Published:Updated:

`நாடு முழுவதற்குமான மொழி, இந்தி!' - அமித் ஷா

இந்தி திவாஸை ஒட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் கருத்து தேசிய அளவில் சர்ச்சையாகியுள்ளது.

Amit shah
Amit shah

1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி அப்போது ஆட்சியிலிருந்த மத்திய அரசு இந்தியை அலுவல் மொழியாக அறிவித்தது. பல மொழிகள், பல கலாசாரங்கள் கொண்ட இந்தியாவில் அனைத்து மாநிலங்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்தி அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது. அப்போதிலிருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ம் தேதி இந்தி மொழி நாளாக இந்தி திவாஸ் தினம் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Amit shah Tweet
Amit shah Tweet

இந்தியைப் பரப்பும் வகையில் மத்திய அரசு மேற்கொள்ளும் திட்டங்களில் இந்த இந்தி திவாஸும் ஒன்று. அதன்படி இந்த ஆண்டுக்கான இந்தி திவாஸ், இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இந்தி எதிர்ப்பு மாநிலங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Vikatan

அவர் ட்விட்டரில், ``இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. ஆனால், நமது நாடு முழுவதற்கும் ஒரே மொழி இருப்பதும் அவசியமாகும். அதுவே உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். இன்று ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமையாக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால்தான் முடியும்.

Amit shah Tweet
Amit shah Tweet

இன்று இந்தி தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்துக் குடிமக்களிடமும் நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். நாம் நமது தாய்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். மேலும், இந்தியையும் பயன்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் ஒரு நாடு, ஒரு மொழி கனவை நனவாக்குவோம். அதற்கான உங்கள் பங்களிப்பையும் இந்த இந்தி நாளில் செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் கருத்து தேசிய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.