Published:Updated:

`டார்கெட் 2026': பா.ஜ.க-வின் 3 துருப்புச் சீட்டுகளும்... அமித் ஷாவின் 5 அசைன்மென்டுகளும்!

அமித் ஷா
அமித் ஷா

``’அனைவரும் ஒன்றுபடுவோம்... அனைவரையும் முன்னேற்றுவோம்' என்பது எங்கள் அமித் ஷா-ஜியின் தாரக மந்திரம். அதை தமிழ்நாட்டிலும் உறுதிப்படுத்துவோம். வெயிட் அண்ட் வாட்ச் " என்கிறார்கள் பா.ஜ.க நிர்வாகிகள்.

ரூ 67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அரசு விழா, முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் ஆலோசனை, பிறகு பா.ஜ.க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்... என பரபரப்புக்குப் பஞ்சமில்லாமலேயே முடிந்திருக்கிறது அமித் ஷாவின் இரண்டு நாள் சென்னைப் பயணம்.

`ஜி, இந்தப் பயணத்தில் அரசியல்ரீதியாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கு. எங்க நிர்வாகிகளுக்கு ஐந்து முக்கிய அசைன்மென்ட்களும் கொடுக்கப்பட்டிருக்கு. அவையெல்லாம் இப்போதே தொடங்கி, அமித் ஷா எங்களிடம் சொன்னதுபோல, `2021 நிச்சயம்; 2026 லட்சியம்’ என்பதை நாங்கள் நிறைவேற்றுவோம்' என தாமரைத் தொண்டர்களின் குரல்கள் உற்சாகத்தோடு வெளிப்பட, 'அப்படியென்ன முக்கியத் திட்டங்களை வகுத்துக்கொடுத்திருக்கிறார் அமித் ஷா?' என்ற கேள்வியை முன்வைத்தோம்.

இ.பி.எஸ் - அமித் ஷா - ஓ.பி.எஸ்
இ.பி.எஸ் - அமித் ஷா - ஓ.பி.எஸ்

டார்கெட் '2026'

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் உடனான மீட்டிங் முடிந்தவுடன், எங்கள் மாநில மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்தார் அமித் ஷா ஜி. இந்தக் கூட்டத்தில் அவர் அதிகம் பேசாமல் நிர்வாகிகளைப் பேசவிட்டு, கூர்ந்து கவனித்தார்.

`பா.ஜ.க எத்தனையோ மக்கள்நலத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கு. ஆனால், அவையெல்லாம் தமிழ்நாட்டில் ஏதோ அ.தி.மு.க கொண்டு வந்த திட்டங்கள்போல பிம்பம் இருக்கு. நமக்கான உண்மையான அங்கீகாரத்தையே அவர்கள் மறைக்கிறார்கள்' என மேற்கு மண்டலத்திலிருந்து வந்த நிர்வாகிகள் குமுறினர்.

`வரப்போற தேர்தலில்கூட நாம கூட்டணியில் இருக்கிறதை அ.தி.மு.க-வினர் விரும்பலை. மீறிக் கூட்டணியில் இருந்தாலும் உள்ளடி வேலை செய்து, நம்மைத் தோற்கடிக்கவும் அவங்க திட்டமிட்டிருக்காங்க' எனச் சில நிர்வாகிகள் கொதித்தார்கள். எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்த அமித் ஷா ஜி, `கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே’ என கீதையை மேற்கோள் காட்டிவிட்டு, ``அப்படியென்றால், பலன் தானாக வரும் என்று அர்த்தம்... உங்கள் பணிகளை இன்னும் இன்னும் வேகமாகத் தொடருங்கள்" என நம்பிக்கை கொடுத்தார்.

அப்போதுதான் நடிகர் ராதாரவி,``திரைக் கலைஞர்கள் நிறைய பேர் பா.ஜ.க-வில் ஐக்கியமாகியிருக்கோம். நாங்க எதுக்கு இருக்கோம்... வீதி, வீதியாக, ஏன்... வீடுவீடாக நம் பா.ஜ.க-வின் சாதனைகளைக் கொண்டு செல்வோம்" என்றார் தன் பாணியில்.

