Published:Updated:

``என்ன ஜி இப்படிப் பண்றீங்க” மொழிபெயர்ப்பாளரால் மீண்டும் கடுப்பான அமித் ஷா!

மகளிர், தாய்மார்கள் பற்றி அவதூறு பரப்பிக்கொண்டிருக்கும் தி.மு.க கூட்டணிக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என விழுப்புரத்தில் அமித் ஷா பேச்சு.

பிப்ரவரி மாத இறுதியில் விழுப்புரம் வந்திருந்த அமித் ஷா, பொதுக்கூட்டத்தில் பேசிய உரையை, ஹெச்.ராஜா தவறாக மொழிபெயர்க்க, ``நீங்கள் தவறாக மொழிபெயர்ப்பு செய்கிறீர்கள். அதை நானே சொல்லிக்கொள்கிறேன்" என மேடையிலேயே சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்வு அங்கு கூடியிருந்தவர்களிடம் நகைப்பை ஏற்படுத்தியது. விழுப்புரத்துக்கும் அமித் ஷாவுக்கும் அப்படி என்னதான் பொருத்தமோ தெரியவில்லை... நேற்று விழுப்புரம் வந்த அமித் ஷாவுக்குக் கிடைத்த மொழிபெயர்ப்பாளர் சொதப்ப, மீண்டும் மேடையிலேயே கடுகடுத்திருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு நேற்று வருகை தந்திருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

அமித் ஷா
அமித் ஷா

தமிழகத்தில் பரவலாக அனல் காற்றுடன் சுட்டெரித்துவருகிறது வெயில். இந்தநிலையில், காலையிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்ட கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் சுமார் 12:45 மணி அளவிலேயே வந்தார். கடும் வெப்பத்தாலும், அதிக நேரம் காத்திருந்ததாலும் சோர்வுற்ற பொதுமக்கள் பலர், அமித் ஷா வருகை தந்து பேசிக்கொண்டிருந்தபோதே நடையைக்கட்டத் தொடங்கினர்.

கூட்டத்தில் பேசிய அமித் ஷா,

``இந்தத் தேர்தல், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் - காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஊழல் கூட்டணிக்கும் இடையில் நடக்கும் போட்டி’’ என்று அவர் பேசினார். அதை தட்டுத்தடுமாறி மொழிபெயர்த்த சேலத்தைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளரைப் பார்த்து, ``என்ன ஜி... நீங்க இப்படி டிரான்ஸ்லேஷன் பண்றீங்களே" என்று மேடையிலேயே அவரைப் பார்த்துக் கேட்டுவிட்டார் அமித் ஷா.

சேலத்தைச்  சேர்ந்த  மொழிபெயர்ப்பாளர்.
சேலத்தைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர்.

தொடர்ந்து பேசிய அவர்,

``எம்.ஜி.ஆர் உண்மையாகவே மக்களின் தலைவராக விளங்கியவர். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதா தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். ஒரு பெண்மணி எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் அவர். அவரைத் தொடர்ந்து பாரதப் பிரதமரின் வழிகாட்டுதலின்படி, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார்கள்.

தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா - மேடையிலேயே அமித் ஷா சுட்டிக்காட்டியதால் எழுந்த சிரிப்பலை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க-காங்கிரஸ் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும். லஞ்சம், ரௌடியிசம், நில அபகரிப்பு மற்றும் தங்கள் குடும்ப வளர்ச்சி என இவற்றை மட்டுமே இந்த இரண்டு கட்சிகளும் செய்துவருகின்றன. ஆனால், நமது கூட்டணி எம்.ஜி.ஆர் வழியிலும், மோடியின் வழிகாட்டுதலுடனும் சென்றுகொண்டிருக்கும் ஒரு சிறப்பான கூட்டணி. சமீபத்தில், தி.மு.க-வைச் சேர்ந்த ஆ.ராசா முதல்வரின் காலம்சென்ற தாயாரைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியிருக்கிறார். எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என இப்படித் தரக்குறைவாகப் பேசிவருகிறார்கள்" என்றார் அமித் ஷா.

கலைந்து சென்ற மக்கள்.
கலைந்து சென்ற மக்கள்.

தொடர்ந்து பேசிய அமித் ஷாவின் பேச்சை மொழிபெயர்ப்பு செய்ய முடியாமல் மீண்டும் திகைத்து நின்ற மொழிபெயர்ப்பாளரிடம் மீண்டும் தவற்றை அமித் ஷா சுட்டிக்காட்டி கடுகடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர்,

``முற்காலங்களிலும் ஜெயலலிதாவைப் பற்றி இது போன்று தரக்குறைவாகப் பேசியிருக்கிறார்கள். மகளிர், தாய்மார்கள் பற்றி அவதூறு பரப்பிக்கொண்டிருக்கும் தி.மு.க கூட்டணிக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். தமிழகத்தில் ஊழலைப் பற்றி பேசுகிறார் ஸ்டாலின். உங்கள் வாழ்க்கைப் பயணத்தைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். 2ஜி மற்றும் சன் டி.வி-யில் என்ன செய்திருக்கிறீர்கள் என்று.

தி.மு.க அரசியல் கட்சி அல்ல. அது ஒரு வியாபார நிறுவனமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தி.மு.க மற்றும் காங்கிரஸுக்கு மக்களைப் பற்றிக் கவலை இல்லை. சோனியா காந்திக்கு ராகுலை நினைத்தும், ஸ்டாலினுக்கு உதயநிதியை நினைத்தும்தான் கவலை. ஆனால், தமிழ்மொழி மீதும், தமிழக மக்கள் மீதும் மோடிக்கு மிகப்பெரிய அன்பும் பாசமும் இருக்கிறது. ஜல்லிக்கட்டு பற்றிப் பேசுகிறது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி. இதே காங்கிரஸ்தான் ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதித்து கையெழுத்திட்டது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு