Published:Updated:

`இந்திய கலாசாரத்தை பின்பற்றியே ராஜ்நாத் சிங் பூஜை செய்தார்!’- அமித் ஷா

ரஃபேல் விமானத்தின் மீது தேங்காய், பூக்கள் வைத்தும், முன்பகுதியில் ஓம் என்று இந்தியிலும் எழுதினார் ராஜ்நாத் சிங்.

amith sha
amith sha

பிரான்ஸிடமிருந்து 63,460 கோடி ரூபாய் செலவில் 126 ரஃபேல் போர் விமானங்களுக்குப் பதிலாக 36 விமானங்களை வாங்குவதற்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. முதல் விமானத்தை 36 மாதங்களுக்குள்ளும் அனைத்து விமானங்களையும் 67 மாதங்களுக்குள்ளும் தயாரித்து ஒப்படைக்கப்படும் என்பது ஒப்பந்தத்தின் சாராம்சம். இது தொடர்பான ஒப்பந்தங்கள் மீறப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

rajnath singh
rajnath singh

இந்த நிலையில், பிரான்ஸிடமிருந்து முதல் விமானத்தைப் பெறுவதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக பாரிஸ் சென்றிருந்தார். இருநாட்டு அதிகாரிகளின் உரைக்குப் பிறகு முதல் ரஃபேல் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, ரஃபேல் விமானத்துக்குச் சந்தனம், பொட்டு, டயர்களின் கீழ் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்தார் ராஜ்நாத் சிங். அதேபோல் ரஃபேல் விமானத்தின் மீது தேங்காய், பூக்கள் வைத்தும், முன்பகுதியில் ஓம் என்று இந்தியிலும் எழுதினார் ராஜ்நாத் சிங். பூஜைக்குப் பின் ரஃபேல் விமானத்தில் பறந்தார் ராஜ்நாத்.

இது தொடர்பாக சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. ராஜ்நாத்தின் இந்த நடைமுறைக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. காங்கிரஸைச் சேர்ந்த சந்தீப் தீட்சித், ``விஜயதசமி என்பது நாம் அனைவரும் கொண்டாடக்கூடிய ஒரு விழா. அதை ஏன் விமானத்துடன் இணைக்க வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். காங்கிரஸ் கட்சியின் இந்த விமர்சனத்துக்கு அமித் ஷா பதிலளித்துள்ளார்.

Amith sha
Amith sha

ஹரியானாவில் நடந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ``ரஃபேல் விமானத்துக்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சாஸ்திரா பூஜை செய்தார். இந்திய கலாசாரத்தைப் பின்பற்றியே பூஜை செய்தார். காங்கிரஸ் இதை விரும்பவில்லை. விஜயதசமி அன்று சாஸ்திரா பூஜை செய்யக்கூடாதா? காங்கிரஸ் கட்சி, இந்திய கலாசாரத்துக்கு எதிரானது. எதை விமர்சிக்க வேண்டும்; விமர்சிக்கக் கூடாது என்பதை காங்கிரஸ் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.