இதன் தொடர்ச்சியாக நடிகை நமிதாவோ, `நமக்குனு ஒரு டி.வி சேனல் இருந்தால் நம்முடைய சாதனைகளை மக்களிடம் சீக்கிரமாகவே கொண்டு போய்விடலாம்' என்று தெரிவிக்க, எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கேட்டுக்கொண்ட அமித் ஷா ஜி, ``சேனலைவிட வலிமையானது பூத் கமிட்டிதான். வட மாநிலங்களில் வென்றோம். பீகார், திரிபுரா ஃபார்முலா வெல்லும் என்றெல்லாம் இங்கே சிலர் கணக்குப் போட்டீர்கள். ஊழல் எதிர்ப்பு, உள்ளூர் பிரச்னைகளைக் கையில் எடுப்பது என 25 பேர் என பூத் கமிட்டியை வலுப்படுத்தினால், எந்த ஸ்டேட்டிலும் நாம் எளிதில் வெல்லலாம். எல்லோரும் பூத் கமிட்டிகளை அமைப்பதில் தீவிரம் காட்டுங்கள்" எனக் கட்டளையிட்டவர்,

பா.ஜ.க ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா
பா.ஜ.க ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா

தொடர்ந்து,``கூட்டணியில் சீட் பெறுவது, அவர்களைச் சமாளிப்பதை தலைமை பார்த்துக்கொள்ளும். இதன் மூலம் 2021-ல் கணிசமான எம்.எல்.ஏ-க்களைப் பெற்ற பலமான கட்சியாக நாம் இருப்போம். அதேநேரம், மாநிலத் தலைமை உத்தரவிடும் பணிகளை வேகமாகச் செய்தால் வரும் 2026-ல் திராவிடக் கட்சிகளை வீழ்த்தி, அதிகாரத்தில் அமரும் கட்சியாக நாம் இருப்போம். நாளை என்றில்லாமல் இப்போதே வேலைகளைத் தொடங்குங்கள்’ என அனைவரையும் உற்சாகப்படுத்தினார் அமித் ஷா ஜி. இதற்கேற்ப ஏற்கெனவே மாநிலத் தலைமையிடம் வகுத்துக் கொடுத்த சில வியூகங்களின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார்" என்கிறார்கள் உற்சாகம் குறையாமல்.

`ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கிறேன்; அரசியல் பேசாமல் எப்படி?!’ - அரசு விழாவில் அமித் ஷா அதிரடி

பா.ஜ.க-வின் மூன்று துருப்புச்சீட்டுகள்!

``முன்னேற்றம், சட்டம்-ஒழுங்கு, இந்துத்துவம் எனும் பல்வேறு துருப்புச்சீட்டுகளையும் வட மாநிலத் தேர்தல்களில் கையிலெடுத்து வெற்றியடைந்தது பா.ஜ.க. இதோ இங்கு தமிழ்நாட்டிலும் அதேபாணியைத் தொடர்கிறோம்.

1) மக்களின் முன்னேற்றத்துக்காக பா.ஜ.க கொண்டு வந்த திட்டங்கள் குறித்துப் பரப்புரை செய்வது. தற்போது ரூ.67,378 கோடி மதிப்பில் கொண்டு வந்த திட்டம் ஒரு சான்று.

2) சட்டம், ஒழுங்கு - கடந்த தி.மு.க ஆட்சியில் நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து எந்த அளவுக்கு மோசமாக இருந்தன என்று மக்களுக்கு, சமூக வலைதளங்கள் தொட்டு அனைத்து இடங்களிலும் நினைவூட்டுவது.

3) இந்துத்துவம் - பல இடங்களிலும் முருகனுக்கான வேல் யாத்திரை இந்து மக்களை அணிதிரட்டிக்கொண்டிருக்கிறது.

அமித் ஷா
அமித் ஷா

`உன்னால் வெல்ல முடியாதபட்சத்தில், வெல்பவரை உன் பக்கம் இழுத்துக்கொள்" என்பதை அடிக்கடி உச்சரிப்பார் அமித் ஷா. அதாவது, கூடுதல் வாக்குகள் வேண்டுமாயின் எதிர்க்கட்சியை கலைத்து, அந்த வாக்குகளைப் பெற்றுத் தருவோரை கட்சியுடன் சேர்த்துக்கொள்ளுதல் என்பதும் தேர்தல்கால அமித் ஷா ஃபார்முலாவில் ஒன்று. இங்கே வி.பி.துரைசாமி, கு.க.செல்வம், குஷ்பு, தற்போது முன்னாள் எம்.பி-யும், அழகிரி ஆதரவாளராகவும் அறியப்பட்ட கே.பி.ராமலிங்கம் எனப் பலரும் இங்கே அணியமாகியிருக்கிறார்கள். இவர்களின் பரப்புரை மூலம் தி.மு.க மற்றும் அவர்கள் கூட்டணியின் வாக்குகள் மீது, அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் இமேஜ் மீது கடுமையான சேதாரங்களை விளைவிக்க முடியும்.

