Published:Updated:

குருமூர்த்தி யார்? - கொந்தளிக்கும் சி.ஆர்.சரஸ்வதி

சி.ஆர்.சரஸ்வதி
பிரீமியம் ஸ்டோரி
சி.ஆர்.சரஸ்வதி

அரசியலில் எத்தனையோ துரோகிகளையும் எதிரிகளையும் சந்தித்தும் வீழாமல் எதிர்நடை போட்டுவருபவர்கள் நாங்கள். குருமூர்த்தி போன்றவர்களின் தரம் இவ்வளவுதான்

குருமூர்த்தி யார்? - கொந்தளிக்கும் சி.ஆர்.சரஸ்வதி

அரசியலில் எத்தனையோ துரோகிகளையும் எதிரிகளையும் சந்தித்தும் வீழாமல் எதிர்நடை போட்டுவருபவர்கள் நாங்கள். குருமூர்த்தி போன்றவர்களின் தரம் இவ்வளவுதான்

Published:Updated:
சி.ஆர்.சரஸ்வதி
பிரீமியம் ஸ்டோரி
சி.ஆர்.சரஸ்வதி
2020-ம் ஆண்டு துக்ளக் பத்திரிகை ஆண்டுவிழாவில், ‘சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு’ குறித்து ரஜினிகாந்த் பேசிய பேச்சு சர்ச்சைக்குத் திரி கிள்ளியது. இப்போது மீண்டும் 2021 துக்ளக் ஆண்டுவிழா மேடையில், சசிகலா பற்றிய ஆடிட்டர் குருமூர்த்தியின் தரம் தாழ்ந்த விமர்சனம் தமிழக அரசியல் களத்தில் வெடியை வெடிக்கவைத்துவிட்டது. ஆனாலும், அ.ம.மு.க தரப்பிலோ பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் ‘கொள்ளு பட்டாசு’ வெடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில்தான், அ.ம.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் பேசினோம்...

“ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு..?”

(கேள்வியை முடிக்கும் முன்பே பாய்கிறார்...) “சசிகலா குறித்துப் பேச குருமூர்த்தி யார்... முதலில் இவர் அரசியலில் இருக்கிறாரா... அவருக்கு எங்களைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் என்ன? மறைந்த பத்திரிகையாளர் சோ, கடந்த காலங்களில் நிறைய அரசியல் பேசியிருக்கிறார். அவரது பேச்சில் நக்கல், நையாண்டி இருக்கும். தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்தி அவர் பேசியதில்லை. அவரது பண்பில் பாதியாவது இவருக்கு வேண்டாமா?!”

“சசிகலா குறித்த பேச்சுக்குப் பிறகும், ட்விட்டரிலும் ‘மன்னார்குடி மாஃபியா’ என்று விமர்சித்திருக்கிறாரே?’’

“அவருக்கு, தான் மட்டுமே ‘அறிவு ஜீவி’ என்று நினைப்பு. பொதுவாக ஒருவர் ‘நான்தான் அறிவாளி; நானே பிதாமகன்’ என்றெல்லாம் தன்னைத் தானே சொல்லிக்கொள்ளக் கூடாது. மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும். அவர் குறிப்பிட்டிருக்கும் அந்தத் தரம் தாழ்ந்த வார்த்தைகளிலிருந்தே அவர் எப்படிப்பட்ட குரூரமான, வக்கிர புத்திகொண்டவர் என்பது தெளிவாகத் தெரிகிறது.’’

“ஆனால், அவரது பேச்சுக்கு அ.ம.மு.க தரப்பிலிருந்தும் பெரிதாக எதிர்ப்பு இல்லையே... ஏதோ பூசி மெழுகியது போன்று தினகரன் பதிவிட்டிருக்கிறாரே..?”

