Published:Updated:

நீலகிரியின் புதிய ஆட்சியர்: அம்ரித் ஐ.ஏ.எஸ் - எதிர்கொள்ளவேண்டிய சவால்கள் என்னென்ன?

இன்னசென்ட் திவ்யா இருக்கும் வரை காரியம் சாதிக்க முடியாது என்பதாலேயே பல தரப்பு அழுத்தத்தால் அவரை மாற்றிவிட்டு, அந்த இடத்துக்கு அம்ரித் கொண்டுவரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தின் 114-வது ஆட்சியராக அம்ரித் என்ற இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி பொறுப்பேற்றிருக்கிறார். ஆட்சியர் மாற்றம் என்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தற்போது நடந்திருக்கும் இந்த மாற்றம் மிகவும் கவனிக்கத்தக்க நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

அம்ரித் ஐ.ஏ.எஸ்
அம்ரித் ஐ.ஏ.எஸ்

நீலகிரி மாவட்டத்தின் ஐந்தாவது பெண் ஆட்சியராக, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் பொறுப்பேற்றுக்கொண்ட இன்னசென்ட் திவ்யா, கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியராகப் பொறுப்பு வகித்துவந்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துவந்த அதே வேளையில், விளிம்புநிலை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் நடந்துவந்தார்.

`தென்னகத்தின் தண்ணீர் தொட்டி’ என்று அழைக்கப்படும் இந்த மலையில் கட்டுப்பாடின்றி துளையிட்டு நீரை உறிஞ்சும் ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கத் தடைவிதித்தது முதல் கடைசியாக யானைகள் வழித்தடத்தை மீட்க அதிகாரத்துக்கு வளைந்து கொடுக்காமல் உறுதியாக எதிர்த்துப் போராடியது வரை அவர் செய்த சாதனைகள் ஏராளம். பாரபட்சமற்ற நடவடிக்கைகளால் மலையகத்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்த அதே சமயம், அதிகாரமிக்கவர்களின் பகையையும் சம்பாதித்துக்கொண்டார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அவரை மாவட்ட ஆட்சியர் பணியிலிருந்து விடுவித்திருக்கிறது.

இன்னசென்ட் திவ்யா
இன்னசென்ட் திவ்யா

நீலகிரியின் அடுத்த ஆட்சியர் யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்த நிலையில், அம்ரித் ஐ.ஏ.எஸ் தற்போது பொறுப்பேற்றிருக்கிறார். இன்னசன்ட் திவ்யா இருக்கும் வரை காரியம் சாதிக்க முடியாது என்பதாலேயே பல தரப்பு அழுத்தத்தால் அவரை மாற்றி அந்த இடத்துக்கு அம்ரித்தைக் கொண்டுவந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அம்ரித்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இனி அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் கவனிக்கப்படும் என்பதால், இந்த மாவட்டத்தில் இன்றளவும் தீர்க்கப்படாத முக்கியப் பிரச்னைகளுக்கு தீர்வுகாண முயற்சி மேற்கொள்வதோடு, மலைகளின் அரசியான நீலகிரியின் இயற்கை எழிலையும், அதன் மக்களையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அம்ரித் ஐ.ஏ.எஸ்
அம்ரித் ஐ.ஏ.எஸ்

தற்போதைய மிக முக்கியப் பிரச்னையாக இருக்கும் யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பில் பாரபட்சமின்றி உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆளுங்கட்சி அதிகாரம், பண பலம் இவற்றை எதிர்த்தே யானைகள் வழித்தட மீட்புப் பாதையில் இவர் பயணிக்கவேண்டியிருக்கும் என்கிறார்கள் மாவட்ட அதிகாரிகள்.

அதுமட்டுமின்றி நீலகிரியில் புற்றீசல்போல் முளைத்து வளரும் கான்க்ரீட் காடுகளை வரைமுறைப்படுத்துவது, கடுமையான பிளாஸ்டிக் தடையைத் தொடர்வது, பழங்குடி மக்களின் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது, காட்டேஜ் மற்றும் ரிசார்ட்டுகளின் அனுமதிகளை வரையறை செய்வது, தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டுவது, மலைக் காய்கறிகளுக்கு அளவுக்கு அதிகமாகக் கொட்டப்படும் ரசாயனங்களைக் குறைப்பது, விளிம்புநிலை மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வது, காடழிப்பைத் தடுத்து வன விரிவாக்கத்துக்கு வித்திடுவது போன்ற முக்கிய கடமைகளும் அவர் முன் இருப்பதால், அவர்மீது நம்பிக்கை வைத்துக் காத்திருக்கிறார்கள் நீலகிரி மக்கள்.

மிரட்டப்படுகிறாரா நீலகிரி கலெக்டர்? - நெருக்கும் ஆளுங்கட்சியினர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு