சமூகம்
அலசல்
அரசியல்
Published:Updated:

“பதவி சுகத்தை அனுபவிக்கவே எடப்பாடியும் பன்னீரும் ஒன்றிணைந்தார்கள்!”

செந்தமிழன்
பிரீமியம் ஸ்டோரி
News
செந்தமிழன்

- அ.ம.மு.க செந்தமிழன் ‘பளிச்’

‘‘பழைய கதையையெல்லாம் மறந்து, துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்துவோம்’’ என்ற முழக்கத்தோடு கைகோத்திருக்கின்றனர் ஓ.பி.எஸ்-ஸும் டி.டி.வி-யும்! திரும்பிப் பார்க்கவைத்த இந்தச் சந்திப்பு குறித்து அ.ம.மு.க துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜி.செந்தமிழனிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

“நிறைய பேர் கட்சி மாறிவிட்டார்கள். எந்த நம்பிக்கையில் நீங்கள் இன்னும் தினகரனுடன் பயணிக்கிறீர்கள்?”

“நிர்வாகிகள் சிலர் பிற கட்சிகளுக்குச் சென்றுவிட்டாலும் தொண்டர்கள் எண்ணிக்கையும், வாக்குவங்கியும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. வரும் காலங்களில் அ.ம.மு.க பேரியக்கமாக வளர்ந்து, அ.தி.மு.க-வை மீட்டு, மீண்டும் அம்மா வழியில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையில்தான்...”

“பன்னீரின் தர்மயுத்தத்தைத் தொடர்ந்துதான் அ.தி.மு.க பிளவுபட்டு, `அ.ம.மு.க’ என்ற கட்சியே உருவானது. ஆனால், `அவருடன் இணைந்து எடப்பாடியை வீழ்த்துவோம்’ என்று சொல்வது வேடிக்கையாக இல்லையா?”

“அன்றைக்குப் பதவி சுகத்தை அனுபவிக்க எடப்பாடியும் பன்னீரும் ஒன்றிணைந்தார்கள். அது மனித இயல்புதான். ஆனால், தற்போது ஓ.பி.எஸ் செய்த தவறுக்கு வருந்தி, தன் நிலையை உணர்ந்து தினகரனுடன் இணைந்திருக்கிறார். நிச்சயம் துரோகிகளை வீழ்த்துவோம்.”

“கட்சி, சின்னம் என எல்லாவற்றையும் பெற்று பலமாக இருக்கும் எடப்பாடியை எப்படி வீழ்த்துவீர்கள்?”

“எடப்பாடி பலமாக இருக்கிறார் என்பது வெறும் மாயை. அவர் பலவீனமான தலைவர் என்பது தொடர் தோல்வியிலேயே தெரிகிறதே... எல்லோரும் ஒன்றிணைந்தால்தான் பலமாக முடியும். அப்படி நடந்துவிடக் கூடாது என்றுதான் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலமாகக் கட்சி, சின்னம் எல்லாவற்றையும் கொடுத்து அவரை ‘பலவீனமான தலைவராக’ உருவாக்குகிறது டெல்லி. சின்னம்மா மட்டும் கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தால், அ.தி.மு.க தற்போதும் ஆட்சியில் இருந்திருக்கும். முன்பு கட்சியில் பிரிவினையை ஏற்படுத்தினார்கள்... தற்போது சின்னத்தை எடப்பாடியிடம் கொடுத்து, தோல்வியடையச் செய்து, கட்சியை ஒன்றுமில்லாமல் செய்யப் பார்க்கிறார்கள்.”

செந்தமிழன்
செந்தமிழன்

“ ‘உருவாக்குகிறார்கள்... பிரிவினை ஏற்படுத்தினார்கள்’ என்கிறீர்களே யார் அவர்கள்?”

“அ.தி.மு.க வலிமையாகிவிடக் கூடாது என்று நினைப்பது தி.மு.க-வும் பா.ஜ.க-வும்தான் என்பது வெளிப்படையாகத் தெரிந்த விஷயம்தானே?”

“ஆனால், அதே பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தினகரன் சொல்கிறாரே?”

“அப்படிச் சொல்லவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் யார் என்பதுதான் முக்கியம். எனவேதான், தேசியக் கட்சிகளான பா.ஜ.க அல்லது காங்கிரஸ் அல்லது தனித்துப்போட்டி என்று சொல்லியிருக்கிறார். விரைவிலேயே முடிவை அறிவிப்பார்!”