Election bannerElection banner
Published:Updated:

அ.ம.மு.க - தே.மு.தி.க கூட்டணியால் பாதிப்பு எந்த அணிக்கு? #TNElection2021

தினகரன் - பிரேமலதா விஜயகாந்த்
தினகரன் - பிரேமலதா விஜயகாந்த்

அ.ம.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு சென்னை, வட தமிழகம் மற்றும் கொங்கு மண்டலத்தை ஒட்டி பெருவாரியான தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. கட்சியின் பொருளாளர் பிரேமலதா, விஜயகாந்த் முதன்முதலில் வெற்றிபெற்ற விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் அங்கம்வகித்த தே.மு.தி.க., இந்தமுறை அ.ம.மு.க கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. அ.தி.மு.க கூட்டணியில் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததால், தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்தார் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா. தொடர்ந்து அ.ம.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகச் செய்திகள் வெளியாகின. இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அ.ம.மு.க - தே.மு.தி.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தே.மு.தி.க-வுக்கு அறுபது தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

தே.மு.தி.க 
தே.மு.தி.க 

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் வரையிலும்கூட தே.மு.தி.க-வுடன் கூட்டணி அமைக்க இருபெரும் திராவிடக் கட்சிகளும் முட்டி மோதின. அதிலும், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க எப்படியும் தங்களின் கூட்டணிக்குள் வந்துவிடும் என எதிர்பார்த்தார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து முதல்வர் வேட்பாளரானார் விஜயகாந்த். ஆனால், தேர்தல் முடிவுகள் கசப்பான அனுபவத்தையே தே.மு.தி.க-வுக்குக் கொடுத்தன. போட்டியிட்ட 104 தொகுதிகளில், 103 தொகுதிகளில் டெபாசிட்டே கிடைக்கவில்லை.

தொடர்ந்து, 2019 தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், நான்கு இடங்களைப் பெற்று படுதோல்வியைச் சந்தித்தது தே.மு.தி.க. தொடர்ந்து அ.தி.மு.க கூட்டணியில் நீடித்துவந்தபோதும், அந்தக் கட்சிக்கு போதிய முக்கியத்துவத்தை அளிக்கவில்லை அ.தி.மு.க. ''எங்களைக் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழையுங்கள்'' என தே.மு,.தி.க வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்தும் அ.தி.மு.க கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து, பா.ம.க., பா.ஜ.க-வுடனான தொகுதிப் பங்கீடு முடிந்த பிறகு கடைசியாக தே.மு.தி.க-வை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது அ.தி.மு.க. கூடவே குறைவான தொகுதிகளை, அதிலும் தே.மு.தி.க விரும்பிய தொகுதிகளை ஒதுக்க மறுத்தது அ.தி.மு.க.

 அ.தி.மு.க குறித்து  அவதூறாகப் பேசியதாக தே.மு.தி.க கழக துணை ச்செயலாளர் எல்.கே.சுதீஷ் உருவ பொம்மையை எரித்த அ.தி.மு.க-வினர்.
அ.தி.மு.க குறித்து அவதூறாகப் பேசியதாக தே.மு.தி.க கழக துணை ச்செயலாளர் எல்.கே.சுதீஷ் உருவ பொம்மையை எரித்த அ.தி.மு.க-வினர்.

இந்தநிலையில், கடந்த 9-ம் தேதி தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அ.தி.மு.க அணியிலிருந்து விலகுவதாக முடிவெடுக்கப்பட்டது. கூட்டம் முடிந்து வெளியே வந்த தே.மு.தி.க மாநிலத் துணைச் செயலாளர் சுதீஷ், `இன்றைக்குத்தான் எங்களுக்கு தீபாவளி. அ.தி.மு.க அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கும்' எனக் கொதித்தெழுந்தார். விஜயகாந்தின் மகன், விஜய பிரபாகரனும், அ.தி.மு.க அரசையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``பக்குவமில்லாத அரசியலை தே.மு.தி.க முன்னெடுக்கிறது’’ என விமர்சித்தார். அதற்கு பதிலளிக்கும்விதமாக நேற்று பேசிய பிரேமலதா, ``முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த பக்குவம், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை'' என்றார். ஏற்கெனவே, ``அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம். கண்டிப்பாக இந்தத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களைத் தோற்கடிப்போம்’’ என அ.ம.மு.க ஒருபுறம் களமிறங்க, மறுபுறம் தே.மு.தி.க-வும் தற்போது அ.தி.மு.க-வுக்கு எதிராக வீரியமாக கம்பைச் சுழற்ற ஆரம்பித்திருக்கிறது.

`தோப்பூர்' முதல் `தொகுதி இல்லை' வரை - தே.மு.தி.க-வின் 15 ஆண்டுக்கால அரசியல் ரீவைண்ட்!

