Published:Updated:

`பெரும்பாலான நேரங்களில் சரியாக இருக்கும்... இந்தமுறை தவறிவிட்டது!' - அமித் ஷா #DelhiElections

அமித் ஷா
அமித் ஷா ( ANI )

`தேர்தலில் பா.ஜ.க-வின் தோல்வியை, கட்சியின் கொள்கைகள் மக்களால் நிராகரிக்கப்பட்டது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது'.

டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் 62 இடங்களைப் பிடித்து மூன்றாவது முறையாக வெற்றிபெற்றுள்ளது. மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க-வின் தொடர் சறுக்கல்கள் குறித்தும் ஆம் ஆத்மியின் வெற்றிக்கான காரணங்கள் குறித்தும் அக்கட்சிகள் உட்பட அரசியல் விமர்சகர்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துவருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் பா.ஜ.க-வின் தோல்விக்கான காரணங்கள் குறித்தி உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேசியுள்ளார்.

அமித் ஷா
அமித் ஷா

முன்னதாக, டெல்லியில் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பிரசாரத்தில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடும் `துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்’ எனப் பேசியிருந்தார். அதேபோல், பா.ஜ.க எம்.பி பர்வேஷ் வர்மா, `குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் உங்களுடைய வீடுகளுக்குள் புகுந்து உங்கள் மனைவி மற்றும் சகோதரிகளைப் பாலியல் வன்கொடுமை செய்வார்கள்' எனப் பேசியிருந்தார். இவர்களைத் தொடர்ந்து, கபில் மிஸ்ராவும் `இந்தியா - பாகிஸ்தான் போட்டி போன்றது இந்தத் தேர்தல்' என குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

`டெல்லி யாருடையது.. உங்கள் வாக்கு தீர்மானிக்கும்!'- ஷாகீன் பாக் போராட்டத்தைக் குறிப்பிட்ட அமித் ஷா

பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களான இவர்களின் இந்தக் கருத்துகளைக் குறிப்பிட்டு, 'டைம்ஸ் நௌவ்' சார்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது, ``பிரசாரக் கூட்டங்களில் பா.ஜ.க-வினர் இதுமாதிரியான சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியிருக்கக்கூடாது. இவையனைத்தும் பா.ஜ.க-வின் கருத்துகள் அல்ல . இந்தக் கருத்துகளிலிருந்து கட்சி விலகியே நிற்கிறது என உடனடியாக அறிவித்துவிட்டோம். எனினும், இதனால் மிகப்பெரிய விலையைக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வாக்காளர்கள் ஏன் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால், தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு இந்த சர்ச்சைப் பேச்சுகள் முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

மேலும், ``சமூக வலைதளங்களில் இவர்களின் கருத்துக்கு பா.ஜ.க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பலரும் குறிப்பிட்டனர். ஆனால், தேர்தல் ஆணையத்திடமிருந்து இவர்கள் தகுந்த தண்டனைகளைப் பெற்றிருந்தனர். தேர்தலில் பா.ஜ.க -வின் தோல்வியை, கட்சியின் கொள்கைகள் மக்களால் நிராகரிக்கப்பட்டது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இதற்கு, மக்கள் அவர்களைப் புறக்கணித்துவிட்டார்கள் என அர்த்தமா?" என்றார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

தொடர்ந்து பேசிய அவர், ``இந்தத் தேர்தலில் எங்கள் கட்சி பெரும்பான்மையுடன் வென்றுவிடும் என உறுதியாக நம்பினேன். என்னுடைய மதிப்பீடு தவறாகிவிட்டது. இந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்வதில் எனக்கு பிரச்னையில்லை. பெரும்பாலான நேரங்களில் என்னுடைய கணிப்பு சரியாகவே இருக்கும். இந்த முறை தவறிவிட்டது. ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஷஹீன் பாக்கில் நடக்கும் போராட்டங்களைத் தேர்தல் முடிவுக்கு காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு பிரச்னையில் தேர்தல்களில் வெற்றிபெற்றுவிட முடியாது" என்று பேசினார். மேலும், அந்தப் போராட்டத்தை விமர்சித்தும் தனது கருத்தை அவர் பதிவுசெய்துள்ளார்.

கெஜ்ரிவாலால் வீழ்த்தப்பட்ட அமித்பாய் அரசியல் கணக்கு... டெல்லி தேர்தல் முடிவால் நட்டாவுக்கு செக்!
அடுத்த கட்டுரைக்கு