Published:Updated:

அமித் ஷாவுக்கு 96... சிதம்பரத்துக்கு 106... பழிவாங்கல் படலத்தில் அடுத்து யார்?

தன்னை சிறையில் அடைத்ததுக்காகச் சிதம்பரத்தைப் பழிவாங்கும் விதமாகவே அமித் ஷா காய் நகர்த்தியதாகவும் தன்னைவிட கூடுதலாக ஒரு நாளாவது சிதம்பரம் சிறைத்தண்டனை பெற வேண்டும் என அமித் ஷா திட்டமிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

அமித் ஷா - ப.சிதம்பரம்
அமித் ஷா - ப.சிதம்பரம்

106 நாள்கள் சிறை வாழ்க்கை வாழ்ந்து பிணையில் வெளிவந்திருக்கிறார் முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதே சிதம்பரம் உள்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தபோது, கைதுசெய்யப்பட்டு 96 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அமித் ஷாவுக்கு குஜராத் மாநிலத்துக்குள் நுழைய 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது.

தன்னை சிறையில் அடைத்ததுக்காகச் சிதம்பரத்தைப் பழிவாங்கும் விதமாகவே அமித் ஷா காய் நகர்த்தியதாகவும் தன்னைவிட கூடுதலாக ஒரு நாளாவது சிதம்பரம் சிறைத்தண்டனை பெற வேண்டும் என அமித் ஷா திட்டமிட்டு அதைச் செயல்படுத்தியிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பு, சொராபுதீன் ஷேக் கொலை வழக்கில் அமித் ஷாவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டதே இந்தப் பிரச்னையின் தொடக்கப்புள்ளி.

அமித் ஷா
அமித் ஷா

2014-ம் ஆண்டிலும் 2019-ம் ஆண்டிலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை, இடைப்பட்ட காலத்தில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தது என தற்போது ஏறுமுகத்தில் இருக்கும் அமித் ஷா, 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய வழக்கு ஒன்றில் சிக்கினார். அது அமித் ஷாவின் அரசியல் வாழ்க்கையில் கரும்புள்ளியாகத் தொடர்கிறது.

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, மாநில உள்துறை அமைச்சராக இருந்தவர் அமித் ஷா. மார்பிள் வியாபாரிகளிடையிலான தகராறு ஒன்றில், சொராபுதீன் ஷேக் என்பவரைக் குற்றம் சாட்டினர் மார்பிள் வியாபாரிகள். சொராபுதீன் ஷேக்கைக் கொல்ல அமித் ஷாவுக்குப் பெரிய அளவிலான பணம் கை மாறியதாகப் புகார்கள் கூறப்பட்டன. இதில் குஜராத் காவல்துறை உயரதிகாரிகள் டி.ஜி.வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோருக்கும் தொடர்பு இருந்ததாக சர்ச்சைகள் கிளம்பின.

சொராபுதீன் ஷேக், அவரின் மனைவி கைசர் பி
சொராபுதீன் ஷேக், அவரின் மனைவி கைசர் பி

சொராபுதீன் ஷேக், லஷ்கர்-இ-தைபா அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறப்பட்டு காவல்துறையினரால் என்கவுன்டர் செய்து கொல்லப்பட்டார். உடனிருந்த அவரின் மனைவி கைசர் பி, கூட்டாளி துளசிராம் பிரஜபதி ஆகியோரும் காவல்துறையினரால் கொல்லப்பட்டனர். 2005-ம் ஆண்டு நிகழ்ந்த இந்தக் கொடூர என்கவுன்டர், ஒரு ஆண்டு கழித்து வெளியில் தெரிய வந்தது. மேலும், சொராபுதீனைக் கொல்வதற்கு வசதியாக, டி.ஜி.வன்சாராவை பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்ய உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா உதவியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு, மும்பை நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணையில், அமித் ஷாவுக்கு 3 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 96 நாள்கள் சிறையில் இருந்து வெளியே வந்தபோது, குஜராத் மாநிலத்துக்குள் அமித் ஷா நுழைய தடை விதிக்கப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, தன் மனைவியோடு, டெல்லியிலுள்ள குஜராத் பவனில் ஒரு அறையில் குடியேறினார் அமித் ஷா. இரண்டு ஆண்டுகள் கழித்து, அமித் ஷாவுக்கு அளிக்கப்பட்ட தடை நீக்கப்பட, மீண்டும் குஜராத்துக்குள் நுழைந்து தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

அமித் ஷா
அமித் ஷா
12 மணி முதல் விசாரணை; 6 மணிக்கு தப்பி ஓட்டம்! - எப்படி நடந்தது ஹைதராபாத் என்கவுன்டர்? #DishaCase

அமித் ஷா சிறையில் இருந்தபோது, சி.பி.ஐ-யைக் கட்டுப்படுத்தும் உள்துறையின் அமைச்சராக இருந்தார் ப.சிதம்பரம். காலம் மாறி, காட்சிகள் மாறின. மத்திய உள்துறை அமைச்சரானார் அமித் ஷா. சிதம்பரம் கைதுசெய்யப்பட்ட முதல் நாளின் இரவில், அவர் அமைச்சராக இருந்தபோது திறந்து வைத்த அதே சி.பி.ஐ கட்டட வளாகத்திலேயே கைதியாக அடைத்து வைக்கப்பட்டார். இதையே பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சித்தது காங்கிரஸ் கட்சி.

சொராபுதீன் வழக்கில் தீர்ப்பளிப்பதாக இருந்த நீதிபதி லோயா மர்மமான முறையில் இறந்தார். தற்போது புதிதாக உருவாகியுள்ள மகாராஷ்ட்ரா மாநில அரசில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், லோயா மரணம், சொராபுதீன் வழக்கு ஆகியவற்றை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அகமது படேல்
அகமது படேல்

சிதம்பரத்துக்குப் பிறகு, அமித் ஷாவின் அடுத்த குறி, சோனியா காந்தியின் செயலாளர் அகமது படேல் எனக் கூறப்படுகிறது. அமித் ஷாவும் அகமது படேலும் குஜராத் மாநில அரசியலில் ஈடுபட்டிருந்தபோதே கீரியும் பாம்புமாக இருந்தவர்கள். சொராபுதீன் என்கவுன்டர் வழக்கில் அமித் ஷாவை சிக்க வைக்க காங்கிரஸ் கட்சிக்குள் காய் நகர்த்தியது அகமது படேல் எனக் கூறப்படுகிறது. குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு அமித் ஷா செல்ல விரும்பியபோது, அந்தத் தேர்தலில் அவரை வென்றவர் அகமது படேல். 'எங்களுக்குள் பெர்சனல் பிரச்னை இருக்கிறது' என வெளிப்படையாகவே அறிவித்தார் அகமது படேல். தற்போது அமலாக்கத்துறை அவரைக் கைது செய்ய திட்டம் வகுத்துக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அநேகமாக வெகுசீக்கிரமே அகமது படேல் கைது நடவடிக்கை அரங்கேறலாம்.