Published:Updated:

`தேச விரோத முழக்கங்களை எழுப்புபவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்!’ - எச்சரிக்கும் அமித் ஷா

அமித் ஷா
அமித் ஷா

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நேற்று ஜபல்பூரில் நடைபெற்ற பேரணியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) - தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) ஆகியவற்றை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது. என்.ஆர்.சி - சி.ஏ.ஏ-வை செயல்படுத்த மாட்டோம் என பா.ஜ.க அல்லாத சில மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன. சி.ஏ.ஏ-வுக்கு எதிரான வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றன.

சி.ஏ.ஏ
சி.ஏ.ஏ

ஆனால், சி.ஏ.ஏ-வை செயல்படுத்துவதில் பா.ஜ.க அரசு முழுவீச்சில் இருக்கிறது. போராட்டங்களைக் கண்டு பா.ஜ.க பின்வாங்கப்போவதில்லை என்பதையே மோடி மற்றும் அமித் ஷா-வின் பேச்சுகள் உணர்த்திவருகின்றன. இந்த நிலையில், ஜனவரி 10-ம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. `சி.ஏ.ஏ பற்றி எதிர்க்கட்சிகள் மக்களைத் தவறாக வழி நடத்துகின்றன. சி.ஏ.ஏ பற்றி மக்களுக்கு எடுத்துரைப்போம்’ என பா.ஜ.க அறிவித்துள்ளது. சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவான பேரணிகளையும் நாடு முழுவதும் பா.ஜ.க நடத்திவருகிறது.

இந்த நிலையில், நேற்று ஜபல்பூரில் நடைபெற்ற பேரணியில் சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக அமித் ஷா பேசினார். அப்போது, ‘‘நாட்டுக்கு எதிராக தேசவிரோத முழக்கங்கள் எழுப்புபவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்!’’ என்று பேசியுள்ளார். மேலும், "நான்கு மாதங்களில் வானுயர ராமர் கோயில் கட்டப்படும். சில மாணவர்கள் தேச விரோத முழக்கங்களை எழுப்புகிறார்கள். யார் தேச விரோத முழக்கங்கள் எழுப்பினாலும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்க்கிறது. ராமர் கோயில் கட்டப்படுவதைத் தடுத்துப் பாருங்கள் என காங்கிரசுக்கு சவால் விடுகிறேன். சி.ஏ.ஏ-வில் குடியுரிமையைப் பறிக்கும் ஒரு பிரிவை எதிர்க்கட்சிகள் குறிப்பிடட்டும்.

அமித் ஷா
அமித் ஷா

"காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள், தேசத்தைத் தவறாக வழிநடத்தி சிறுபான்மையினரைத் தூண்டிவிடுகின்றன. காங்கிரஸ் கட்சிதான் நாட்டை மதரீதியாகப் பிளவுபடுத்தியது. அங்கு, பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரை காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை. பாகிஸ்தானில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி காங்கிரஸ் கட்சி ஏன் பேச மறுக்கிறது. பா.ஜ.க கொண்டுவருகிற அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்றே காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி அனைத்து விஷயங்களிலும் பாகிஸ்தான் மற்றும் இம்ரான் குரலாகப் பேசுகின்றன. மக்களின் எண்ணங்களை சரியாகப் புரிந்துகொள்ளாவிட்டால், காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக அழிந்துவிடும்" என்றார்.

அமித் ஷாவின் பேச்சு, அரசியல் அரங்கில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு