Published:Updated:

``அமித்ஷாவின் வாக்குறுதி... சிவசேனாவின் ஷாக்!” மகாராஷ்டிரா மல்லுக்கட்டு

அமித்ஷா
News
அமித்ஷா

ஜனவரி மாதம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியாகவேண்டும், அல்லது சிவசேனாவை வேறு விதத்தில் பணியவைக்க வேண்டும் என்கிற முடிவுவோடு இந்தப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் அமித் ஷா.

நாடாளுமன்றத் தேர்தலில் அசுரவெற்றி... அடுத்த நான்கு மாதங்களில் நடந்த இரண்டு மாநிலத்தேர்தலிலும் இழுபறி என்பது பி.ஜே.பி-க்குள் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. ஹரியானாவில் ஆட்சியைக் கைப்பற்றி விட்டாலும், மகாராஷ்டிரா மட்டும் பி.ஜே.பி-க்கு இப்போதும் தலைவலியாக இருக்கிறது. இதற்கு காரணம் பி.ஜே.பி வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவுதான் என்கின்றன கட்சியின் மூத்த தலைகள்.

மனோகர் லால் கட்டார்
மனோகர் லால் கட்டார்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் கடந்த 24-ம் தேதி வெளியானது. வாக்குப்பதிவுக்குப் பிறகு நடத்திய கருத்துக்கணிப்புகள் எல்லாம், மகாராஷ்டிராவில் பி.ஜே.பி-சிவசேனா கூட்டணி 200 இடங்களுக்கும் மேல் கைப்பற்றும் என்றும், ஹரியானாவில் மனோகர் லால் தலைமையிலான பி.ஜே.பி 60 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சியைப்பிடிக்கும் என்றன. ஆனால், இரண்டு மாநிலங்களிலுமே முடிவு வேறுமாதிரியாக வந்தது. மகாராஷ்டிராவில் பி.ஜே.பி கூட்டணி 161 இடங்களிலும், ஹரியானாவில் பெரும்பான்மையை விட ஆறு தொகுதிகள் குறைவாக 40 இடங்களிளும் மட்டுமே ஜெயிக்க முடிந்திருக்கிறது. இதனால் பி.ஜே.பி தலைவர் அமித் ஷா, செயல்தலைவர் நட்டா இருவருமே அப்செட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருபுறம் மகாராஷ்டிராவில் சிவசேனா ஆதரவுடன் மட்டுமே ஐந்தாண்டுக் காலத்தை நகர்த்த வேண்டிய நெருக்கடியும், மற்றொருபுறம் ஹரியானாவில் ஆட்சி அமைப்பதற்கே சுயேச்சைகளின் தயவை எதிர்பார்த்து நிற்கவேண்டிய அவசியமும் பி.ஜே.பி-க்கு ஏற்பட்டுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பி.ஜே.பி ஆட்சி செய்த இந்த இரண்டு மாநிலங்களிலும் சரிவுக்குக் காரணம் என்ன என்று பி.ஜே.பி தலைமை ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. தலைநகரான டெல்லியையொட்டியுள்ள மாநிலம் ஹரியானா. அங்கு பி.ஜே.பிக்கு ஏற்பட்டுள்ள சரிவு, வரும் டெல்லி சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கருதுகிறார்கள் பி.ஜே.பி தரப்பினர்.

ஹரியானாவில் இந்தச் சரிவுக்கு இரண்டு பிரதான காரணங்களை பி.ஜே.பி தரப்பு முன்வைக்கிறது. ஹரியானா மாநிலத்தில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள ஜாட் சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டுவருகிறார்கள். இடஒதுக்கீடு கொடுக்கமுடியாதபடி சட்டநெருக்கடி இருக்கிறது என்று பி.ஜே.பி அரசு சொல்லிவந்தது. மறுபுறம் பி.ஜே.பி முதல்வர் வேட்பாளர் மனோகர்லால் கட்டார் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அந்தச் சமூகத்தினரின் எண்ணிக்கை அந்த மாநிலத்தில் மிகக்குறைவு. ஆனால், காங்கிரஸ் தரப்பில் முதல்வர் வேட்பாளராக முன்மொழியப்பட்ட ஹுடா ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது அந்தக்கட்சிக்குக் கூடுதல் பலமாகியுள்ளது. அதனால் 31 இடங்களை காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெறமுடிந்தது. இதனால் பி.ஜே.பி தரப்பு பத்துத் தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜே.ஜே.பி கட்சியின் ஆதரவை எதிர்பார்த்தது. அவர்கள் உடனடியாக எந்த முடிவையும் எட்டாமல் இழுத்தடிக்கவே சுயேச்சையாக வெற்றி பெற்ற ஏழு உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரியது. கடைசியாக ஜே.ஜே.பியும் பி.ஜே.பியுடன் கைகோத்துள்ளது. இப்போது ஆட்சிக்கட்டிலில் பி.ஜே.பி அமர்ந்தாலும் இந்த ஆட்சிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம் என்பதால் ஆதரவு தந்த சுயேச்சை எம்.எல்.ஏக்களை முழுமையாக தங்கள் கட்சிக்குள் கொண்டு வரும் யுக்தியையும் கையில் எடுத்துள்ளார்கள் பி.ஜே.பியினர்.

பட்னாவிஸ்
பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் நிலைமையே வேறு மாதிரியாக உள்ளது. அங்கு பி.ஜே.பி 105, சிவசேனா 56 என இந்தக் கூட்டணி 161 இடங்களில் வெற்றிபெற்று கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறார்கள். பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு இந்தக் கூட்டணி வெற்றிபெற்றிருந்தாலும் வேறு ஒரு சிக்கலையும் இந்தக் கூட்டணி பெற்றுள்ளது. அதாவது கடந்த முறையை விட பி.ஜே.பி இந்த முறை குறைந்த அளவே வெற்றியை ஈட்டியுள்ளது. இதனால் எங்களால்தான் நீங்கள் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று சிவவேனா முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அதேநேரம் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த முறையைவிட தேசியவாத காங்கிரஸ் கட்சி 13 இடங்களில் கூடுதலாக வெற்றிபெற்றுள்ளது. “பட்னாவிஸ் தலைமையிலான பி.ஜே.பி ஆட்சியை அமைக்க உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, இரண்டு நிபந்தனைகளை வலியுறுத்துகிறது. ஒன்று கர்நாடகா பாணியில் இரண்டரை ஆண்டுகள் பி.ஜே.பி தலைமையிலும், இரண்டரை ஆண்டுகள் சிவசேனா தலைமையிலும் ஆட்சியை நடத்தலாம் என்கிறார்கள். ஆனால் பி.ஜே.பி தரப்பு இதற்கு உடன்பட மறுக்கிறது. அதற்குப்பதிலாக முதல் பாதியில் பி.ஜே.பியும், இரண்டாவது பாதியில் சிவசேனாவும் ஆட்சி செய்யலாம் என்று பி.ஜே.பி இறங்கிவருகிறது. அதை சிவசேனா ஏற்க மறுக்கிறது. மேலும் அமைச்சரவையில் ஐம்பது சதவிகித இடங்கள் தங்களுக்கு வேண்டும் என்றும், தங்களால்தான் பி.ஜே.பி ஆட்சியைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சிவசேனா அழுத்தமாக வலியுறுத்துகிறது. இதுவரை ஆட்சியமைக்க முடியாத சூழ்நிலை தொடர்வதற்கு இதுதான் காரணம் என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவசேனாவை முதல் இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்ய அனுமதித்தால் மகாராஷ்டிரா மாநில பி.ஜே.பியை, முழுவதும் அபகரித்துவிடுவார்கள் என்ற அச்சம் பி.ஜே.பி தரப்புக்கு இருக்கிறது. அதிலும் அயோத்தி தீர்ப்பு விரைவில் வரவிருக்கும் நிலையில், அந்த நேரத்தில் சிவசேனா ஆட்சியில் இருந்தால் அந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் என்றும் மகாராஷ்டிரா பி.ஜே.பி அஞ்சுகிறது. இதனால் சிவசேனாவிற்குப் பணிந்து செல்ல தயக்கம்காட்டுகிறது. உத்தவ் தாக்ரே மகன் ஆதித்யாவை முதல்வர் நாற்காலியில் அமரவைத்துவிட வேண்டும் என்பதில் அவருடைய அப்பா உத்தவ் உறுதியாக இருக்கிறார். அதற்கு பி.ஜே.பி தலைவர் அமித் ஷா எப்போதோ கொடுத்த வாக்குறுதியை மீண்டும் ஞாபகப்படுத்துகிறார் உத்தவ். அதுவே இப்போது சிக்கலுக்கு வழிவகுத்துள்ளது.

உத்தவ் தாக்ரே
உத்தவ் தாக்ரே

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஜனவரி மாதம் பி.ஜே.பி மற்றும் சிவசேனா கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்தது. பி.ஜே.பி-யுடன் எந்தக்கட்சியும் கூட்டணிக்கு வரத்தயங்கிய நேரம் அது. மகாராஷ்டிராவில் எப்படியாவது சிவசேனாவை தங்கள் கூட்டணிக்குக் கொண்டுவரவேண்டும என்று துடித்தார் அமித்ஷா. அதனால் ஒரு வாக்குறுதியை சிவசேனாவிற்கு அளித்தார். சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நம் கூட்டணி வெற்றிபெற்றால் 50:50 பாலிசியில் ஆட்சியை ஐந்தாண்டுகள் தொடரலாம் என்று உத்தவிடம் உறுதி கொடுத்துள்ளார் அமித் ஷா.

அதைத்தான் இப்போது தங்களுக்குச் சாதகமாக கையில் எடுத்துள்ளது சிவசேனா. அந்தக்கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் ``எதிர்க்கட்சிகளை உடைப்பதன் மூலமாக தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்தவர்களுக்கு இந்தத் தேர்தல் முடிவு பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது. தேசியவாத காங்கிரஸை பி.ஜே.பி உடைக்கும் முயற்சியில் இறங்கி, அந்தக்கட்சியில் உள்ள தலைவர்களை வளைத்தது. ஆனால், தேசியவாத காங்கிரஸ் கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றுள்ளதே பி.ஜே.பிக்குச் சரியான பாடம்” என்று குறிப்பிட்டுள்ளது. இதில் சத்தமில்லாமல் பி.ஜே.பிக்கு ஒரு செய்தியையும் சொல்லியிருக்கிறார் உத்தவ் தாக்கரே. அதாவது நீங்கள் எங்களுக்கு ஒத்துவராமல் போனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சமரசம் செய்துகொண்டு நாங்கள் காங்கிரஸ் அணிக்குக்கூட ஆதரவு தெரிவிப்போம் என்பதே அந்த மறைமுக மிரட்டல் செய்தி.

ஆதித்யா தாக்ரே
ஆதித்யா தாக்ரே

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு முழக்கத்தை தெரிவித்ததே பி.ஜே.பி-க்கு செக் வைக்கும் செயல்திட்டம் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். இதனால் தனிப்பெரும் கட்சியாக அந்த மாநிலத்தில் பி.ஜே.பி வெற்றிபெற்றும் ஆட்சியைப் பிடிக்க சிவசேனாவிற்குப் பணிந்து போகவேண்டிய நெருக்கடியை பி.ஜே.பி சந்தித்திருக்கிறது. இந்தச் சிக்கலை முடிவுக்கு கொண்டுவர அமித் ஷாவே மீண்டும் மும்பைக்குச் செல்ல இருக்கிறார். ஜனவரி மாதம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியாகவேண்டும் அல்லது சிவசேனாவை வேறு விதத்தில் பணியவைக்க வேண்டும் என்கிற முடிவோடு இந்தப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் அமித் ஷா. மேலும், இந்த இரண்டு மாநிலங்களிலும் பி.ஜே.பிக்கு ஏற்பட்ட சரிவு குறித்து ஆய்வு நடத்தவும் ஒரு டீமை விரைவில் இரண்டு மாநிலத்திற்கும் அனுப்பவிருக்கிறது பி.ஜே.பி தலைமை.

மகாராஷ்டிராவில் நடக்கப்போவது என்ன என்பதுதான் இன்றைய நிலையில் இந்திய அரசியல் தலைகள் உன்னிப்பாகப் பார்க்கும் ஒரே விஷயம்.