Election bannerElection banner
Published:Updated:

`தீயசக்தி தி.மு.க; தினகரன் முதலமைச்சர்; உண்மையான அம்மா ஆட்சி!’ - அ.ம.மு.க-வின் தீர்மானங்கள்

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

`அ.ம.மு.க என்னும் ஆயுதம்கொண்டு அ.தி.மு.க-வை மீட்போம்’ என அ.ம.மு.க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க-வின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை முதலமைச்சராக்குவது என்று செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று செய்தியாளார்களிடம் பேசிய சசிகலா, ``அம்மா அவர்களின் உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைந்து, ஆட்சியைப் பிடிப்போம்” என்றார். இந்தநிலையில், இன்று அ.ம.மு.க செயற்குழு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்த கூட்டத்தில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

கவனிக்கத்தக்க தீர்மானங்கள்:

உண்மையான அம்மா ஆட்சி:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்தாலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சிதான் நடைபெறுகிறது என்பதே அ.தி.மு.க-வினரின் கூற்று. ஆனால், இதை மறுக்கும் வகையில் அ.ம.மு.க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. அதில், ``அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியைத் தமிழகத்தில் நிறுவுவதற்கும், கூட்டணி உள்ளிட்ட தேர்தல் முடிவுகளை எடுப்பதற்கும், டி.டி.வி.தினகரனுக்கு அதிகாரம் வழங்குகிறோம்” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தீயசக்திகள்:

அ.ம.மு.க தீர்மான அறிக்கையில், தமிழகத்தின் தீயசக்தி தி.மு.க என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தி.மு.க குறித்த அந்தத் தீர்மானத்தில், ``தீயசக்திகள் அதிகாரத்தை அடைவதற்கும், தமிழகத்தைச் சுரண்டுவதற்கும் வகுக்கும் வியூகங்கள் அனைத்தும் முறியடிக்கப்பட வேண்டும். கடந்தகால தி.மு.க ஆட்சி தமிழகத்துக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்தது என்று எல்லோர்க்கும் தெரியும்.

ஆட்சியில் இல்லாதபோதே, மக்கள்மீது தாக்குதல், வணிகர்கள்மீது தாக்குதல், பெண்ணினத்தைப் பற்றி அவதூறான பேச்சு என தமிழகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலான தீயசக்திக் கூட்டத்திடமிருந்து தமிழகத்தைக் காக்க வேண்டிய பெரும் கடமை அ.ம.மு.க-வுக்கு உண்டு என்பதை உணர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்” என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.

முதலமைச்சர் அரியணையில் தினகரன்:

ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி அமைக்கவும், அ.ம.மு.க என்னும் ஆயுதம்கொண்டு அ.தி.மு.க-வை மீட்கவும், டி.டி.வி.தினகரனை முதலமைச்சர் அரியணையில் அமரவைக்க உழைப்போம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு