தினகரன் கட்சியை வழிநடத்தத் தெரியாமல் தவறாக வழி நடத்துவதால்தான் அக்கட்சித் தொண்டர்கள் அ.தி.மு.க-வில் இணைந்து வருகிறார்கள்.`அ.தி.மு.க-வை அழிக்க நினைத்தவர்கள் இன்று அழிந்துகொண்டிருக்கிறார்கள்" எனத் தினகரனுக்கு எதிராகக் காட்டமாகப் பேசினார் அரசின் தலைமைக் கொறடா ராஜேந்திரன்.

அரியலூர் நகரில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில், அ.ம.மு.க கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணையும் விழா அரசு தலைமைக் கொறடாவும் மாவட்டச் செயலாளருமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட அ.ம.மு.க தொண்டர்கள் தங்களை அ.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்தவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் வரவேற்றுப் பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அவர் பேசும்போது, ``அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன் கட்சியைத் தவறாக வழி நடத்துவதால்தான் அக்கட்சியின் தொண்டர்கள் விலகி அ.தி.மு.க-வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அவர்களை வரவேற்கிறேன். நாங்கள்தான் முன்பே சொல்லியிருந்தோம். தேர்தலுக்குப் பிறகு அ.ம.மு.க என்ற கட்சியே இருக்காது என்று. இப்போது என்ன நடக்கிறது என்று உங்களுக்கே தெரியும். அ.தி.மு.க என்ற சாம்ராஜ்ஜியத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துக்கூட பார்க்கமுடியாது. மிக வலுவான கட்சியாக அ.தி.மு.க மாறிக்கொண்டிருக்கிறது. தினகரன் எதாவது ஒரு கட்சியின் பதவிகளிலிருந்தால்தானே கட்சியை எப்படி வழிநடத்துவது என்று தெரியும். அவருக்கு ஒன்றுமே தெரியாது பாவம். இன்னும் கொஞ்ச நாள்களில் பாருங்கள் அங்குள்ள முக்கியத் தலைவர்கள் எங்களிடம் வரப்போகிறார்கள்.

கட்சியின் வளர்ச்சிக்காக உழைப்பவர்களுக்குக் கண்டிப்பாகப் பதவி தானாகத் தேடி வரும். எந்தவித தொய்வும் இல்லாமல் கட்சிப் பணியை ஆற்ற வேண்டும். ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக அண்ணன் எடப்பாடி சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது" என்று பேசினார். நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ராம ஜெயலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.