தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற தமிழக ஆளுநர் தேநீர் விருந்தை திமுக உட்பட அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளின் இத்தகைய புறக்கணிப்பு குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்தும், அதற்கு எதிராக வந்த பதில்களும் சமூக வலைதளங்களில் விவாதமாகின. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஆளுங்கட்சி, ஆளுநர் இடையே நிலவும் சூழல், ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிப்பு குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அப்போது பேசிய தினகரன், ``பேரறிஞர் அண்ணா, `ஆட்டுக்கு தாடிபோல, நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை’ என்று சொன்னார்கள். அவர் வழி வந்தவர்கள் நாங்கள். தி.மு.க எதிர்க்கிறது என்பதற்காக, நாங்க தி.மு.க-வுக்கு எதிர்ப்பாகச் சொல்லவேண்டிய அவசியமில்லை. சட்டசபையில் மக்களின் பிரநிதிகள் நிறைவேற்றுகின்றவற்றை, ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பவேண்டியது அவர் (ஆளுநர்) கடமை என்று நினைக்கிறோம். மாநிலத்துக்குத் தேவையானவற்றை மத்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தருவதற்கான செயல்களை கவர்னர் செய்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் என்னுடைய கருத்து" எனக் கூறினார்.
மேலும் தி.மு.க குறித்துப் பேசுகையில், ``தி.மு.க வெளிநடப்பு செய்யும், அப்புறம் போய் கவர்னரைப் பார்ப்பாங்க.. ஆளுநர் தேநீர் விருந்தில் தி.மு.க கலந்துகொள்ளாதது தவறில்லை என்றுதான் நினைக்கிறேன்" என தினகரன் பேசினார்.