இவ்வாறாக சில மாதங்களுக்கு முன்னர் வகுத்துக் கொடுத்த வியூகங்களின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், அவற்றில் கிடைத்துவரும் பலன்கள் குறித்தும் எங்களுடைய மாநிலத் தலைமை அமித் ஷா ஜி-யிடம் எடுத்துரைத்தனர். அவரும் ரொம்பவே ஹேப்பி" என்று சொல்லும் கமலாலய நிர்வாகிகள், இதன் தொடர்ச்சியாகத்தான் ஐந்து முக்கிய அசைன்மென்ட்டுகளைக் கொடுத்திருக்கிறார் என அதையும் விவரிக்கத் தொடங்கினர்.

அமித் ஷா-வின் ஐந்துஅசைன்மென்ட்கள்!

1) வாக்களிக்க வரும் வாக்காளர்களைவிட, வாக்களிக்க வராத வாக்காளர்களை மையப்படுத்தி பா.ஜ.க-வின் மற்றொரு குழுவினர் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும். இடப்பெயர்வால் வாக்களிக்க வராதவர்கள் வாக்களிக்க உதவுவதும், வாக்களிக்கும் மனநிலை இல்லாத வாக்காளர்களை கேன்வாஸ் செய்து கரைக்கும்போது, அது கூடுதல் வாக்குகளை பா.ஜ.க பக்கம் திருப்பும். குறைந்த பர்சன்ட் அளவில் வென்ற சில தொகுதிகளின் வாக்குகள் இப்படி வந்ததாக இருக்கும்.

2) `2கே கிட்ஸ்' அதாவது முதன்முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்களிடம் கேன்வாஸ் செய்ய வேண்டும். வரும் தேர்தலில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இவர்கள் இருப்பார்கள். அதேநேரத்தில் டீன் ஏஜ் அதாவது 15, 16 வயதுடையவர்களிடமும் பிரத்யேகமாக ஒரு குழு இப்போதிருந்தே கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் அடுத்து வரும் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள். இது எதிர்கால அறுவடைக்கான இப்போதைய விதை.

அமித் ஷா
அமித் ஷா

3) இந்து மக்கள் வாக்குகளை ஒருமுகப்படுத்தும் அதேநேரம், சிறுபான்மையினரின் வாக்குகள் தி.மு.க பக்கம் ஒருமுகமாகக் குவியாதபடி சிதறடிக்க வேண்டும். கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகளால்தான் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். இங்கு பா.ஜ.க வெற்றிபெறவில்லை என்றாலும், தி.மு.க வெல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

4) வலிமையான கூட்டணி அமையாதபடி தி.மு.க-வை தனிமைப்படுத்த வேண்டும். அதேநேரம், பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளின் அளவை இயன்ற அளவு விரிவு செய்ய வேண்டும். தேவையென்றால், போன தேர்தல்போல மக்கள் நலக்கூட்டணி போல ஒரு மூன்றாவது அணி அமைக்கவும் மறைமுகப் பங்காற்றலாம். இவை, எதிர்ப்பு வாக்குகளைச் சிதறடித்து, தி.மு.க கூட்டணியைத் தோற்கடிக்கும்.

அமித் ஷா: 40 தொகுதிகள் முதல் ரஜினியின் முடிவு வரை... நள்ளிரவைத் தாண்டி நீடித்த ஆலோசனை!

5) எதிர்க்கட்சியின் வலிமையான வேட்பாளருக்கு எதிராக ஸ்டார் வேட்பாளரை நிறுத்த வேண்டும். உதாரணமாக, மு.க.ஸ்டாலினை எதிர்த்து குஷ்பு, அண்ணாமலை போன்ற வேட்பாளரை நிறுத்த வேண்டும். அப்போதுதான் தன்னுடைய உள்ளூர் எதிரியை எதிர்த்துப் போரிடுவதற்கே, தன் மொத்த நேரத்தையும் செலவிடுவார். அப்போது மற்ற தொகுதிகளில் அவரால் கவனம் செலுத்துவது கடினம் .

பா.ஜ.க ஆலோசனைக் கூட்டம்
பா.ஜ.க ஆலோசனைக் கூட்டம்

இந்த ஐந்து முக்கிய அசைன்மென்ட்களையும் செயல்படுத்துவதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டோம். நிச்சயம் பாருங்க... வரப்போற தேர்தலில் பா.ஜ.க-வின் வலிமை உலகறியும் ' என்றவர்கள், `அனைவரும் ஒன்றுபடுவோம்... அனைவரையும் முன்னேற்றுவோம்' என்பது எங்கள் அமித் ஷா ஜி-யின் தாரக மந்திரம். அதைத் தமிழ்நாட்டிலும் உறுதிப்படுத்துவோம். வெயிட் அண்ட் வாட்ச்’’ என்கிறார்கள் `பிக் பாஸ்’ பாணியில்.

`அந்த அனைவர் யார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியே...’ என்கிறார்கள் தமிழ்நாட்டிலுள்ள மரபார்ந்த நடுநிலையான அரசியலாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு