தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நீட் உட்பட பல்வேறு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநர் குறித்து விவாதிக்க வேண்டும் என இன்று காலை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
டி.ஆர்.பாலு இதைத் தொடர்ந்து ஆளுநர் விவகாரம் தொடர்பாகப் பேசினார். அப்போது பேசிய அவர், ''அரசியல் சாசனப் பிரிவு 200-ன்படி ஆளுநர் இந்த மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும்'' என்றார்.
டி.ஆர்.பாலுவுக்கு இது குறித்துப் பேச அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக எம்.பி-க்கள் முழக்கங்களையும் எழுப்பினர். ஆளுநர் கால தாமதம் குறித்துப் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் மக்களவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
