Published:Updated:

`நீங்கள் பா.ஜ.க-வில் சேரலாமே!' - அமித் ஷா ஆஃபரை நிராகரித்த ஜர்னா தாஸ்

மலையரசு

``இடதுசாரிகள் இந்த நாட்டில் இனி இல்லை. நீங்கள் பா.ஜ.க-வில் சேரலாமே" எனக் கேட்டுள்ளார் அமித் ஷா. இதை சற்றும் எதிர்பாராத ஜர்னா தாஸ் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அமித் ஷா
அமித் ஷா

கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சிப் பிரதிநிதிகளை வளைத்துப்போடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. சமீபத்தில் கூட மேற்குவங்கத்தில் ஆளும் கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 50-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள், ஒரு சில எம்.எல்.ஏ-க்களை தனது கட்சியில் சேர்த்துக்கொண்டது பா.ஜ.க. இன்னும் 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் விரைவில் இணைவார்கள் என அக்கட்சித் தலைவர் முகுல் ராய் பேசியுள்ளார். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கும் பா.ஜ.கவே காரணம் என எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

அமித் ஷா
அமித் ஷா

இதற்கிடையே, திரிபுரா மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கட்சியின் பெண் எம்.பி-யான ஜர்னா தாஸ் சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். திரிபுராவில் பஞ்சாயத்துத் தேர்தலை முன்னிட்டு நிகழ்ந்த வன்முறைகள் தொடர்பாக பேசுவதற்கு நேரம் கேட்டுள்ளார். அதன்படி மாலை 5 மணிக்கு அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே வந்த அவரை இரவு 7 மணி வரை காக்கவைத்து அமித் ஷா சந்தித்ததாக கூறப்படுகிறது. சந்திப்பின்போது, அமித் ஷா, ``இடதுசாரிகள் இந்த நாட்டில் இனி இல்லை. நீங்கள் பா.ஜ.க-வில் சேரலாமே" எனக் கேட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத ஜர்னா தாஸ் அதிர்ச்சியடைந்துள்ளார்.

நடந்த சம்பவம் குறித்துப் பேசியுள்ள ஜர்னா தாஸ், ``வன்முறை தொடர்பான ஆவணங்களை அவரிடம் கொடுப்பதற்காக அமித் ஷாவை சந்திக்கச் சென்றேன். ஆனால் அவரோ, ``இன்னும் ஏன் அந்தக் கட்சியில் இருக்கிறீர்கள். எங்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள்'' எனக் கூறினார். ``நான் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவை சந்திக்க வரவில்லை. இந்த நாட்டின் உள்துறை அமைச்சரை சந்திக்கவே வந்துள்ளேன்" என முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். அப்போதே இந்தப் பிரச்னை முடிந்துவிட்டது. அவர் கேலிக்காக அவ்வாறு கூறினாரா என எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், நான் ஒரு மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்.

ஜர்னா தாஸ்
ஜர்னா தாஸ்

எங்கள் கட்சியிலிருந்து ஒரே உறுப்பினர் இருந்தாலும் பா.ஜ.க-வுக்கு எதிராகப் போராடுவோம் என அவரிடம் கூறினேன்" எனக் கூறியுள்ளார். திரிபுரா மார்க்சிஸ்ட் கட்சியின் ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவர் ஜர்னா தாஸ். தற்போதைய நாடாளுமன்றத்தில் திரிபுரா மார்க்சிஸ்ட் கட்சியின் ஒரே ஒரு உறுப்பினராக உள்ளார். தொடர்ந்து இரண்டாவது முறையாக ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் சிறந்த பேச்சாளராக அறியப்படுபவர். இவரை தங்கள் கட்சியில் சேர அமித் ஷா வலியுறுத்தியது எதிர்க்கட்சிகள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமித் ஷா தரப்பில் இதுவரை இதற்கு எந்த விளக்கமும் வரவில்லை.