அ.ம.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு சென்னை, வட தமிழகம் மற்றும் கொங்கு மண்டலத்தை ஒட்டி பெருவாரியான தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. கட்சியின் பொருளாளர், பிரேமலதா, விஜயகாந்த் முதன்முதலில் வெற்றிபெற்ற விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தநிலையில், அ.ம.மு.க- தே.மு.தி.க - எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகள் இணைந்து அமைத்திருக்கும் இந்தக் கூட்டணியால் பாதிப்பு தி.மு.க அணிக்கா இல்லை அ.தி.மு.க அணிக்கா என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்.

ப்ரியன்
ப்ரியன்

``நிச்சயமாக அ.தி.மு.க கூட்டணிக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். அ.ம.மு.க தனித்துப் போட்டியிட்டாலே அது தென்மாவட்டங்களில் அ.தி.மு.க-வுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். தற்போது தே.மு.தி.க-வும் இணைந்திருப்பதால் தென் மாவட்டங்களில் அ.தி.மு.க-வுக்கு பாதிப்பு இன்னும் அதிகமாகும். அ.ம.மு.க-வுக்கு ஐந்தரை சதவிகித வாக்குகள், தே.மு.தி.க-வுக்கு இரண்டரை சதவிகித வாக்குகள், இன்னும் சிறிய கட்சிகளின் வாக்குகள், சசிகலாவை சேர்க்காததால் அ.தி.மு.க-வில் அதிருப்தியாக இருக்கும் தொண்டர்களின் வாக்குகள் என அனைத்தையும் சேர்த்தால் பத்து சதவிகித வாக்குகள் வரும்.

இதுவே இந்தக் கூட்டணிக்கு, பலமான அணி என்கிற தோற்றத்தைக் கொடுக்கும். இந்தக் கூட்டணி வெற்றிபெறுகிறதோ இல்லையோ, அ.தி.மு.க கூட்டணியின் வெற்றியை நிச்சயமாகத் தடுக்கும். தென்மாவட்டங்கள் மட்டுமல்ல, தே.மு.தி.க போட்டியிடும் மத்திய மற்றும் வட மாவட்டங்களிலும் அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவே ஏற்படும். குறிப்பாக, தெலுங்கு மைனாரிட்டி மக்கள் வாழும் பகுதிகளில் அ.தி.மு.க அதிக பாதிப்பைச் சந்திக்கும். தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படும் வாய்ப்புகளே அதிகம்'' என்கிறார் அவர்.

ஆனால், ``அ.ம.மு.க - தே.மு.தி.க கூட்டணி தி.மு.க-வுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பயனடையப்போவது அ.தி.மு.க-தான்'' என அடித்துச் சொல்கிறார் அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம். அவர் பேசும்போது,

``தி.மு.க வெல்லக் கூடாது. அதற்காக வேலை செய்வோம் என்று அ.ம.மு.க-வின் பொதுச்செயலாளர் தினகரன் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். அதேபோல, கடந்த காலங்களில் தி.மு.க-வால் என்னென்ன பாதிப்புகளை தே.மு.தி.க சந்தித்திருக்கிறது என்பது தே.மு.தி.க தொண்டர்களுக்குத் தெரியும். தவிர, தற்போது எங்கள் கூட்டணியைவிட்டு தே.மு.தி.க வெளியேறியபோதும், எங்கள் தலைவர்கள் அவர்களைத் தரக்குறைவாக விமர்சிக்கவில்லை. தே.மு.தி.க தரப்பில்தான் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதையும் தே.மு.தி.க தொண்டர்கள் நன்கு அறிவார்கள். இயல்பாகவே, தே.மு.தி.க தொண்டர்களுக்கு தி.மு.க-வின் மீதுதான் அதிகமான கோபம் இருக்கிறது. அந்தக் கூட்டணிக்கு எதிராகத்தான் களத்தில் வேலை செய்வார்கள்.

கல்யாணசுந்தரம்
கல்யாணசுந்தரம்

கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை, அ.ம.மு.க கூட்டணிக்கு இங்கு எந்த வாக்குவங்கியும் இல்லை. தே.மு.தி.க-வுக்கு வேண்டுமானால் தொகுதிக்கு 200, 300 வாக்குகள் விழலாம். வட மாவட்டங்களைப் பொறுத்தவரை தே.மு.தி.க-வுக்கு 2 சதவிகித வாக்குகள் கிடைத்திருக்கின்றன. ஆனால், அது மாற்றத்தை விரும்புபவர்கள் அளித்த வாக்குகள். அது இந்தமுறை அந்தக் கட்சிக்குக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். தவிர, அ.ம.மு.க கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ, ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய கட்சிகள் இருப்பதால், அது தி.மு.க-வுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். அ.தி.மு.க-வுக்கு சாதகமாக இருக்கும்'' என்கிறார் அவர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு