Published:Updated:

`டி.டி.வி தினகரன் சிப் என்னிடம் இருக்கிறது; அவ்வளவு சீக்கிரம் விடமாட்டேன்!’ - கொந்தளித்த புகழேந்தி

புகழேந்தி
புகழேந்தி

தினகரன் பயங்கரமான ஆள். டி.டி.வி தினகரனைப் போன்ற வஞ்சகம் மிக்க தலைவனைப் பார்த்தது இல்லை. யாரோ அமைச்சர் சொன்னதுபோல, சிரித்துக்கொண்ட இருப்பார். பின்னர் என்ன செய்வார் என்று தெரியாது.

கோவை மண்டல அ.ம.மு.க நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது, பேசிய புகழேந்தி, ``கழகம், சின்னம், ஆட்சி ஆகியவற்றை மீட்டெடுப்போம் என்று சூளுரைத்து, வாக்குறுதியாக தந்து பின்னர் அவைகளை மறைத்து, புதிய கட்சியை உருவாக்கி, ஒன்றரையாண்டுகள் கடந்து, பதிவு செய்யப்படாமல் முகவரியற்று கிடக்கிறது கட்சி. சசிகலா கொடுத்த துணைப்பொதுச்செயலாளர் பதவியை புறக்கணித்து பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரனால் வெற்றி பெறமுடியவில்லை. புதிய கட்சி தொடங்கியதை கழக உடன்பிறப்புகள், நிர்வாகிகளும், மக்களும் விரும்பவில்லை. இதன் எதிரொலியாகத்தான் தேர்தல் தோல்வி. கட்சியை நடத்தும் பக்குவம் இல்லாததால், எம்.ஜி.ஆர் வளர்த்த கட்சியையும், ஜெயலலிதாவின் ஆட்சியையும் காக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

புகழேந்தி
புகழேந்தி

எந்த எதிர்பார்ப்பும் இன்றி கழகத்துக்காகப் பணியாற்றுபவர்களைக் கண்டுகொள்ளாமல், `வெளியே போனால் நான் ஒன்றும் செய்யமுடியாது' எனக் கூறுவது கண்டிக்கத்தக்கது. கட்சியைப் பதிவு செய்யாமல், எப்படி ஒருவரை கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க முடியும். இது செல்லாது எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். 18 எம்.எல்.ஏ-க்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். உச்சநீதிமன்றம் சென்றிருந்தால், அனைவரும் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருப்பார்கள். அவர்களின் இந்ந நிலைக்கு டி.டி.வி.தினகரனின் தவறான முடிவே காரணம். செந்தில் பாலாஜியைத் தவிர அனைவரும் வேதனையில் உள்ளனர். இடைத்தேர்தலில் தோற்றது அனைவருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மற்றவர்கள் எம்.எல்.ஏ பதவியை இழந்து நிற்கும்போது, டி.டி.வி.தினகரன் மட்டும் தொடர வேண்டுமா. ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ பொறுப்பிலிருந்து அவர் ராஜினாமா செய்ய வேண்டும். டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர் செல்வத்தை தனியாக சந்தித்தது ஏன். இசக்கி சுப்பையாவின் இடத்தில் அலுவலகத்தை நடத்துவது சரியா, இப்படி பல செயல்பாடுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. சின்னத்தைக் காரணம் காட்டி தேர்தலைப் புறக்கணிப்பது நகைப்புக்குரியது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அ.ம.மு.க சகாப்தம் முடிவுக்கு வந்துவிடும். கேரளாவுக்குச் சென்று, நதி நீர் பிரச்னை குறித்து பேசிய முதல்வருக்குப் பாராட்டுகள்” என்று தெரிவித்தார். மேலும், ``எனக்குப் பின்னால் யார் இருக்கிறார் என்று கேட்கிறார். எனக்குப் பின்னால் ஜெயலலிதாதான் இருக்கிறார். சித்தி சித்தி என்று கூறி, ஜெயிலிலிருப்பவரிடம் பணம் வாங்கி, அது ஆறாக ஓடிவிட்டது. அது எவ்வளவு பணம் என்று சொன்னால் அமலாக்கத்துறை மற்றும் தேர்தல் ஆணையம் வந்து நிற்கும்.

புகழேந்தி
புகழேந்தி

டி.டி.வி.தினகரனை அவ்வளவு எளிதாக விட்டுவிடமாட்டேன். டி.டி.வி.தினகரன் குடுமி என்னிடம் இருக்கிறது. எவ்வளவு பணம் வந்தது, எவ்வளவு பணத்தை விரயம் செய்தார் என்பது எனக்குத் தெரியும். நாஞ்சில் சம்பத் மீது 13 வழக்குகள். என் மீது தேசத்துரோக வழக்கு. கூட்டத்துக்கு அனுமதியில்லாமல் பேசியிருக்கிறோம். தேர்தல் செலவு பிரச்னையால் டி.டி.வி மீட்டிங் போடுகிறார். எந்த நேரத்திலும் தினகரன் கட்சியை கலைத்துவிடுவார். தினகரன் பயங்கரமான ஆள். டி.டி.வி தினகரனைப் போன்ற வஞ்சகம் மிக்க தலைவனைப் பார்த்தது இல்லை. யாரோ அமைச்சர் சொன்னதுபோல, சிரித்துக்கொண்ட இருப்பார். பின்னர் என்ன செய்வார் என்று தெரியாது. இன்று சொல்கிறேன் அ.ம.மு.க கட்சியிலிருந்து முக்கால்வாசி பேர் வெளியே போகிறார்கள். நாஞ்சில் சம்பத் சொன்னதுபோல் டி.டி.வி தினகரன் மற்றும் ஜனா இரண்டே பேர்தான் இருக்கப் போகிறார்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு