Published:Updated:

`சசிகலா சொன்னதால் அமைதி.. இனிதான் டிடிவி ஆட்டம்!' -புதிய அலுவலகக் கட்டடத்தால் உற்சாகத்தில் அ.ம.மு.க

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

சென்னை ராயப்பேட்டை பகுதி என்றாலே, அ.தி.மு.க அலுவலகம் என்று கட்சிக்காரர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதை மாற்ற வேண்டும். அங்குள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு செக் வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் இந்த இடத்தில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை என்றாலே அ.தி.மு.கவின் தலைமை அலுவலகம்தான் கட்சிக்காரர்கள் மனதில் நிற்கும். அதை மாற்ற வேண்டும் என்றும் அ.தி.மு.கவினருக்கு டப் ஃபைட் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அங்கு அ.ம.மு.கவின் தலைமை அலுவலகத்தைத் தினகரன் திறந்து வைத்துள்ளார். ``வடிவேல் மிகச்சிறந்த காமெடியன். அவர் இல்லாததால் அ.தி.மு.க வில் பல காமெடியன் உருவாகியிருக்கிறார்கள் என்றும், தி.மு.க என்றாலே எம்.கே (மு.கருணாநிதி) கருணாநிதியைத்தான் சொல்வார்கள்.

அ.ம.மு.க அலுவலகம் திறப்பு
அ.ம.மு.க அலுவலகம் திறப்பு

ஆனால் இன்று பி.கே என்று சொல்லும் நிலைமை தி.மு.க -வுக்கு வந்துவிட்டது" என தி.மு.க, அ.தி.மு.கவைக் க்கடுமையாக கிண்டல் அடித்துப் பேசியிருக்கிறார் தினகரன். கொஞ்ச காலம் அமைதியாக இருந்து வந்த தினகரன் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்திருக்கிறாரே என்ன காரணம்...

சென்னை ராயப்பேட்டை பகுதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அ.ம.மு.க அலுவலகத்தை, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திறந்து தொடங்கி வைத்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, நடந்த பல்வேறு அரசியல் சம்பவங்களின் தொடர்ச்சியாக, டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இதில் அ.தி.மு.கவில் உள்ள முக்கியத் தலைவர்கள் ஐக்கியமானார்கள். பின்பு தீவிர அரசியலை மேற்கொண்டுவந்த தினகரன் நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் அடைந்த தோல்வியால், அவருடன் இருந்த முக்கியத் தலைவர்கள் எல்லோரும் மீண்டும் அ.தி.மு.க, தி.மு.கவில் சேர ஆரம்பித்தார்கள்.

தினகரன்
தினகரன்
``தி.மு.க என்றாலே எம்.கே கருணாநிதியைத்தான் சொல்வார்கள். ஆனால் இன்று பி.கே என்று பிரசாந்த் கிஷோச் சொல்லும் நிலைமை தி.மு.கவுக்கு வந்துவிட்டது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்"
டிடிவி தினகரன்

இந்த நிலையில் அம்பாசமுத்திரம் முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் அ.தி.மு.க வில்இணைந்தார். அவருக்குச் சொந்தமான கட்டடத்தில்தான் அ.ம.மு.க அலுவலகம் இருந்து வந்தது. அ.தி.மு.கவுடன் இணைந்ததை பிறகு அ.ம.மு.கவிற்குப் புதிய அலுவலகம் அமைக்கும் பணியில் தினகரன் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் தஞ்சையில் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்ட முருகேசனின் சொந்தமான இடத்தில் அலுவலகத்தைத் திறந்து வைத்துவிட்டு பத்திரிகையாளரிடம் பேசினார்.

``சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்துப் போட்டியிட இருக்கிறோம். அத்தோடு அ.ம.மு.கவிற்குச் சின்னத்தை மிக விரைவில் தேர்தல் ஆணையம் வழங்கும். மேலும், சசிகலா மிக விரைவில் சிறையிலிருந்து வெளியே கொண்டு வரச் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர் வெளியில் வந்த பிறகு உங்களுடைய கேள்விக்குப் பதில் அளிப்பார். அத்தோடு அவர் வெளியே வந்தபிறகு எங்களுடன் தான் இருப்பார். இதில் எந்த மாற்றமும் இல்லை. நான் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளேன்.

பத்திரிகையாளர்களிடம் பேட்டியளிக்கும்  தினகரன்
பத்திரிகையாளர்களிடம் பேட்டியளிக்கும் தினகரன்

ஒன்று ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன். மற்றொன்று எந்தத் தொகுதி என்று இன்னும் முடிவு செய்யவில்லை. கண்டிப்பாகத் தென்மாவட்டமாக இருக்கலாம்" என்றார். அதைத்தொடர்ந்து பேசிய அவர், ``வடிவேல் மிகப்பெரிய காமெடியன். அவர் சீன்ல இல்லையென்றதும் அ.தி.மு.கவில் பல காமெடியன்கள் உருவாகியிருக்கிறார்கள்" என்று அ.தி.மு.கவினரைச் சரமாரியாகத் தாக்கிப் பேசினார். அதைத்தொடர்ந்து, ``தி.மு.க என்றாலே எம்.கே கருணாநிதியைத்தான் சொல்வார்கள். ஆனால் இன்று பி.கே என்று பிரசாந்த கிஷோரைச் சொல்லும் நிலைமை தி.மு.கவிற்கு வந்துவிட்டது. (பிரஷாந்த் கிஷோரைச் சொல்கிறார்) பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்" என்று தி.மு.கவைக் கடுமையாக விமர்சனம் செய்தார். கடந்த மக்களவை தேர்தலில், அ.ம.மு.கவுக்கு ஏற்பட்ட எதிர்பாராத தோல்வியால், நிலைகுலைந்த கட்சித் தொண்டர்களுக்குப் புத்துணர்வு மற்றும் உத்வேகம் அளிக்கும் விதமாக இந்தப் புதிய அலுவலகத் திறப்பு விழா அமைந்துள்ளது.

அமைதியாக இருந்த தினகரன் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க என்ன காரணம் என்று அவரது ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். ``சென்னை ராயப்பேட்டை பகுதி என்றாலே, அ.தி.மு.க அலுவலகம் என்று கட்சிக்காரர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதை மாற்ற வேண்டும். அங்குள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு செக் வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் இந்த இடத்தில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அத்தோடு கூடிய விரைவில் சின்னம்மா வெளியே வர இருக்கிறார். அவர் வந்ததும் பல மாற்றங்களை நிகழ்த்தப்போகிறோம்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அதன் முன்னோட்டமாகத்தான் நகரம் முதல் கிளைக் கழகம் வரையிலும் உறுப்பினர்கள் சேர்க்கும் படலத்தை ஆரம்பிக்க இருக்கிறோம். தினகரன் அமைதியாக இருந்ததற்குக் காரணம் சின்னம்மாதான். அவர் வெளியே வரும் வரையிலும் யாரைப்பற்றியும் விமர்சனம் செய்யவேண்டாம் என்று மறைமுகக் கட்டளை பிறப்பித்திருந்தார். அதனால் அவர் அமைதியாக இருந்தார். தற்பொழுது வெளியே வருவது உறுதியாகிவிட்டது. இனிமேல்தான் எங்களுடைய ஆட்டத்தைப் பார்ப்பீர்கள்" என்று பொங்கினார்கள்.

அடுத்த கட்டுரைக்கு