் கீழ் விடுதலை அளிக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டும், அவர் இதில் எந்தவித முடிவும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறார் என்பதையெல்லாம் குறிப்பிட்டோம்.

அற்புதம் அம்மாள்
அற்புதம் அம்மாள்

அற்புதம் அம்மாளும் அமித் ஷாவிடம் பேசினார். அனைத்தையும் கேட்ட அவர், 'இந்த விவகாரம் பலதரப்பினரையும் உள்ளடக்கியது என்பதால் அனைவரிடமும் கலந்தாலோசித்துவிட்டு முடிவெடுக்கப்படும்' என எங்களிடம் தெரிவித்தார்” என்றார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான நளினி, அவர் மகளின் திருமணத்துக்காக அண்மையில் பரோலில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.