சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தி.மு.க அரசு தோல்வியடைந்திருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தமிழ்நாட்டில் நல்லாட்சி தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளும், மக்கள் துயரத்தின் தொடர் ஆண்டுகளாகத்தான் இருந்திருக்கின்றன. இல்லாததையும், இயலாததையும் சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க, மக்கள் விரோத செயல்பாடுகளைத்தான் முழுவீச்சில் முன்னெடுத்து வருகிறது. அதில் சிலவற்றை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

நீட் தேர்வு ரத்து என்னவானது?
நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் ரத்து செய்வோம் என்றும், அந்த வித்தை தங்களுக்குத் தெரியும் என்றும் சொன்னார்கள். இரண்டு ஆண்டுகள் கடந்தும் அதற்கான முன்னெடுப்புகூட முழுமை பெறாத நிலை இருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்தத் தமிழகமும் மீனவர்களும், சுற்றுச்சூழலியலாளர்களும் தெரிவித்த எதிர்ப்பை புறந்தள்ளி, ரூ.80 கோடியில் கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்காக மத்திய அரசிடமிருந்து மாயாஜாலமாக அனுமதியைப் பெற்றது எப்படி... ஒன்றிய அரசு, ஒன்றிய அரசு என்று சொல்லிக்கொண்டு அவர்களுடன் ஒன்றி இந்த அனுமதியைப் பெற்றார்களா என மக்கள் கேட்கிறார்கள்.
மீனவர்களின் துயரம்:
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், கைதுசெய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகவே நீடித்துவருகிறது. ஆனால், இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்லிக்கொண்டு வெற்று பெருமை பேசுவதால் என்ன பயன்... இதைத் தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளையோ, அழுத்தத்தையோ மத்திய அரசிடம் தி.மு.க தெரிவிக்கவில்லை. வெறும் கடிதம் மட்டும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கச்சத்தீவை தாரைவார்த்தது முதல் இன்றுவரை தொடரும் மீனவர்களின் துயரத்துக்குக் காரணம் தி.மு.க அரசுதான்.

கேள்விக்குறியாகும் சட்டம் - ஒழுங்கு:
காவல் நிலையத்துக்குள்ளேயே தி.மு.க-வினர் தங்களுக்குள் நடத்திய தாக்குதல், கிராம நிர்வாக அலுவலகம், நீதிமன்ற வாயிலில் நடைபெற்ற படுகொலைகள், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள், சங்கிலி பறிப்புச் சம்பவங்கள், கோயில் விழாக்களில் தீண்டாமை, குடிநீரில் தீண்டாமை, திரையரங்குகளில் தீண்டாமை, காவல்துறைக்கே பாதுகாப்பற்ற சூழல், பெண் காவலருக்கு எதிராக ஆளுங்கட்சி தரப்பினரால் ஏற்பட்ட பாலியல் சீண்டல் என அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் பல நடந்தவண்ணம் இருக்கின்றன. தலைதூக்கும் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டுவரவேண்டிய அவசியத்தை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கான அவசியத்தை தி.மு.க அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.
கோடநாடு கொலை, கொள்ளை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டக் குழுவினர்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் போன்று தமிழகத்தை உலுக்கிய குற்றங்களில் சட்டரீதியான தண்டனை பெற்றுத்தரும் முயற்சியில் நத்தையின் வேகத்தைக்கூட தி.மு.க அரசிடம் காணமுடியவில்லை. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்மமாக மரணமடைந்த சம்பவத்தை இந்த அரசு கையாண்ட விதமும், விழுப்புரம் அன்பு ஜோதி இல்லத்தில் நடைபெற்றதாகச் சொல்லப்பட்ட சம்பவத்தில்கூட விசாரணை அமைப்புகள் முறையாக ஆதாரங்களை முன்னிறுத்தவில்லையென்று நீதிமன்றமே கூறியது.

ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள், அதிகரித்து வரும் போதைப்பொருள்களின் புழக்கம் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. புள்ளிவிவரங்களைச் சொல்லியும், கடந்த ஆட்சியோடு ஒப்பிட்டுப் பேசியும் முதலமைச்சர் பெருமிதம் கொள்வதால் என்ன பயன்... தி.மு.க அரசு, சட்டம்-ஒழுங்கைக் காப்பதில் தங்களின் அரைகுறை நிர்வாகத்தை நியாயப்படுத்தவும் அதில் திருப்தியடைந்து கொள்ளவும்தான் புள்ளிவிவரங்கள் பயன்படுமே தவிர, தமிழகத்துக்கு அவை கரும்புள்ளிகள்தான்.
மக்கள் தலையில் சுமை:
ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே சொத்துவரி உயர்த்தப்பட்டது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது; அதேநேரத்தில் நுகர்வோர்களுக்கு சுமையைக் குறைக்க மாதந்தோறும் மின் கட்டணம் வசூல் எனச் சொன்ன வாக்குறுதி என்ன ஆயிற்று... ஆரஞ்சு பால் பாக்கெட், பால்பொருள்களின் விலை ஒரே வருடத்தில் மூன்று முறை உயர்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல் விலைகுறைப்பு, காஸ் சிலிண்டருக்கு மானியம் ஆகிய வாக்குறுதிகள் என்னவானது... பத்திரப்பதிவுக் கட்டணம் குறைப்பு; அதேநேரம் நில வழிகாட்டு மதிப்பை மும்மடங்கு உயர்த்தியது உள்ளிட்ட தி.மு.க-வின் வஞ்சக தந்திரத்தை மக்கள் முழுமையாக அறிந்திருக்கின்றனர்.

