கட்டுரைகள்
Published:Updated:

கட்சிக்கு சார்ஜ் ஏற்றுவாரா தினகரன்? - தகிக்கும் அ.ம.மு.க

தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
News
தினகரன்

கொரோனாவுக்குப் பிறகு அ.ம.மு.க-வில் நடந்த பெரிய விஷயம் எதுவென்றால், அது கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னையில் நடந்த பொதுக்குழுதான்.

‘அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவதே லட்சியம்’ என்ற ஒற்றைக் குறிக்கோளில் டி.டி.வி.தினகரனால் தொடங்கப்பட்டதுதான் அ.ம.மு.க. இன்று, இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாகக் காட்சியளிக்கிறது அந்தக் கட்சி. பொதுக்குழுவைக் கூட்டினார், பெயரளவுக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார், தேவர் ஜயந்திக்கு நேரில் சென்றார், அதோடு மீண்டும் காணாமல்போய்விட்டார் தினகரன். ஒருபக்கம் அ.தி.மு.க ஆஃப் ஆகிக் கிடக்கும் நிலையில், இன்னொரு பக்கம் அ.ம.மு.க-விலும் எந்தச் சத்தமும் இல்லை. என்ன ஆனது அ.ம.மு.க? களத்தில் விசாரித்தோம்.

மே 2018-ல் தொடங்கியபோது என்ன நிலையில் அ.ம.மு.க இருந்ததோ, அதே நிலையில்தான் தற்போதும் இருக்கிறது. தேர்தல் அரசியல் அ.தி.மு.க-வை வீழ்த்த, 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தன் கட்சி நிர்வாகிகளைக் களமிறக்கினார் தினகரன். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வெளிச்சம் பெற முடியவில்லை. ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவும் முடியவில்லை. கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட தினகரனே தோல்வியைத் தழுவினார். இதைத் தொடர்ந்து நிர்வாகிகள் பலர் தி.மு.க., அ.தி.மு.க-வுக்குத் தாவினர்.

கட்சிக்கு சார்ஜ் ஏற்றுவாரா தினகரன்? - தகிக்கும் அ.ம.மு.க

அ.ம.மு.க-வின் தற்போதைய நிலை குறித்து, அந்தக் கட்சியின் சீனியர் நிர்வாகிகளிடம் பேசினோம். “கொரோனாவுக்குப் பிறகு அ.ம.மு.க-வில் நடந்த பெரிய விஷயம் எதுவென்றால், அது கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னையில் நடந்த பொதுக்குழுதான். அப்போது, மூத்த நிர்வாகிகள் பலரும், ‘2024 நாடாளுமன்றத் தேர்தலை, தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து சந்திக்க வேண்டும்’ என வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தனர். இதற்கு தினகரனும் இசைவு தெரிவித்தார். பின்னர், ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில், கூட்டணி குறித்து கலந்தாலோசிக்க தேதியும் குறித்தார் தினகரன். ஆனால், எந்தக் காரணமும் இன்றி அந்தக் கூட்டம் ரத்துசெய்யப்பட்டது.

இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுபட்ட பிறகு, தினகரனின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிகிறது. ‘காங்கிரஸ் அல்லது பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே, நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது’ என்றார். அதற்கு சீனியர் நிர்வாகிகள் சிலர், `பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பது நமக்கு உதவாது. மக்கள் பிரச்னைகளைக் கையில் எடுத்து போராட்டங்களை நடத்த வேண்டும். அ.ம.மு.க-வை வலுப்படுத்துங்கள்’ என்றனர். ஆனால், அதை தினகரன் கண்டுகொள்ளவில்லை. தமிழக அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களை முன்னெடுக்கும் நிலையில், தினகரனிடமிருந்து வெறும் அறிக்கைகளே வெளிவந்தன. ‘ட்விட்டரிலேயே அரசியல் செய்தால் போதாது, களத்தில் இறங்க வேண்டும்’ என நிர்வாகிகள் வற்புறுத்திய பிறகுதான், அக்டோபர் 12-ம் தேதி தமிழக அரசுக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தியது அ.ம.மு.க.

நல்லதுரை
நல்லதுரை

திடீரென எடப்பாடி, பன்னீரை எதிர்த்து அரசியல் செய்கிறார். பின்னர், ‘பன்னீருடன் இணைந்து செயல்படத் தயார்’ என்கிறார். கட்சி ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், தூத்துக்குடி மாணிக்கராஜா, திருவாரூர் காமராஜ், சென்னை செந்தமிழனைத் தாண்டி சொல்லும்படியான நிர்வாகிகள் யாரும் கட்சியில் இல்லை. சசிகலாவுடன் தினகரன் இணைந்து செயல்படுவார் என எதிர்பார்த்தோம். அதுவும் நடக்கவில்லை. வழி தெரியாமல் காலத்தை ஓட்டுகிறோம்” என்றனர் குமுறலுடன்.

நிர்வாகிகளின் குமுறல் குறித்து, அ.ம.மு.க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாநிலச் செயலாளர் நல்லதுரையிடம் பேசினோம். “பொது வெளியில் நாங்கள் பெரிய அளவிலான எந்த பொதுக்கூட்டமும், போராட்டமும் நடத்தவில்லை. ஆனால், உள்ளுக்குள் எல்லா வேலைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கடந்த மாதம் முதல் சார்பு அணிகளின் கூட்டம் நடந்து வருகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து இயங்கிவருகிறோம்.

‘அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள பிளவைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தொண்டர்களை ஒருங்கிணைக்க, தமிழகம் முழுக்க நடைப்பயணம் செல்ல வேண்டும்’ என தினகரனிடம் தெரிவித்திருக்கி றோம். இதை அவர் ஏற்றுக்கொண்டிருக் கிறார். விரைவில் தமிழகம் தழுவிய நடைப்பயணம் இருக்கும்” என்றார்.

பியூஸ் போவதற்கு முன்னதாக, கட்சியை ‘சார்ஜ்’ செய்யவேண்டியது அவசியம்..!