Published:Updated:

`இதற்கு மேலும் தினகரனுக்காக உழைக்க முடியாது!' - அ.ம.மு.க-வில் இருந்து அதிர்ச்சிக் குரல்

ஒவ்வொரு முறையும் சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த பின்னர் பேட்டி கொடுப்பது தினகரனின் வழக்கம். இந்தப் பேட்டிகள் அனைத்தும் சசிகலாவுக்கு எதிராகத் திரும்புவதாக வழக்கறிஞர்கள் மத்தியில் குமுறல் இருக்கிறது.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒவ்வொரு நிர்வாகியாக வெளியேறுவதில் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறார் சசிகலா. தினகரனிடமும் இதுகுறித்த தன்னுடைய ஆதங்கத்தைப் பதிவுசெய்திருக்கிறார். `புதிய நிர்வாகிகள் நியமனத்திலும் பாரபட்சம் காட்டியிருக்கிறார் தினகரன். இனிமேலும் அவருக்காக உழைக்க வேண்டுமா?' என்ற குமுறல் அ.ம.மு.க-வில் கேட்கத் தொடங்கியுள்ளது.

சசிகலா
சசிகலா

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், கடந்த 3-ம் தேதி சசிகலாவைச் சந்தித்துப் பேசினார் டி.டி.வி.தினகரன். இந்த சந்திப்பின்போது, விவேக் ஜெயராமன், டாக்டர் வெங்கடேஷ் உட்பட குடும்ப உறவுகள் பலரும் உடனிருந்தனர். அப்போது, `நம்மிடம் இருந்து ஒவ்வொருவராக விலகிச்செல்வது ஏன்?' என விசாரித்திருக்கிறார் சசிகலா. சிறை சந்திப்புக்குப் பிறகு பேட்டியளித்த தினகரன், `வேறு ஒரு கட்சிக்குச் செல்கிறேன் என ஒரு நிர்வாகி முடிவெடுத்த பிறகு, அவரைத் தடுத்துநிறுத்த முடியாது. அவர்களைத் தடுப்பதும் நியாயமாக இருக்குமா? சுயவிருப்பத்தோடு ஒருவர் அரசியலில் இருக்க வேண்டும்.

எங்களிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லாம் முக்கிய தளபதிகள் கிடையாது. அரசியலைக் கடந்து நண்பராகப் பழகிக் கொண்டிருக்கும் சேலஞ்சர் துரையோ, 20 வருடங்களாகப் பழகிக் கொண்டிருக்கும் புகழேந்தியோ எங்களைவிட்டுச் சென்றார்கள் என்றால் வருத்தமாக இருக்கும். அப்படியே புகழேந்தி போகிறார் என்றாலும் அவரிடம் நான் பேசிப்பார்ப்பேன்' என விளக்கம் கொடுத்தார். இந்தப் பேட்டியால் பெங்களூரு புகழேந்தி உள்பட அருகில் இருந்த நிர்வாகிகள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார்கள்.

`` சசிகலாவைச் சந்தித்த பிறகு வெளியான புதிய நிர்வாகிகள் பட்டியலால் அ.ம.மு.க-வில் கொந்தளிப்பு அதிகரித்திருக்கிறது. சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையில் மறைமுக பனிப்போர் நீடித்துவருவதை இந்த முறை நடந்த சந்திப்பில் உணர முடிந்தது. முகத்தை சற்று இறுக்கமாக வைத்துக்கொண்டு சில கேள்விகளைக் கேட்டார் சசிகலா. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சசிகலா மனநிலையிலும் மாற்றம் வந்துவிட்டது. இது எந்த நேரத்திலும் புயலாக மாறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. வருகிற நாள்களில், அதுதொடர்பான பிரச்னைகள் வெடிக்கக் கூடும்" என விவரித்த மன்னார்குடி குடும்ப உறவுகள் சிலர், `` ஒவ்வொரு முறை சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த பின்னர் பேட்டி கொடுப்பது தினகரனின் வழக்கம். `சின்னம்மாவுடன் பேசினேன்; அரசியல்ரீதியாக விவாதித்தேன்' எனப் பேசி வருகிறார். இந்தப் பேட்டிகள் அனைத்தும் சசிகலாவுக்கு எதிராகத் திரும்புவதாக வழக்கறிஞர்கள் மத்தியில் குமுறல் இருக்கிறது.

தினகரன்
தினகரன்

சசிகலாவை சந்தித்தது குறித்து தினகரனைத் தவிர வேறு யாரும் பேசுவதில்லை. இதன் காரணமாக, ` சிறையில் இருந்து கொண்டே கட்சியை நடத்துகிறார். ஆலோசனை நடத்துகிறார் சசிகலா' என உளவுத்துறையின்மூலம் அறிக்கை சென்று கொண்டிருக்கிறது. விரைவில் நன்னடத்தை காரணமாக அவர் வெளியே வருவதற்கான சூழல்கள் இருக்கும்போது, தினகரனின் பேட்டிகளால் சிக்கல் ஏற்படுவதாக உணர்கின்றனர். ஒருவேளை, `4 ஆண்டுகளைக் கடந்த பிறகு சசிகலா வெளியில் வரட்டும்' என தினகரன் நினைக்கிறாரா எனவும் தெரியவில்லை. சிறையில் இருந்து வெளியே வந்தாலும் தினகரனை ஓரம்கட்டும் வேலைகளைத்தான் சசிகலா தொடர்வார். அதற்கான அறிகுறிகளைக் காண முடிகிறது" என்கின்றனர் விரிவாக.

தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா விலகலுக்குப் பிறகு புதிய நிர்வாகிகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார் தினகரன். அதில், துணைப் பொதுச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் தஞ்சை ரங்கசாமியும் பொருளாளராக வெற்றிவேலும், தலைமை நிலையச் செயலாளராக மனோகரனும் கொ.ப.செ-வாக சி.ஆர்.சரஸ்வதியும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சேலஞ்சர் துரைக்கும் புகழேந்திக்கும் எந்தவித பொறுப்புகளையும் தினகரன் அறிவிக்கவில்லை.

30 வருடங்களுக்கு மேலாக உழைத்துவிட்டேன். இதற்கு மேலும் உழைப்பதற்கு என்னிடம் வலு இல்லை.
பெங்களூரு புகழேந்தி

`` ஊடகங்களிடம் பேட்டி கொடுத்தபோது, புகழேந்தியின் தியாகம்குறித்து உணர்வுபூர்வமாக விவரித்தார் தினகரன். ஆனால், அதேநாளில் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டிவிட்டார். புதிய நிர்வாகிகள் பட்டியலில் புகழேந்திக்கு என்று எந்த இடத்தையும் அவர் ஒதுக்கவில்லை. இதனால் வேதனைப்பட்ட புகழேந்தி, ` கடந்த 30 வருடங்களாகக் கடுமையாக உழைத்துவிட்டேன். இதற்கு மேலும் உழைப்பதற்கு என்னிடம் வலு இல்லை. புதிய பொறுப்பை வழங்காமல் இருந்ததற்கு நன்றி' எனக் கூறிவிட்டார். இப்படிப்பட்ட அணுகுமுறைகள் நீடிப்பதால்தான் மாற்றுக் கட்சிகளை நோக்கி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதை, தினகரன் உணராமல் இருக்கிறார்" என ஆதங்கப்படுகின்றனர்.