அதை அவர்கள் மன்னிக்க மாட்டார்கள். அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 என்ற அறிவிப்பு தேர்தல் நேரத்தில் வழங்கிவிட்டு, தற்போது தகுதியுடைவர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் என்று ஏமாற்றியிருக்கிறது தி.மு.க அரசு.
அமைச்சர்களின் ஆணவப்போக்கு!
அரசின் தூதர்களாக, மக்களின் சேவகர்களாக திகழவேண்டிய அமைச்சர்கள், ஆணவமாக மக்களை நடத்திய விதத்தைக் கண்டு ஒட்டுமொத்தத் தமிழகமும் அதிர்ச்சிக்குள்ளானது. அரசின் திட்டங்களினால் பயனடையும் மகளிரை ஏளனமாகப் பேசுவது; குறைகளைத் தெரிவிக்க வரும் மக்களிடம் பாகுபாடு பார்ப்பது; பொதுமேடையில் சாதிப் பெயரைப் பயன்படுத்துவது; அடிப்பது; கல்லெறிவது; அரசு அதிகாரிகளை மிரட்டுவது; அச்சுறுத்துவது எனக் கட்டுப்பாடு இல்லாமலும், தாங்கள் என்ன பொறுப்பில் இருக்கிறோம் என்பதை உணராமலும் செயல்படுகிறார்கள்.
அமைச்சர்களால் `தூக்கமில்லாமல் தவிக்கிறேன்' என்று முதலமைச்சர் ஊடகங்களின் முன் புலம்பியதற்குப் பின்னாலும், இந்த அமைச்சர்களின் ஆணவப்போக்கு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. மக்களிடம் அன்பாகவும், ஆணவ அமைச்சர்களிடம் கடுமையாகவும் நடந்துகொள்ள வேண்டிய முதலமைச்சர், அதற்கு நேர் மாறாக நடந்துகொள்வது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது.

மக்கள் நல்வாழ்வு துறையில் குமுறல்கள்:
ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை மருந்துகளுக்குக்கூட தட்டுப்பாடு; இதை அமைச்சரிடம் தெரிவிக்கும் மருத்துவப் பணியாளர்கள் உடனடி இடமாற்றம். இவை மட்டுமா, அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். கொரோனா காலத்தில் தங்கள் உயிரை துச்சமென மதித்து பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை என்ற வாக்குறுதிக்கு மாறாக தற்போது முன்னுரிமையுமில்லை, வேலையுமில்லை என்கிறது தி.மு.க அரசு.
ஏமாற்றப்படும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள்:
தேர்தல் அறிக்கையில் சொன்ன அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான பழைய ஊதிய ஓய்வூதிய திட்டம் என்ன ஆனது... பழனிசாமி ஆட்சியால் கடன் சுமை அதிகரித்திருக்கிறது எனச் சொல்லி ஆட்சிக்கு வந்த இவர்களுக்கு, இது நடைமுறைக்கு சாத்தியமா, சாத்தியமில்லையா என்பதுகூட தெரியாதா... வருடத்துக்கு ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, ஏற்கெனவே நிரப்பப்பட்ட அளவுக்குக்கூட பணியிடங்களை நிரப்பாமல், அரசுப் பணியையே கனவாக கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது இந்த விடியா அரசு. தேர்தல் நேரத்தில் மட்டும் தேன் தடவிய வார்த்தைகளை வழங்கிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அவர்களை, குமுறும் மனநிலையோடு வீதிக்கு வந்து போராடவைத்திருக்கிறது.

வேதனையில் விவசாயிகள்:
நெல் கொள்முதல் விலை 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை; இது தவிர, நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் நெல்லை கொண்டு வந்தவுடன் கொள்முதல் செய்யப்படும் என்ற வாக்குறுதியும் காற்றிலே பறந்துவிட்டது. அனைத்து விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி என்று மக்கள் மன்றத்தின் முன் பொய் பேசினார் அவசர அமைச்சர்; ஆனால், ஐந்து சவரன் நகை வைத்தவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்து விவசாயிகளை ஏமாற்றியது தி.மு.க அரசு.

