Published:Updated:

விஜயபாஸ்கரின் நிவாரண அரிசி மூட்டையில் `நாளைய முதல்வர்’ பட்டம்?! - கைது செய்யப்பட்ட அ.ம.மு.க பிரமுகர்

அமைச்சர் குறித்து அவதூறு
அமைச்சர் குறித்து அவதூறு ( ஆர்.வெங்கடேஷ். )

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், புகைப்படத்தில் `நாளைய முதலமைச்சரே' என்று மார்ஃபிங் செய்து வெளியிட்டதாக அ.ம.மு.க தொழில்நுட்பப்பிரிவுச் செயலாளர் முத்துக்குமாரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமீபத்தில் தன் சொந்த தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தொகுதி மக்களுக்குத் தனது சொந்த செலவில், பொன்னி அரிசி மூட்டைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார். அந்த அரிசி மூட்டைகளில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் படத்துடன் விஜயபாஸ்கரின் படமும் பொறிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, அந்த மூட்டைகளில் விஜயபாஸ்கரின் பெயருக்கு மேலே `நாளைய முதலமைச்சரே' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதுடன் அமைச்சருக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

அமைச்சர் குறித்து அவதூறு
அமைச்சர் குறித்து அவதூறு

இந்த நிலையில்தான், அமைச்சரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், நிவாரண அரிசி மூட்டைகளில் நாளைய முதலமைச்சர் என்ற வாசகத்தை மார்ஃபிங் செய்து வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டது. சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புதுக்கோட்டை நகர் காவல் நிலையத்தில், புதுக்கோட்டை அ.தி.மு.க தகவல் தொழில் நுட்பப்பிரிவு நகரச் செயலாளர் குணசீலன் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், புகைப்படத்தில் `நாளைய முதலமைச்சரே' என்று மார்ஃபிங் செய்து வெளியிட்டதாக அ.ம.மு.க தொழில்நுட்பப்பிரிவு செயலாளர் முத்துக்குமார் என்பவரைப் புதுக்கோட்டை காவல்துறையினர் விழுப்புரத்துக்குச் சென்று கைது செய்தனர்.

மேலும், தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் கீழ் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, அ.ம.மு.க பிரமுகர் முத்துக்குமாரின் கைது நடவடிக்கைக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி மூட்டைகளில் சுகாதாரத்துறை அமைச்சரின் படம் இடம்பெற்றிருந்தது பற்றி பொதுவெளியில் எல்லாராலும் பகிரப்பட்ட தகவலைத் தனது சமூக வலைதளப்பக்கத்தில் முத்துக்குமார் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் குறித்து அவதூறு, -- டிடிவி.தினகரன் அறிக்கை
அமைச்சர் குறித்து அவதூறு, -- டிடிவி.தினகரன் அறிக்கை

இதற்காக அவரை காவல்துறையினர் திடீரென கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. யாருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லாத புகாரின் அடிப்படையில் எத்தனையோ ஆயிரம் பேரால் பகிர்ந்த நிலையில், முத்துக்குமாரை மட்டும் கைது செய்திருப்பது அ.ம.மு.க மீது எந்தளவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும் பழிவாங்கும் சிந்தனையோடும் ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. பொதுமக்களின் பாதுகாப்புப் பணிக்குக் கூட போதுமான காவலர்கள் இல்லாத நெருக்கடியான நேரத்தில் புதுக்கோட்டையிலிருந்து காவலர்களை விழுப்புரம் மாவட்டத்துக்கு அனுப்பி அவரைக் கைது செய்திருக்கிறார்கள். காவல்துறையின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் இது உள்ளது. முத்துக்குமாரை உடனே விடுதலை செய்வதுடன், அவர் மீதான பொய் வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு