Published:Updated:

`தயங்கினால் விளைவுகளைச் சந்திப்பார்கள்!' - தமிழக பா.ஜ.க-வுக்குச் சுட்டிக்காட்டிய அமித் ஷா

அமித் ஷா
அமித் ஷா

ஏ.சி.சண்முகம் இந்தளவுக்கு வாக்குகளை வாங்கியதற்குக் காரணம், வெற்றியை மோடிக்கு சமர்ப்பிப்பேன் என்று கூறியதால்தான். ஆனால், செம்மலையின் பேச்சால்தான் வெற்றி கைநழுவிப்போனது.

வேலூர் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்ற பின்னரும் அதுதொடர்பான விவாதம் ஓய்ந்தபாடில்லை. தி.மு.க எம்.பி கனிமொழிக்கும் பா.ஜ.க தலைவர் தமிழிசைக்கும் இடையில் வார்த்தைப் போர் நடந்து வருகிறது. `உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் நாம் போட்டியிட வேண்டும். நாம் கேட்ட இடங்களை அ.தி.மு.க ஒதுக்காவிட்டால் பார்த்துக்கொள்வோம்' எனத் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளிடம் அமித் ஷா கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமித் ஷாவுடன் ரஜினி
அமித் ஷாவுடன் ரஜினி

இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், `மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இங்கு வந்திருக்கிறார். மிஷன் காஷ்மீரின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் அதைச் சாத்தியப்படுத்திய விதத்துக்கு ஹேட்ஸ் ஆஃப். குறிப்பாக, நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை மிக அற்புதமாக இருந்தது. இப்போது அமித் ஷா யாரென்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். மோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்ணன் போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணன்... யார் அர்ஜுனன் என்பது நமக்குத் தெரியாது. இது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்' எனச் சிலாகித்தார். ரஜினியின் பேச்சு அரசியல்ரீதியான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த அமித் ஷாவைத் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பு குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க பிரமுகர் ஒருவர், `` நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, தமிழக சூழல்களை மேலிடம் கவனித்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குத் தி.மு.க கூட்டணியில் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

புத்தக வெளியீட்டு விழாவில் அமித் ஷா
புத்தக வெளியீட்டு விழாவில் அமித் ஷா

ஆனால், மத்தியில் ஆளும்கட்சியாக இருந்தும் 5 இடங்களுக்குள் பா.ஜ.க-வை அடக்கிவிட்டது அ.தி.மு.க இதனால் டெல்லி நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க அரசு மீது கோபம் உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370-ஐ நீக்கிய விவகாரத்தில் மத்திய அரசை நேரடியாகப் பாராட்டினார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், எடப்பாடி பழனிசாமியிடமிருந்து அப்படிப்பட்ட வார்த்தைகள் எதுவும் வரவில்லை. இதையும் டெல்லி மேலிடம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

`` பா.ஜ.க மேலிடத்தின் செல்வாக்கோடு வலம் வந்து கொண்டிருக்கிறார் அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. வேலூர் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய அவர், ` பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தி வேலூர் தேர்தலை எதிர்கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யாததால்தான் அ.தி.மு.க தோற்றது. `வேலூர் தேர்தலில் மோடியை முன்னிறுத்த மாட்டோம்' என்றார் செம்மலை. ஆனால், `எனது வெற்றியை மோடியின் காலடியில் சமர்ப்பிப்பேன்' என்றார் ஏ.சி.சண்முகம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு விழுந்த வாக்குகளைத்தான் அ.தி.மு.க அறுவடை செய்தது. அ.தி.மு.க பெற்ற வாக்குகளில் பெரும்பாலானவை மோடியால் வந்தவை. ஏ.சி.சண்முகம் இந்தளவுக்கு வாக்குகளை வாங்கியதற்குக் காரணம், வெற்றியை மோடிக்கு சமர்ப்பிப்பேன் என்று கூறியதால்தான். ஆனால், செம்மலையின் பேச்சால்தான் வெற்றி கைநழுவிப் போனது. செம்மலை போன்ற தவறான புரிதல் உள்ள அரசியல்வாதிகளால் சறுக்கிவிடாமல் கவனமாக இருங்கள்' என எடப்பாடி பழனிசாமிக்குத் தகவல் கொடுத்திருக்கிறார் சசிகலா புஷ்பா.

பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

நாங்குநேரி, விக்ரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம், தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்தாக வேண்டும் என்ற இலக்கோடு பயணித்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. அதை முன்வைத்தே 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும் திட்டமிட்டு வருகின்றனர். `அ.தி.மு.க அரசு மீதான பா.ஜ.க-வின் பார்வை என்ன?' என்பதற்கான விடையும், உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு தெரியவரலாம் என்கின்றனர் கமலாலய வட்டாரத்தில்.

அடுத்த கட்டுரைக்கு