அழிக்கப்படும் விளைநிலங்கள், ஏரி, குளங்கள்:
வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் எதிர்ப்பையும் மீறி விவசாய நிலங்களையும், நீர் நிலைகளையும் அழித்து விமான நிலையம் அமைப்பது, சிப்காட்டுக்கு கொடுப்பது ஆகியவற்றின் மூலம் உணவு உற்பத்தியை அழித்து என்ன வளர்ச்சியைக் காணப்போகிறோம்... காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 280 நாள்களுக்கும் மேலாகப் போராடிவரும் மக்கள், விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் கொண்டுவரக் கூடாது என்று ஆறாவது முறையாக கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், அதற்கு முதலமைச்சர் செவிசாய்க்க மறுப்பது ஏன்?
இந்த ரணம் ஆறுவதற்குள், நீர் நிலைகளைக்கொண்ட 100 ஹெக்டேர் நிலங்களைத் தொழிற்துறைத் திட்டங்களுக்கு வழங்க வகைசெய்யும் புதிய சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் தந்திருக்கிறது. விவசாயம் என்பது நம்முடைய வாழ்க்கை முறை என்பதை தி.மு.க அரசுக்கு நான் நினைவுபடுத்துகிறேன். சமச்சீரான வளர்ச்சியை முன்னெடுப்பதில் தி.மு.க அரசு தடுமாறி வருவது கண்கூடாய் தெரிகிறது. மொத்தத்தில் தமிழகத்தில் நீர் நிலங்களையும், விவசாயத்தையும் அழிக்க முற்படும் அரசாகவே தி.மு.க அரசு இருக்கிறது.

சிந்திக்க மறுக்கும் முதல்வர்:
பல தலைவர்களால் போராடி, தொழிலாளர்கள் நலனுக்காக பெற்றுத்தந்த 8 மணி நேர வேலை என்பதை உதாசீனப்படுத்தும் வகையில் 12 மணி நேர வேலை சட்டத்தால், முதலீடும் வரும்; வேலைவாய்ப்பும் பெருகும் என்று சொல்லி, எதிர்ப்பு வந்தவுடன் சட்ட திருத்தத்தைத் திரும்பப் பெற்றது. ஆனாலும், தொழிலாளர்களின் உரிமையின் அடிமடியில் கைவைக்க இந்த அரசு ஆயத்தமானது பேரபாயத்தின் அறிகுறி. திருமண மண்டபங்கள், அரங்குகளில் நடைபெறும் விழாக்களில் மது பரிமாற அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுவிட்டு பின்னர் அதைத் திரும்பப் பெறுவது போன்ற செயல்பாடுகள், இந்த அரசின் முன்யோசனையற்ற நடவடிக்கைகளின் வெளிப்பாடுதான்.
தானியங்கி இயந்திரம் மூலம் மது விநியோகம் போன்ற விசித்திரமான சிந்தனைகள் இந்த அரசுக்கு எப்படி, யாரால், ஏன் போதிக்கப்படுகின்றன என்பது தெரியவில்லை. இதேபோல எத்தனையோ அறிவிப்புகளை முன்வைப்பதும், பின்னர் திரும்பப் பெறுவதுமே தி.மு.க அரசின் இரண்டு ஆண்டுக்கால பெருஞ்சாதனை என்று அவர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

நேர்மையற்ற நிர்வாகம்:
கடந்தகால ஆட்சியை ஊழல் ஆட்சி என்று வர்ணித்து, தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் தி.மு.க அரசு, ஊழல்வாதிகள்மீது இன்னும் நடவடிக்கை எடுக்காமல் பின்கட்டு வழியாக சமரசம் செய்துகொண்டு, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த துரோகிகள் சுதந்திரமாக உலவ வழிவகுத்திருக்கிறார்களோ என்றே எண்ணத்தோன்றுகிறது.
தற்போதும் அமைச்சர்கள்மீது சொல்லப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் மலைக்க வைக்கின்றன. அதிகாரத்துக்கு நெருக்கமானவர்களின் குடும்பத்தினர் தமிழகத்தில் ரியல் எஸ்டேட், சினிமா உள்ளிட்ட துறைகளில் வணிக அறத்துக்கு மாறாக ஏகபோக ஆதிக்கம் செலுத்தி கோடிகளைக் குவித்ததாகத் தகவல்கள் வரும் நிலையில், முதல்வரின் மகனும், மருமகனும் 30,000 கோடி ரூபாய் சொத்துகளைக் குவித்திருக்கின்றனர் என்று நிதியமைச்சர் புலம்பியதாக வெளியான ஆடியோவைக் கேட்டு மக்கள் அதிச்சியடைந்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இனி மிச்சமிருக்கும் காலங்களிலும் இந்த அரசு மக்கள் நலனில் கவனம் கொள்ளும் என்ற நம்பிக்கையோ, அறிகுறியோ தென்படவே இல்லை. இப்படி மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் தி.மு.க-வுக்கு வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்பது உறுதி!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.