“அரசியலில் எத்தனையோ துரோகிகளையும் எதிரிகளையும் சந்தித்தும் வீழாமல் எதிர்நடை போட்டுவருபவர்கள் நாங்கள். குருமூர்த்தி போன்றவர்களின் தரம் இவ்வளவுதான். இந்தப் பேச்சுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து பதில் சொல்ல வேண்டாம் என்ற எண்ணத்தி்ல் தான் எங்கள் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் இருந்தார். ஆனாலும், கட்சியிலுள்ள நாங்கள் எல்லோரும் கேட்டுக்கொண்ட பிறகே, ட்விட்டர் வழியே தனது எதிர்ப்பைத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்.’’

குருமூர்த்தி யார்? - கொந்தளிக்கும் சி.ஆர்.சரஸ்வதி

“அப்படித் தெரியவில்லையே... சமீபத்தில் சசிகலா பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவித்த உங்கள் தலைமை, குருமூர்த்தி விவகாரத்தில் பயந்துவிட்டதா?’’

“எங்களுக்கு எந்த பயமும் கிடையாது. தெருவில் நடந்து செல்லும்போது அசிங்கத்தைக் கண்டால் காலில் பட்டுவிடாமல் தாண்டிச் செல்கிறோம் அல்லவா... அப்படித்தான் இதுவும். தவிர, சின்னம்மா வரவை எதிர்பார்த்து மகிழ்ச்சியுடன் காத்திருக்கும் நேரத்தில், குருமூர்த்தி போன்றவர்களின் தரமற்ற வார்த்தைகளைப் பொருட்படுத்த வேண்டாம் என்று நாகரிகத்துடன் ஒதுங்கிச் செல்கிறோம். அ.ம.மு.க-வின் நேரடி எதிர்க்கட்சி தி.மு.க. அந்தவகையில், அரசியல்ரீதியாக எங்களை எதிர்த்து நிற்பவர்களின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டியது எங்கள் கடமை. அதனால், உதயநிதியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தோம். இன்னொரு விஷயம்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் என அதிகாரத்தில் இருப்பவர்களையே, கடந்த காலங்களில் தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார் குருமூர்த்தி. அதற்கு அ.தி.மு.க-விலிருந்து என்ன பதிலடி கொடுத்தார்கள்?”

“அதிகாரத்தில் இருப்பவர்களே குருமூர்த்திக்கு எதிராகப் பேசத் தயங்குவதால், அ.ம.மு.க-வும் பயப்படுகிறது என்கிறீர்களா?’’

“அப்படி நாங்கள் பயந்திருந்தால் ட்விட்டரில் பதிலடி கொடுத்திருக்க மாட்டோமே. குருமூர்த்தி யார் என்றே தெரியவில்லை... அவருக்குக் கட்சியும் இல்லை, பதவியும் இல்லை, அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை!”

“அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘அ.தி.மு.க - அ.ம.மு.க இணையும்’ என்கிறார். ‘தி.மு.க-வை வீழ்த்த அ.தி.மு.க-வில் சசிகலாவைச் சேர்க்க வேண்டும்’ என்கிறார் குருமூர்த்தி. என்னதான் நடக்கிறது?’’

“ராஜேந்திர பாலாஜி சொல்லியிருப்பது அவரது கருத்து. மற்றபடி எந்தக் கட்சி, எந்தக் கட்சியுடன் இணையும், யாருடன் கூட்டணி என்பதையெல்லாம் எங்கள் சின்னம்மா சசிகலாவும் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும்தான் தீர்மானிப்பார்கள்.’’

“சமீபத்தில், ‘நான் சிறையிலிருந்து வெளிவருவதைத் தடுக்கிற வேலைகளைச் சிலர் செய்துவருகிறார்கள்’ என்று சசிகலா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது யாரைப் பற்றி..?’’

“அதைப் பற்றி சிறையிலிருந்து வெளிவந்ததும் சின்னம்மாதான் அறிவிப்பார். யாரைப் பற்றி அவர் சொல்லியிருந்தார், அரசியல்ரீதியாக அவரது நகர்வு என்ன என்பதையெல்லாம் அவரே சொல்வார்... இன்னும் சில நாள்கள்தான், பொறுங்கள்!”